கிராஸ் டாக் : எ.பி.திருவடி

வழக்கம்போல கடலை போட தன் கேர்ள் ஃப்ரெண்ட் நம்பரை செல்போனில் டயல் செய்தான் வசந்த். மிக அபூர்வமாக செல்போனில் கேட்கும் கிராஸ் டாக்கில் அந்த அழைப்பு மாட்டிக் கொண்டது. அதில் ஒரு ஜோடி சல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்தது. ‘அடுத்தவர் அந்தரங்கத்தை வேவு பார்க்கும் சுகமே தனி’ என நினைத்தபடி ஒட்டுக் கேட்க ஆரம்பித்தான் வசந்த்.
‘‘ஏய்... நீ எந்த காலேஜ்ல படிக்கிறே?’’ ‘‘குயின் மேரீஸ்..!’’ ‘‘அப்ப நீ குயின் மாதிரி இருப்பேன்னு சொல்லு..!’’ ‘‘ம்ஹும்... குயினை விட அழகா இருப்பேன்!’’ ‘‘உனக்கு ஸ்வீட் வாய்ஸ்...’’ ‘‘வாய்ஸ் மட்டும்தானா?’’ ‘‘நேர்ல பார்த்து ஒரு மூவி போவோம்... மத்ததை அப்புறம் சொல்றேன்!’’ ‘‘ஓகே... அட்ரஸ் சொல்றேன். பைக் எடுத்துக்கிட்டு ஈவ்னிங் வந்துடு...’’ என்று அவள் சொன்ன முகவரியைக் கேட்ட வசந்த், தலையில் இடி இறங்கியதைப் போல் உணர்ந்தான். முந்தா நாள் தன்னோடு சினிமாவுக்கு வந்து, கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய அதே ரம்யா... அதே முகவரி... ‘அடிப்பாவி! நல்ல பொண்ணு... இவளே நமக்கு வாழ்க்கைத்துணை ஆனா நல்லாயிருக்கும்னு கனவு கண்டேனே’ என்று கடுப்பானவன், ரம்யா நம்பரை தன் செல்லில் இருந்து அழித்தான். அடுத்த எண்ணாக இருந்த ரேகாவுக்கு போன் போட்டான். ‘‘ஏய் ரேக்ஸ்... நாம ஒண்ணா மூவி போயி ரொம்ப நாளாச்சுல்ல..?’’
|