இரண்டு பதம் ஆடினாலே துவண்டு போய் பெருமூச்சு விடும் இந்தக்கால இளசுகள், ப்ரியதர்ஷினி கோவிந்திடம் பயிற்சி எடுக்கலாம். பாரதிய வித்யா பவனில் ‘சுவாமி நின்னே கோரி நானு’ நவராக மாலிகை வர்ணத்தில் ப்ரியா காட்டிய அசுர வேகம் பிரமிக்க வைத்தது. ஜதிகளின்போது இந்தப் பெண்மணியின் பாதங்கள் நூல் பிடித்தது போன்று நின்றன. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் மீது மானசீகமாக காதல் வயப்படும் நாயகி, அவர் மீது தனது காதலை மாய்ந்து மாய்ந்து சொல்லி தனிமையில் ஏங்கித் தவிக்கும் அழகான தஞ்சை நால்வரின் வர்ணம். ‘என்னை விட உனக்கு யார் பொருத்தம்’ என்று ஒரு கட்டத்தில் செல்லக் கோபத்தில் சீறும்போது ப்ரியாவின் உதடுகள் நிஜமாகவே துடித்தன.
அடுத்து வந்தது ஷேத்ரய்யரின் ‘கோடி கூசேன் ஐயய்யோ’ தெலுங்குப் பதம். காதலனுக்காக ஆசை ஆசையாக ஜோடித்துக்கொண்டு காத்திருந்தால் அவன் மிகவும் தாமதமாக வர, சற்று நேர சந்தோஷத்தில் கோழி கூவிவிட, ஓடிவிடுகிறான். அந்த ஏக்கத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்தார் ப்ரியா. பிரிவைத் தாங்கமுடியாமல் உச்சக்கட்ட கோபத்தில் கோழியை விரட்டுவது போல பாவனை செய்தபோது பாரதிய வித்யா பவன் அதிர்ந்தது. பாடகி ப்ரீதி மகேஷின் குரல் நிகழ்ச்சிக்கு பெரிய பலம்.
முத்தமிழ்ப் பேரவையில் சௌபர் ணிகாவின் ‘கிருஷ்ணார்ப்பணம்’ நடனம் எடுத்த எடுப்பிலேயே விஜய் படத்தின் வேகம் எடுத்தது. சுமாமணியின் மாணவி இவர். இறுதிவரை அந்த விறுவிறுப்பு குறையவில்லை. வயதுக்கு மீறிய ஞானம் இந்த சின்னப் பெண்ணின் ஒவ்வொரு அசைவிலும் அடவிலும் தெரிந்தது. சப்தத்தை அழகாக முடித்து வர்ணத்திற்கு வந்தார்.

நடிகை & நடனக் கலைஞர் ஷோபனா மெட்டமைத்த ‘ஆயிரம் தபஸிகள் இழுத்தாலும் அசையாத தேர்’ என்று துவங்கும் ராகமாலிகை. கிருஷ்ணரின் மகிமைகளை, பராக்கிரமத்தை அருமையாகச் சொல்லும் இந்த வர்ணத்தை முழுமையாகப் புரிந்து, அனுபவித்து ஆடினார் சௌபர்ணிகா. முகபாவங்கள், அடவுகள், அரைமன்டி எல்லாம் நேர்த்தியாக இருந்தால்தான் பரதம் முழுமை பெறுகிறது. ரசிக்க முடிகிறது. ‘பரப்பிரம்மம்’ ஒன்றுதான் என்ற பொருளில் அன்னமாச்சார் இயற்றிய ‘ப்ரம்மம் ஒக்கடே’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு சௌபர்ணிகா வளைந்து நெளிந்து ஆடியபோது ஆடியன்ஸ் தங்களை அறியாமல் சீட்டிலேயே அசைந்தாடினார்கள்.
ஏ.சி. குளிரில் வெடவெடத்த நாரத கான சபா ரசிகர்களை கொஞ்ச நேரத்துக்கு ஸ்ரீரங்கம் அழைத்துப்போய் வந்தார் ராஜேஸ்வரி சாய்நாத். ஹைதராபாத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு பரதம் கற்றுத்தரும் ராஜேஸ்வரிக்கு வருடா வருடம் சென்னை சீசனில் ஆடுவது அலாதி ப்ரியம். ‘ரங்கநாதன் உறங்கும் அரங்கம் ஸ்ரீரங்கம்’ என்ற கவி கண்ணன் எழுதி, மிருதங்க மேதை காரைக்குடி மணியின் மேற்பார்வையில், பாலசாயி இசையமைப்பில் உருவான வர்ணம். ஸ்ரீரங்கம் தோன்றிய கதை, எப்போதும் பெருமாளின் நினைவிலேயே வாழும் விப்ரநாராயணனின் கதை, பொன்னாட்சியின் கதை போன்ற பக்திப் பரவசமூட்டும்
புராணக் கதைகளை அற்புதமாகக் கோர்த்துத் தந்தார். உறங்காவில்லி தன் மனைவி பொன்னாட்சியின் கண்ணழகைப் பற்றி ரொம்பவே சிலாகிக்கும் போது, ‘சுவாமியின் கண்களை விடவா உன் மனைவியின் கண்கள் பிரகாசமானவை’ என்று ராமானுஜர் கேட்கும் இடத்தை ராஜேஸ்வரி பிரமாதமாக வெளிப்படுத்திய காட்சி சிலிர்ப்பானது!
கனம் கிருஷ்ணய்யரின் ‘தெருவில் வரானோ’ என்ற கமாஸ் பதம், ராஜ்குமார் பாரதியின் தில்லானா இரண்டுமே நல்ல தேர்வு. பெருமாளில் ஆரம்பித்து சிவனில் முடித்து ‘ஹரியும்!
சிவனும் ஒண்ணு’ என்று யதார்த்தமாக உணர்த்தினார் ராஜேஸ்வரி.
பாலக்காடு பரணி