எழுத்தாளர் திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் என்றாகி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம். ஃபாரின் ரிட்டர்ன் கரணுக்கும் நாயகி மித்ராவுக்கும் காதல் தோன்றி, கல்யாணத்தில் முடிவதில் சிக்கல் எதுவுமில்லை. எனினும், தான் அனாதைச் சிறுவனாக நின்ற காலத்தில் அன்பும் அரவணைப்பும் கொடுத்து வளர்த்த பள்ளி ஆசிரியர் ராஜேஷைக் கண்டுபிடித்து அவரது தலைமையில் திருமணம் நடக்க ஆசைப்படுகிறார். ஆசிரியரைத் தேடி அலையும் கரண், ஒருநாள் ராஜேஷை ரவுடி கும்பல் கொலை செய்யத் துரத்துவதைப் பார்த்து அதிர்கிறார். கரணின் ஆசை நிறைவேறுகிறதா? போலீஸ் என்ன செய்தது? ஜெயித்தது யார் என்பதற்கான விடையே கிளைமாக்ஸ்.
மித்ராவுடன் காதல், நண்பர்களுடன் காமெடி என ஜாலியாக சுற்றும் கரண், தனது ஆசிரியருக்காக ஆக்ஷன் அவதாரம் எடுப்பது அதிரடி. தான் படிப்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்த மாணவர்கள் சாதனையாளர்களாக இருப்பதில் பெருமைப்படும்போதும், தன் சொந்த மகன் ரவுடியானதை நினைத்து வேதனைப்படும்போதும் உருக வைக்கிறார் ராஜேஷ். ஆசிரியர் - மாணவர் புரிதலைக் காட்டியிருப்பது நல்ல விஷயம்.

ரியல் எஸ்டேட் மோசடி மன்னர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பி ஏமாறும் விவேக் வரும் கட்டங்கள், கலகல காமெடி. தஞ்சை நகரப் பகுதியை கதைக்களமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். சூட்டிகையான இளைஞராகப் பொருந்துகிறார் கரண். அவருக்கும் மித்ராவுக்குமான காதல், உற்சாக ரகம். இதே ரசனையைப் படம் முழுக்க தூவியிருந்தால் ‘கந்தா’ இன்னும் களை கட்டியிருக்கும்.
- குங்குமம்
விமர்சனக் குழு