சைக்காலஜி : எஸ்.ராமன்





நூற்றுக்கணக்கில் பட்டுப் புடவைகளை பிரித்துப் பார்த்தும் எதை எடுப்பது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். சேல்ஸ்மேன் நொந்து போய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்த புடவைக் குவியலில் இருந்து ஒரு புடவையை ஆவலோடு உருவினாள் ஒரு வடநாட்டுப் பெண். கூலிங் கிளாஸ், மாடர்ன் டிரஸ் என்று அந்தப் பெண் பார்க்க படு ரிச்.
‘‘வாவ்! இதைத்தான் ரொம்ப நாளா தேடிட்டிருந்தேன். கரீனா கபூர் கல்யாணத்துக்கு எடுத்த பட்டுப்புடவை, கிட்டத்தட்ட இதே காம்பினேஷன்லதான் இருக்கும். இது இங்க கிடைக்கும்னு நினைக்கவே இல்ல’’ என்று அவள் குதூகலித்தாள்.
‘‘எக்ஸ்கியூஸ் மீ... இதை நான் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க பாட்டுக்கு வந்து எடுக்கறீங்களே?’’ என்றாள், ஒதுக்கி வைத்திருந்த பெண்மணி.

‘‘ஓகே... எனக்கு அதிர்ஷ்டமில்ல. இதை நீங்களே எடுத்துக்குங்க’’ என்று வடநாட்டுப் பெண் பெருந்தன்மையாக விட்டுத் தர, சந்தோஷமாக அந்தப் புடவையை பில் செய்து கிளம்பினாள் அந்தப் பெண்.

‘‘இன்னொரு பொண்ணு நல்லாயிருக்குன்னு நினைக்கிறதைத்தான் பொண்ணுங்க தனக்கு வேணும்னு அடம் பிடிப்பாங்கன்னு நீங்க சொன்னது கரெக்ட்டுப்பா! உங்க சைக்காலஜியும் வியாபாரத் தந்திரமும் சூப்பர்’’ - ஜவுளிக்கடை முதலாளியான தன் தந்தையைப் புகழ்ந்து தள்ளினாள் அந்த வடநாட்டுப் பெண்.