ஞாபகம் : எஸ்.சுமதி





உள்ளூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, குழந்தைகளுக்கு ஒரு வாரம் பள்ளி விடுமுறை.
‘‘நீங்க ரெண்டு பேரும்தான் எந்நேரமும் வேலை பிஸியிலயே இருக்கீங்க... குழந்தைகளையாவது எங்ககிட்ட விடலாமில்ல’’ - ஊரிலிருந்து அப்பா பேசினார். தட்ட முடியவில்லை.

முதல் வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படிக்கும் துறுதுறு பிள்ளைகளை அவர்களால் கவனித்துக்கொள்ள முடியுமா?
‘‘தாத்தா, பாட்டிக்கு தொந்தரவு குடுக்காம, சமர்த்தா இருக்கணும்!’’ என்று கண்டிஷனாகச் சொல்லித்தான் அவர்களை ஊரில் கொண்டு போய் விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர்களை அழைத்து வரப் போனால், வீடு அலங்கோலமாகக் கிடந்தது. சுவற்றில், கதவில் எல்லாம் வண்ண வண்ண சாக்பீஸ் கீறல்கள்... விளையாட்டு பொம்மைகள் வீடெங்கும் சிதறிக் கிடந்தன.
‘‘ஒழுக்கமா நடந்துக்கணும்னு சொல்லித்தானே விட்டுப் போனேன்... முதல்ல சாக்பீஸ் எழுத்தெல்லாம் அழிங்க. பொம்மைகளை கரெக்டா அடுக்குங்க!’’ - பிள்ளைகளிடம் இரைந்தேன்.

‘‘ஏண்டா குழந்தைங்களைத் திட்டறே? எதையும் அழிக்க வேணாம்... அடுக்க வேணாம். எங்களுக்கும் பேரக்குழந்தைங்க இருக்காங்கன்றதை மத்தவங்க தெரிஞ்சுக்கட்டும். அதோட, இவங்க அடுத்த முறை வர்ற வரைக்கும் ஒரு ஞாபகத்துக்காக இதெல்லாம் இருக்கட்டும்’’ - கட்டளையாகச் சொன்னார் அப்பா.
அதற்குள் இருந்த சோகமும் கெஞ்சலும் எனக்குப் புரிந்தது!