‘வலிமையான லோக்பால் வேண்டும்’ என்பதற்காக அன்னா ஹசாரே இருந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போனாலும், அவருக்காக ரஜினி வாய்ஸ் கொடுத்தது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின், அதுவும் மிகப்பெரிய உடல்நல பாதிப்பைக் கடந்து வந்த நிலையில் ரஜினி கொடுத்த முதல் வாய்ஸ் இதுதான். அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு மின்னஞ்சலில் வாழ்த்துச் சொன்னவர், அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்காக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தையும் இலவசமாகத் தந்தார். ‘‘தென்னிந்தியாவில் தனது போராட்டத்துக்கு அவ்வளவாக ஆதரவில்லை என்கிற அன்னாவின் கவலை இப்போது நிவர்த்தி ஆகிவிட்டது’’ என்கிறார் ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ அமைப்பின் தன்னார்வலரும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பருமான நடிகர் கிட்டி. அன்னா சென்னை வந்திருந்தபோது அவரது பேச்சை மொழிபெயர்த்தவர் இவரே!
‘‘நல்ல விஷயம்னா அதுல தன்னோட பங்களிப்பு இருக்கணும்ங்கிற அக்கறை எப்பவுமே ரஜினிகிட்ட இருக்கு. சேர்ந்து நடிச்ச காலங்கள்ல இருந்து இப்ப வரை அவர்கூட நல்ல தொடர்பில இருக்கிறவன்ங்கிற முறையில இதைச் சொல்றேன். சினிமாவுல பஞ்ச் டயலாக் சொல்றப்ப கூட, ‘நாலு பேருக்குப் பயன்படுமா’ன்னு கேக்கறவர் அவர்.
ஆரம்பத்துல இருந்தே அன்னா டீம்ல இருந்த நான், இந்தப் போராட்டம் பத்தி ரஜினியிடம் நிறையவே பேசினேன். பொறுமையாவும் ஆர்வத்தோடும் கேட்பார்.
அன்னிக்கு நடந்தது எங்களுக் கெல்லாம் ஸ்வீட் சர்ப்ரைஸ். சென்னை வந்து திரும்பிய அன்னா ஹசாரேவை வழியனுப்ப ஏர்போர்ட் போயிருந்தேன். யதேச்சையா ரஜினி கிட்ட இருந்து எனக்கு போன்... ‘பக்கத்துல அன்னா இருக்கார்’னு சொன்னதும், செல்லை அவர்கிட்ட தரச் சொல்லி, ரெண்டு பேரும் 10 நிமிஷம் பேசியிருப்பாங்க. மிச்சமிருந்த கொஞ்ச நிமிஷமும் ரஜினி பத்தியே ஆச்சரியமா விசாரிச்சார் அன்னா. தேர்தல் நேரங்கள்ல எதிர்பார்க்கப்படற அவரோட வாய்ஸ் பத்தியும் அன்னாவுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்குது. ‘இப்படியொருத்தரோட சப்போர்ட்தான் இந்தப் பகுதியில இருந்து நமக்கு வேணும்னு நினைச்சேன்’ என்றபடி கிளம்பிப் போனார். அன்னிக்கு ராத்திரியே திரும்பவும் ரஜினிகிட்ட பேசுனேன். ‘உடல்நிலை ஒத்துழைச்சிருந்தா, அன்னாவோட சென்னை நிகழ்ச்சியிலயே கலந்துக்கற எண்ணம் இருந்தது’னு சொன்னார்.
அன்னா போராட்டத்துல ரஜினிக்கு இந்தளவு ஆர்வம் இருக்கிறதைத் தெரிஞ்சுக் கிட்டுத்தான் எங்க அமைப்புக்காரங்க உண்ணாவிரதம் இருக்க அவரோட மண்டபத்தைக் கேட்டுப் போயிருக்காங்க. உடனடியா கொடுக்கச் சொன்னவர், தேவையான ஏற்பாடுகளை நேர்ல இருந்தே கவனிச்சிருக்கார்’’ என்கிறார் கிட்டி.
உண்ணாவிரத ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ரஜினி அங்கிருந்த இளைஞர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, அவர்களில் சிலரை மண்டபத்தின் அலுவலகத்துக்கு அழைத்துப் பேசியிருக்கிறார். அவர்களில் ஒருவர் இப்ராஹிம்.
‘‘உங்க வயசுல எங்க காலத்துல இந்தளவு நாட்டுப் பற்று இருந்ததா ஞாபகமில்லை. உங்களையெல்லாம் பாக்குறப்ப பெருமையா இருக்கு. உங்க போராட்டத்துக்கு என்ன உதவி வேணாலும் கேளுங்க...’ என்றவர், அந்தக் குளிர் நேரத்திலும் அரை மணி நேரம் இருந்து ஏற்பாடுகளைப் பார்த்து விட்டே கிளம்பினார்’’ என்கிறார் இப்ராஹிம்.
அய்யனார் ராஜன்