அக்கறை : கே.எம்.சம்சுதீன்





“என்னங்க... அவனும் ஒரு வாரமா கேட்டுக்கிட்டே இருக்கான். ‘உங்கப்பாவே சைக்கிள் கடை வச்சிருக்காரு. ஆனா, உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியலை’ன்னு ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம். இன்னைக்கு கடை லீவுதானே... அவனுக்கு சொல்லிக் குடுங்களேன்...’’ - முத்தம்மா நினைவுறுத்தினாள்.

கார்த்திகேயன் பாசக்காரத் தந்தைதான். ஆனாலும், மகனுக்காக எழுந்து கிளம்பாமல் அலட்சியமாக உட்கார்ந்தபடி அவன் செய்தித்தாளைப் புரட்டியதுதான் புதிராக இருந்தது.
‘‘அவனே கத்துக்கறேன்னு கடை சாவிய எடுத்துக்கிட்டுப் போயிட்டான். சின்னப் பையங்க... விழுந்து வாரப் போறான். போங்க சீக்கிரம்...’’ படபடத்தாள் முத்தம்மா.
அப்போதும் கார்த்திகேயன் அசையாமலே உட்கார்ந்திருந்தான்.
‘‘யப்பா கார்த்தி... உம்பையன் ரோட்ல சைக்கிளோட விழுந்து நல்ல அடி...’’ - பெரியவர் ஒருவர் வாசலில் கத்த, அலறியடித்து ஓடிய கார்த்திகேயன், காயத்தைக் கழுவி பேண்டேஜ் போட்டு, அப்படியே சைக்கிள் ஓட்டவும் பத்தே நிமிடத்தில் கற்றுக்கொடுத்து விட்டான்.
‘‘இத முன்னாலயே செஞ்சிருக்கலாமில்ல..?’’ - எரிச்சலோடு கேட்டாள் முத்தம்மா.
‘‘வண்டி ஓட்டும்போது கொஞ்சம் தவறினாலும் என்ன ஆகும்னு அவனுக்குத் தெரியணும். விழுந்து அடிபட்டாலும் கத்துக்கிட்டே தீரணும்கிற வெறியும் அவனுக்கு வரணும். இப்ப பார்... சொல்லிக் கொடுத்ததும் பக்குனு புடிச்சிக்கிட்டான்...’’
கார்த்திகேயனின் பதிலில் அக்கறை இருந்தது.