பஞ்சப்பாட்டு





மேனேஜிங் டைரக்டர் மகாதேவனைப் பார்க்க வந்திருந்தார் தொழிற்சங்கத் தலைவர் சந்திரன். அறைக்குள் வந்த அவரை உட்காரக்கூடச் சொல்லவில்லை மகாதேவன். சந்திரனும் அதை எதிர்பார்க்காமல் நின்றவாறே சங்கத்தின் கோரிக்கையை விளக்கிச் சொன்னார். ‘‘இப்ப விக்கிற விலைவாசியில சம்பளம் சுத்தமா கட்டுப்படியாகலை சார். குடும்பத்தை நடத்தவே ரொம்ப சிரமப்படறோம். நீங்க பெரிய மனுசு பண்ணி இந்த மாசத்துக்குள்ள சம்பள உயர்வு அறிவிக்கணும்..!’’

பதிலேதும் சொல்லாமல் வெறுப்புடன் தலையசைத்தார் மகாதேவன். சந்திரன் வெளியேறியதும் அவரின் எரிச்சல் வெளிப்பட்டது.‘‘ச்சே... இவனுங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும், ‘பத்தலை... பத்தலை...’ங்கற பஞ்சப்பாட்டுதான்.’’அதே நேரம் பி.ஏ. பாஸ்கர் பதட்டத்தோடு உள்ளே நுழைந்தான்...

‘‘சார், நாம தொடர்ச்சியா மெட்டீரியல் சப்ளை பண்ற மாலினி குரூப் கம்பெனியில இருந்து போன்!’’‘‘ம்... என்ன சொல்றாங்க?’’‘‘நம்ம தயாரிப்புகளுக்கு அவங்க வழக்கமா கொடுக்குற விலை கட்டுப்படியாகலைன்னு விலையை உயர்த்திப் போடச் சொன்னீங்கல்ல...’’
‘‘ஆமாம்...’’

‘‘ஒரு வருஷத்துக்குள்ள மூணு முறை விலையை உயர்த்திட்டீங்க. எப்பப் பாரு ‘பத்தலை... பத்தலை...ங்கற பஞ்சப்பாட்டுதானா’ன்னு அந்த குரூப் முதலாளி கேக்கறார்.’’
பதிலொன்றும் தோன்றாமல் மகாதேவன் திகைத்து நின்றார்.