பெரிதும் மதிக்கப்படும் மனிதர்களும் விஷயங்களும், சில நாட்களிலேயே மதிப்பிழந்து போய் மோசமான விமர்சனத்துக்கு ஆளாகிற டெக்னாலஜி யுகத்தில் வாழ்கிறோம். இருந்தாலும், அரிதான சில விஷயங்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு. சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அர்த்தமே புரியவில்லை என்றாலும் தேசிய கீதத்தைக் கேட்கும்போது உடல் சிலிர்த்து மரியாதை செலுத்தாத இந்தியர்கள் கிடையாது! அந்த தேசிய கீதத்துக்கு இந்த வாரம் நூறு வயது.
வங்கப் பிரிவினையும், இந்தியாவின் தலைநகர் என்ற அந்தஸ்தை டெல்லியிடம் கல்கத்தா இழந்ததும் வங்காளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில் ‘ஜன கண மன...’ பிறந்தது. தேச விடுதலை என்ற வேள்வியிலிருந்து வங்காளம் தனிமைப்பட்டுப் போய்விடக்கூடாது என்ற வேட்கையில் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய பாடல் இது. 1911ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய மாநாட்டின் இரண்டாவது நாளில் (27&12&1911) இது பாடப்பட்டது.
அப்போது இது அவ்வளவாக புகழ் பெறவில்லை. 1919ம் ஆண்டு ஆந்திராவின் மதனப்பள்ளியில் இருந்த தியாசோபிகல் கல்லூரிக்கு வந்தார் தாகூர். அங்கே இதற்கு இசை அமைத்து முழு வடிவம் தரப்பட்டது. அங்கேயே ஆங்கிலத்திலும் இதை தாகூர் மொழிபெயர்த்துத் தர, இந்தியாவெங்கும் இருந்த இளைஞர்களை இது சீக்கிரமே ஈர்த்தது.
அப்போது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடல்தான் விடுதலைப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக இருந்தது. எனினும் சுபாஷ் சந்திர போஸ் தனது ‘இந்திய தேசிய ராணுவ’த்தின் தேசிய கீதமாக ‘ஜன கண மன...’வை அங்கீகரித்தார். ‘இந்தியர்களின் தேசிய வாழ்க்கையில் நீங்காத அங்கமாக இந்தப் பாடல் இருக்கிறது’ என்று மகாத்மா காந்தியும் சொன்னார்.
சுதந்திரத்துக்கு முந்தின நாள் ‘இந்திய அரசியல் நிர்ணய சபை’ கூட்டம். ‘வந்தே மாதர’த்தோடு துவங்கிய கூட்டம் ‘ஜன கண மன...’வில் முடிந்தது. அதே ஆண்டு ஐ.நா. பொதுச்சபைக்குப் போன இந்தியக் குழுவிடம் ‘உங்கள் தேசிய கீதத்தைக் கொடுங்கள்’ என்று கேட்டனர். ‘ஜன கண மன...’ இசைத்தட்டை இந்தியக் குழு கொடுக்க, இந்தியாவின் தேசிய கீதமாக அது உலகத் தலைவர்கள் முன்னிலையில் ஐ.நா. பொதுச்சபையில் இசைக்கப்பட்டது. 1950 ஜனவரி 24 அன்று நாடாளுமன்றம் முறைப்படி இதை தேசிய கீதமாக அங்கீகரித்தது.
எனினும், ‘பிரிட்டிஷ் மன்னரை புகழும் ஒரு பாடலாகவே இது இருக்கிறது’ என்ற சர்ச்சை மட்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர்கிறது!
அகஸ்டஸ்