
இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் 40 சதவீதம் வெளி மார்க்கெட்டுக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். 34 சதவீத மண்ணெண்ணெய் முறைகேடாக வெளியில் செல்கிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். தமிழகத்திலும் பெருமளவு இந்த மோசடி நடக்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில், 2013 முதல் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’களை வழங்க முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
அதென்ன ஸ்மார்ட் ரேஷன் கார்டு?
‘‘ஏ.டி.எம் கார்டு போல ஒரு மின்னணு அட்டை. அவ்வளவு தான். அதில் குடும்பத்தில் உள்ள மூன்று நபர்களின் புகைப்படங்கள், குடும்பத் தலைவரின் கைவிரல் ரேகைகள், கருவிழிப்படம் உள்ளிட்ட முழு விபரங்களும் பதியப்பட்டிருக்கும். புகைப்படத்தில் உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் ஒரு மின்னணுக்கருவி வழங்கப்படும். அந்தக்கருவி, கம்ப்யூட்டரோடு இணைக்கப்படும். ஸ்மார்ட் கார்டை அந்தக் கருவியில் தேய்த்தால் புகைப்படங்கள் உள்ளிட்ட முழு விபரமும் ஸ்கிரீனில் தெரியும். பொருள் வாங்குபவர் கைரேகை அல்லது கையெழுத்து போட்ட பிறகுதான் பில் போட முடியும். பொருட்களின் எடையும் துல்லியமாகப் பதிவாகும். இந்த விற்பனையை மேலதிகாரிகள் ஆன்லைனில் கண்காணிக்கவும் முடியும். இதனால் முறைகேடுகள் குறைந்துவிடும்’’ என்கிறார் கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் அறங்காவலர் ஆர்.தேசிகன்.
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவை தவிர ஏகப்பட்ட போலி ரேஷன் கார்டுகளும் உலவுகின்றன. ரேஷன் கார்டு வழங்குமிடத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளால் சிவில் சப்ளை நிர்வாகம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை சில வியாபாரிகள் 3 முதல் 6 ரூபாய்க்கு வாங்கி, பாலீஷ் செய்து 10 முதல் 15 ரூபாய் வரை விற்கிறார்கள். கேரளாவுக்குத்தான் இந்த அரிசி பெருமளவு கடத்தப்படுகிறது. நாமக்கல் பகுதியிலும் இந்த அரிசிக்கு நிறைய கிராக்கி உண்டு. அங்கு கோழிப்பண்ணைகளில் தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.
ரேஷன் கடைகளில் 15 ரூபாய்க்கு விற்கப்படும் மண்ணெண்ணெயை 25 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகிறார்கள். வெளிமார்க்கெட்டில் 30 முதல் 35 ரூபாய்க்கு விற்கிறார்கள். டிமாண்ட் சமயத்தில் 50 ரூபாய் வரை விலைபோகிறது. நகையை அடகு வைப்பது போல ரேஷன்கார்டுகளை வியாபாரிகளிடம் மக்கள் அடகு வைக்கும் கொடுமையும் நடக்கிறது. இதற்கு சில ரேஷன் கடைக்காரர்களும் உடந்தையாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘‘அரிசிக்கும், மண் ணெண்ணெய் க்கும் மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் மானியம் அளிக்கின்றன. ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் அரசுக்கு 12 ரூபாய் நஷ்டமாகிறது. இவை உரியவர்களைப் போய்ச் சேருவதில்லை என்பதுதான் கொடுமை. பலர் ரேஷன் பொருட்கள் வாங்குவதே இல்லை. ஆனால், வாங்கியதாக கணக்கு எழுதி வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். ஸ்மார்ட் கார்டு வந்தால் இந்த முறைகேடுகள் முடிவுக்கு வந்துவிடும். இடைத்தரகர்கள், வணிகர்கள் நுழைய முடியாது. கடைக்காரர்களும் தவறு செய்ய முடியாது’’ என்கிறார் தேசிகன்.
ஆந்திராதான் ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு முன்னோடி. அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. பெருமளவு முறைகேடுகளும் குறைந்துவிட்டன. அதைப் பின்பற்றியே தமிழ்நாட்டில் அத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.
மத்திய அரசு வழங்கும் ஆதார் கார்டுக்காக கைரேகை, கருவிழிப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த தகவல் தொகுப்பை ஸ்மார்ட் கார்டுக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இவ்விதம் புதுச்சேரியில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால், இப்போது ஆதார் கார்டு திட்டத்துக்கு பாராளுமன்ற நிதிக்குழு அனுமதி மறுத்து விட்டது. இந்தியா முழுவதும் 20 கோடிப் பேரிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, சுமார் 7 கோடிப் பேருக்கு ஆதார் கார்டு வழங்கியுள்ள நிலையில் அத்திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் சில ஆயிரம் பேரே தங்கள் விபரங்களை பதிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் கார்டு வழங்கும் பணியை நிறுத்துமாறு அஞ்சல்துறை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனால், தொடக்கத்திலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான திட்டம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது. அடுத்து என்ன செய்வது என்பதை அரசுதான்
தீர்மானிக்கும்’’ என்கிறார்கள்.
தனியாகத் தகவல்கள் பெற்று ஸ்மார்ட் கார்டு வழங்க சுமார் ரூ.600 கோடி செலவாகும் என்று திட்டமிட்டுள்ளது அரசு. இதுபற்றி குறிப்பிட்ட தேசிகன், ‘‘தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விற்பனையில் நடக்கும் முறைகேட்டால் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு ஒப்பிடும்போது 600 கோடி மிகச்சிறிய தொகைதான். எனவே, அரசு தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்