
உடல் மெலிந்து, இளமை கூடி, இன்னும் அழகாகி இருக்கிறார் தேவயானி. ‘கோலங்கள்’ அபி விட்டுச் சென்ற இடத்துக்கு இப்போது ‘முத்தாரம்’ ரஞ்சனி! அபி கேரக்டர் பொறுமையின் அடையாளம் என்றால், ரஞ்சனி பொறுமையின் உச்சம்!
பொறுமைசாலியாவே நடிச்சு போரடிக்கலையா மேடம்?
‘‘பெண்கள் பொறுமையோட பிம்பங்கள்தானே? ‘கோலங்கள்’ முடிஞ்சதும் ஒரு வருஷத்துக்கு எந்த சீரியலையும் கமிட் பண்ணலை. அபி கேரக்டர்லேருந்து வெளில வர முடியலை. நிறைய கதைகள் கேட்டதுல, ‘முத்தாரம்’ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். முதல்முறையா டீச்சரா நடிக்கிறேன். என் பாட்டி & அதாவது அம்மாவோட அம்மா & தான் இந்தக் கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன். பெரிய பணக்காரக் குடும்பத்துலேருந்து வந்தாலும், அந்த எண்ணமே இல்லாத பொறுமைசாலி. அவங்களை மாதிரிப் பெண்கள் இந்தக் காலத்துலயும் இருக்காங்க...’’ & நீண்ட விளக்கத்துடன் ஆரம்பிக்கிறார் தேவயானி.
சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலான தேவயானி, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தவர். ‘‘கல்யாணத்துக்குப் பிறகும் படங்கள் பண்ணி ட்டிருந்தேன். அப்பவே சீரியல் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல தயங்கினேன். என் முதல் சீரியல் ‘கோலங்கள்’ அந்த எண்ணத்தையே மாத்திடுச்சு. கிட்டத்தட்ட 7 வருஷம் அபியாவே மக்கள் மனசுல வாழ்ந்திருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. இதைவிட வேற என்ன வேணும்?’’ என்கிறவரை இப்போதும் சினிமா வாய்ப்புகள் விரட்டாமல் இல்லையாம்.
‘‘நியூ படத்துல சின்ன வயசு எஸ்.ஜே. சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். படத்துல எஸ்.ஜே.சூர்யா ராத்திரில பெரியவரா மாறிடற மாதிரி கதை. பலரும் என்னை 10 வயசுப் பையனுக்கு அம்மாவா பார்க்கலை. ஹீரோவோட அம்மாங்கிற மாதிரியே நினைச்சிட்டாங்க. அந்தப் படத்துக்குப் பிறகு ‘அம்மாவா நடிக்கிறீங்களா’னு கேட்டு ஏகப்பட்ட வாய்ப்புகள். எனக்கோ, என் ஹஸ்பெண்டுக்கோ அதுல விருப்பமில்லை.
இந்தி சினிமால கல்யாணமாகி, குழந்தை பெத்த பிறகு கூட கஜோல் மாதிரி நடிகைகள் ஹீரோயினா நடிக்கிறாங்க. நம்ம இண்டஸ்ட்ரியோட தலையெழுத்து வேற. அதுக்காக நான் கவலைப்படலை. என் ஹஸ்பெண்ட் ராஜகுமாரன் டைரக்ஷன்ல, எங்க புரடக்ஷன்ல ‘திருமதி தமிழ்’ படத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன். என் எதிர்பார்ப்புக்கேத்த கேரக்டர் அமைஞ்சா படம் பண்ணுவேன். இல்லைன்னாலும் நோ பிராப்ளம். ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!’’ & உதடு பிரியாமல் சிரித்துச் சொல்கிறார் தேவயானி.
சீரியல் ரொம்ப ஈஸி!சன் டி.வி ‘அனுபல்லவி’ தொடரில் நடிக்கிற கிரீஷுக்கு சின்னத்திரை தொடர் களில் நடிப்பது அல்வா சாப்பிடுகிற மாதிரியாம்! தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல வருட மேடை நாடக அனுபவத்துடன் சீரியலுக்கு வந்தவர் கிரீஷ்.
‘‘மலையாள நாடகங்கள்லதான் அறிமுகமானேன். பத்து வருஷங்களுக்கும் மேலா ஒய்.ஜி.மகேந்திரன் சார் ட்ரூப்ல இருக்கேன். நாடகங்கள்ல நடிக்கிறது ரொம்பவே சிரமம். டயலாக்கை மிஸ் பண்ணக்கூடாது. தப்பு பண்ணக் கூடாது. பண்ணினாலும், சமாளிக்கிற டைமிங் சென்ஸ் வேணும். இதையெல்லாம் பழகினவங்களுக்கு சீரியல் ஒரு விஷயமே இல்லை’’ என்பவர், அடுத்து சன் டி.வியில் வரவிருக்கும் ‘வெள்ளைத் தாமரை’ தொடரிலும் முக்கிய வேடம் ஏற்கிறார். சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேனேஜராக இருக்கும் கிரீஷின் அடுத்த இலக்கு சினிமா!
ஆர்.வைதேகி