என்னவோ இருக்கு! : கடிதங்கள்

‘நமக்கானதை ஆண்டவன் எப்போதோ எழுதி வச்சிட்டான். அதுதான் கிடைக்கும்’ என்கிற சாயா சிங்கின் தத்துவ மழை செம சர்ப்ரைஸ்! இந்தத் தெளிவுதான் அவரை குத்துப் பாட்டுக்கு ஓகே சொல்ல வைத்திருக்கிறதோ! * பேச்சியம்மாள் மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
‘ஸ்கூபா டைவிங்’ செய்து ஆழ்கடலில் மீன்கள், டால்பின்களோடு நீந்திய த்ரிஷா, யார் மனதுக்குள் நீந்துகிறார் என்பதை மட்டும் சொல்ல மாட்டேங்கறாரே! * த்ரிஷாதாசன், புதுச்சேரி.
நம்பிக்கைதான் எதிர்காலத்துக்கு மூல தனம்! ஆணாதிக்கம் மிகுந்த தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் மத்தியில் ‘வல்லின’மாகக் களமிறங்கும் பார்வதிக்கு எங்கள் வாழ்த்துகள்! * முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.
எல்லாவற்றுக்கும் நறுக் நறுக் என்று பதில் தரும் ஆர்யா, ‘நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா?’ என்ற கேள்விக்கு மட்டும் சுத்தி வளைச்சி மழுப்பலா பதில் தந்திருக்கிறாரே... இதுல என்னவோ இருக்கு ‘பார்யா’! * எஸ்.மலையப்பன், மதுரை.
ஊடகங்களின் ராஜ உபசாரத்தில் திக்குமுக்காடும் ‘பரதேசி’யில் சிறுசிறு குறைகளையும் சுட்டிக் காட்டி, மண்ணையும் அதன் மக்களையும் பேசும் மகத்தான படமென்று பாராட்டியமைக்கு பாராட்டுக்கள்! * தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
அப்பாடா, ‘விஸ்வரூபம் 2’வின் கதையை எந்தப் பிரச்னையும் இல்லாம எங்களுக்கு ரிலீஸ் பண்ணிட்டீங்க. படம் எப்படி ரிலீஸ் ஆகுமோ! * இரா.ரமேஷ்பாபு, விருத்தாசலம்* 1.
‘தோசை சுடவும் வந்தாச்சு மெஷின்!’ * படித்தபோது முழுமையாக மகிழ முடியவில்லை. ‘தோசையம்மா தோசை... அம்மா சுட்ட தோசை...’ என்பது போய் இனி மெஷின் சுட்ட தோசையாகிவிடும். இது நல்லதா என்ன? * இ.பசரியா, திருச்சி.
இந்த நவீன யுகத்தில் இன்னும் கற்கால வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கும் ‘தேன்கூடு’ கிராமத்தினரின் நிலை, கலங்க வைக்கிறது. இதெல்லாம் அரசாங்கத்தின் பார்வையில் விழுந்தால் சரி! * எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
‘தமிழகப் போராட்டங்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதாக நம்பிவிடக் கூடாது’ என்ற மனுஷ்ய புத்திரனின் கூற்று, நகைச்சுவை பூசிய நிஜம்! தலைப்புச் செய்திகளுக்கேற்ப மாறுவது தமிழர்களுக்குப் புதிதா என்ன? * எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.
உலகப் புகழ் கூகுள் நிறுவனத்தில் ‘ஆண்ட்ராய்டு’ பிரிவுக்கு சுந்தர் பிச்சை என்ற தமிழர், தலைவரானது நமக்கெல்லாம் பெருமிதச் செய்தி. அவரைப் பார்த்து, ‘தமிழா... தமிழா... நாளை நம் நாளே’ என்றே பாடத் தோன்றியது! * கே.மணிமேகலை, வந்தவாசி.
(இதழுடன் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும்.)
|