
‘‘உன் மனசுல என்ன தைரியம் இருந்தா, நீ இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்து நிப்பே... நம்ம குடும்ப மானம் என்னாகும்னு யோசிக்க வேண்டாமா..?’’ என்று அடிக்குரலில் உறுமினார் அப்பா.
‘‘நம்ம அப்பாவுக்கு ஊருக்குள்ளே மரியாதையான பேர் இருக்கேன்னு ஒரு செகண்ட் யோசிச்சிருந்தா, நீ இப்படிச் செஞ்சிருக்க மாட்டே...’’ என்று கண்ணீரோடு புலம்பினாள் அம்மா.
வீடு மொத்தமும் கூடியிருக்க, நட்டநடுவே நின்று கொண்டிருந்தான் சோமசுந்தரம்.
நடராஜா தியேட்டர் வாசலில் ராதாவை ஜூஸ் கடை வாசலில் பார்த்ததும், ‘என்ன பண்றா இங்கே...’ என்ற கேள்விதான் அவனுக்குள் முதலில் வந்தது. பக்கத்தில் போய்ப் பார்த்தால் ராதாவும் ஒரு பையனும் கையில் இளநீரோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் முன்னால் போய் நின்று, ‘‘யாரு இந்தப் பையன்... எத்தனை நாளா இது நடக்குது..?’’ என்று கேட்டதும் அந்தப் பையன் முகம் வெளிறி ஓடிவிட்டான். இழுக்காத குறையாக ராதாவை ஆட்டோவுக்குள் தள்ளி வீட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்திய சோமசுந்தரத்துக்குத்தான் இத்தனை வசவு. காரணம்... உள்ளே நுழையும்போதே, ‘‘அண்ணன் என்னை அசிங்கப்படுத்திடுச்சு...’’ என்று ராதா போட்ட பெருங்கூச்சல்தான்!
‘‘அவ செஞ்ச காரியத்தால மட்டும் நம்ம மானம் மணக்குமாக்கும்... நடு ரோட்டுல நின்னு எவனோ ஒரு பயகூட இளநீர் குடிக்கிறா... அதை என்னன்னு கேட்டா என்னைத் திட்டுறீங்க... பொம்பளைப் புள்ளையை எப்படி வளர்க்கணும்னு உங்களுக்குத் தெரியலை...’’ என்று சொல்லிவிட்டு, அப்போதுதான் பள்ளிக்கூடம் விட்டு வந்திருந்த தன் மகள் கவிதாவைப் பார்த்தான். அவள் லேசான சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தாள்.
‘‘இவளும்தான் பள்ளிக்கூடம் போறா... ஒருநாள் ஒரு பொழுது ‘இங்கே நின்னா... அங்கே பார்த்தா...’ன்னு ஒரு பேச்சு வந்திருக்குமா... அது பொம்பளைப் புள்ளைக்கு அழகு! ஆனா, இந்த ராதா வீட்டைவிட்டுக் கிளம்பினா ஏதோ தேர் தெருவுல இறங்குறாப்புல அப்படி நடக்குறா... இதெல்லாம் நல்லதுக்கில்லை...’’ என்று சொல்லிவிட்டு தன் ரூமுக்குள் வந்துவிட்டான் சோமசுந்தரம்.

உள்ளே நுழைந்தவனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள் ரத்னா. ‘‘அதான் உங்க பேச்சுக்கு பத்து பைசாவுக்கு மரியாதை இல்லைன்னு தெரியுதுல்ல... அப்புறம் என்னத்துக்கு நாட்டாமை உத்தியோகம்... இதிலே நம்ம புள்ளையைப் பத்தி பெருமை வேற... என்னத்துக்கு? எல்லா கண்ணேறும் எம்புள்ளை மேல விழுறதுக்கா..? உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க... நல்லவேளை, என் தம்பிக்கு அவளைக் கேட்டிருந்தா அவன் குடும்பம் என்னாகி இருக்கும்..?’’ என்றாள்.
சோமசுந்தரத்துக்கு எரிச்சலாக இருந்தது. ‘நீயும் இந்தக் குடும்பத்திலே ஒருத்தி இல்லையா... உனக்கும் பொறுப்புகள் இல்லையா... ஏதோ மூணாம் மனுஷி மாதிரி பேசுறியே... என் தங்கை எவன்கூடவோ நிக்கிறாளேன்னு நான் கவலைப்படறேன்... ‘நல்லவேளை, அவளை என் தம்பிக்கு சம்பந்தம் பேசலை’ன்னு நீ நிம்மதியா சொல்றே... எப்போதான் இந்தக் குடும்பத்துக்குள் வரப் போறே...?’ என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடினாலும் சோமு வாயைத் திறந்து எதையும் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டான்.
சின்ன வயது முதலே சோமசுந்தரம் அப்படித்தான்... மனதில் படும் பல விஷயங்களை வெளியில் பேசமாட்டான். ‘கடை வேலையே நாலு ஆளுக்குக் கிடக்குது... நீ ஏன் வெளி வேலைக்குப் போகப் போறே?’ என்று அப்பா ஆரம்பத்தில் சொன்னதால்தான், மதுரை சுந்தரம் மோட்டார் கம்பெனியில் கிடைத்த வேலைக்குப் போகவில்லை. அதன்பிறகு, ‘இது கவர்மென்ட் வேலையாச்சே... போயிட்டு வா...’ என்று அப்பா சொன்னதால்தான் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் வேலையில் சேர்ந்தான். ரத்னாவை அவனுக்குக் கல்யாணம் செய்வதாக முடிவானபோதுகூட, நிச்சயத்தன்றுதான் போட்டோவைப் பார்த்தான்... கல்யாணத்தன்றுதான் பெண்ணையே பார்த்தான். அதுவரையில் அப்பா பேச்சை மீறாதவன், இப்போது மனைவி பேச்சையும்!
உடைமாற்றிக் கொண்டிருந்த சீதா, பழைய உடைகளை அழுக்குக் கூடையில் போட்டு விட்டு பின்வாசலுக்குப் போய் முகத்தைக் கழுவிக் கொண்டாள். அப்போது துண்டோடு ராதா வர, அங்கேயே நிறுத்தினாள் அவளை.
‘‘ஏண்டி... அண்ணன் உன் நல்லதுக்குத்தானே பண்ணுச்சு... இப்படி வீட்டுக்கு வந்ததும் அநியாயத்துக்கு அண்ணனை மாட்டி விட்டுட்டியே..?’’
‘‘என்ன நல்லது பண்ணுச்சு... நாலு பேர் பாக்கிற இடத்துல, என்னை இழுத்து ஆட்டோவுக்குள்ளே போடறது நல்ல விஷயமா... அந்த ஏரியாவில் என்னைத் தெரிஞ்சவங்க எத்தனை பேர் இருந்திருப்பாங்க... அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? கொஞ்சமாவது யோசிக்க வேணாமா? அண்ணன் இனிமே என்னை எங்கயாச்சும் பார்த்தா கூட பஸ்ஸைத் திருப்பிக்கிட்டுப் போயிரும்... அந்த பயம் வேணும்னு தான் அப்படிச் செய்தேன்!’’ என்று சவடாலாகப் பேசினாள் ராதா.
‘‘உன் ஆண் நண்பர்களை எல்லாம் காலேஜோடு நிறுத்திக்கிட வேண்டியதுதானே... என்னத்துக்கு இப்படி சிக்கல் பண்றே..?’’
‘‘அவன் ஒண்ணும் என் பாய் ஃப்ரெண்ட் இல்லை. பக்கத்து காலேஜ்... பஸ்ல பார்த்துதான் பழக்கம்... காலேஜ்ல ரெக்கார்ட் நோட்டு எழுதற அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க... அப்போதான் அவன், ‘ஏற்கனவே எங்க அக்கா எழுதினது வீட்டுல இருக்கு... கொண்டாந்து தரவா’ன்னு கேட்டான். ‘சரி’ன்னு சொன்னேன். அதைக் கொடுக்க வந்தவன், ‘ஒரு இளநி குடிப்போமா’ன்னு கேட்டுட்டு, டக்குனு வாங்கி கையில் கொடுத்திட்டான்.
அவனை சங்கடப்படுத்த வேணாமேன்னு வாங்கிக் குடிக்கும்போது அண்ணன் வந்துடுச்சு... அதுவும் நல்லதுக்குத்தான்! இதையே சாக்கா வெச்சு அவனை கழற்றி விட்டுறலாம்...’’ என்று, ஏதோ நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதைச் சொல்வது போல சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு முகம் கழுவப் போய்விட்டாள் ராதா.
அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து முகம் துடைத்த சீதா, மறுபடியும் துண்டை அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள். இந்தக் களேபரம் எதுவும் தெரியாமல் விஜயா அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தாள். வீடே கொஞ்சம் அனலாக இருப்பதைக் கவனித்துவிட்டு சீதாவிடம்
தனியாக விசாரித்தாள்.
விஜயா வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தாள். எதிரே கோணலும்மாணலுமாக வீடுகள் பரவிக் கிடந்தன. சில ஓட்டு வீடுகளாக இருந்தன. சில காரை வீடுகளாக இருந்தன. காரைக்குடிக்கே அடையாளமாக இருக்கும் பெரிய பெரிய வீடுகளும் இருந்தன. ‘மனித மனங்களைப் போலவே இந்த கட்டிடங்களும் எத்தனை விதங்களாக இருக்கின்றன’ என்று விஜயா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ராதா படியேறி மேலே வந்தாள்.

‘‘ஏண்டி... இப்படி பொது இடங்கள்ல நம்ம அப்பாவுக்கு கெட்ட பேர் உண்டாக்கித் தர்ற மாதிரி நடந்துக்கறே..?’’ என்று ஆரம்பித்த விஜயாவை சட்டென்று இடைமறித்தாள் ராதா.
‘‘ந்தா... சும்மா நீயும் ஆரம்பிக்காதே! நான் ஒண்ணும் பசங்களைக் கூட்டிட்டு சினிமா, பார்க்னு சுத்தலை. என் லிமிட் என்னன்னு எனக்குத் தெரியும்... அதைத் தாண்ட மாட்டேன்! என்னைக் கட்டிக்கப் போறவனுக்கு என்ன தகுதிகள் இருக்கணும்னு நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட்டுக்கு நம்ம காரைக்குடியில் ஆள் இல்லை... அதனால, நான் தப்பு தண்டா பண்ணிடுவேன்னு சும்மா பயந்து சாகாதே... நீ வரச் சொன்னேன்னு சொன்ன மரியாதைக்காகத்தான் மேலே ஏறி வந்தேன்... அதை நீயே கெடுத்துக்காதே...’’ என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டாள்.
விஜயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் கார் வைத்திருக்க வேண்டும். அவன் வேலை விஷயமாக காரை எடுத்துக் கொண்டு போய்விட்டாலும் தன்னுடைய தேவைக்காக இன்னொரு கார் வீட்டில் நிற்க வேண்டும். சமையலுக்கு, உதவிக்கு, தோட்ட வேலைக்கு என்று எல்லாவற்றுக்கும் ஆள் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது கட்டுவதற்கே பட்டுப் புடவைகள், பிள்ளைகளைப் பராமரிக்க ஆயாக்கள்... தினம் ஒரு விழா, அதில் தலைமை கணவன் என்றால் குத்து விளக்கு ஏற்றுவது தானாக இருக்கவேண்டும் என்றெல்லாம் ராதாவின் ஆசைகள் ஒவ்வொன்றும் ரொம்பவே உசரத்தில் இருப்பவை.
‘என்னடி இது’ என்று கேட்டால், ‘என்ன தப்பு... நீ பி.ஏ. முடிச்சுட்டு எம்.ஏ. படிக்கணும்னு ஆசைப்படலையா... ஏன், பி.ஏ.வோட நிப்பாட்டி இருக்கலாமே? ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு தேவை... உனக்குப் படிப்பு; எனக்குப் பணம், அந்தஸ்து! நான் ஒண்ணும் அதைத் தப்பான வழியில் தேடிக்க ஆசைப்படலையே... அதெல்லாம் இருக்கறவனை மாப்பிள்ளையா அடையணும்னு நினக்கறது தப்பா..?’ என்று எதிர்க் கேள்வி கேட்டு வாயை அடைத்துவிடுவாள். அவளுடைய வாதம் சரியானதாக இருக்கலாம். ஆனால், ஒருநாள் ஆசை கண்ணை மறைத்துவிட்டால்..? இதுதான் விஜயாவின் கவலை.

‘‘பனி இறங்கற நேரம்... இங்கே என்ன பண்ணிக் கிட்டிருக்கே..?’’ என்றபடி மேலே வந்தாள் சீதா.
‘‘ராதாகிட்டே பேசலாம்னு கூப்பிட்டேன்... ஆனா, அவ என்கிட்டே பேசிட்டு தெளிவா கீழே இறங்கிப் போயிட்டா. ஏதாவது சிக்கல் வந்திடுமோன்னு கவலையா இருக்கு. ஏன் இப்படி பணம் பணம்னு யோசிக்கிறாள்னு தெரியலை. ஒரே வயித்தில் பிறந்தவங்க குணம் ஒண்ணாத்தான் இருக்கும்னு சொல்வாங்க... நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் பிறந்தவங்க... ஆனா, அவ குணம் ஏன் இப்படி இருக்கு?’’ என்ற விஜயாவின் குரல் கவலையில் கம்மிப் போயிருந்தது.
விஜயாவை நெருங்கி வந்தாள் சீதா.
‘‘நீ சொன்னதுல சின்ன திருத்தம்... குணம் பிறப்பிலேயே வர்றது; ஆசைகள்தான் நடுவிலே வர்றது! ராதாவோட குணத்தில் குறையில்லை...
ஆசைகள்தான் அவளைப் படுத்துது. நல்ல பணக்கார இடமாப் பார்த்து ராதாவுக்கு மாப்பிள்ளை தேடிட்டா, சிரிச்ச முகத்தோடு தாலியைக் கட்டிக்குவா. அது நடக்கலைன்னா, அவளே மாப்பிள்ளை தேடிக்குவா. ஆக, நம்மளை அவமானப்படுத்தணும்ங்கறது அவளோட ஆசையில்லை. நாமளா அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிடக் கூடாது...’’ என்று பாட்டிக் கிழவி போல பேசிக் கொண்டே போன சீதாவைப் பார்க்கும்போது விஜயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ராதாவும் சீதாவும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். ஆனால், இப்போது இருவருக்கும் நடுவே அத்தனை பெரிய இடைவெளி! ராதா பகட்டு என்றால் சீதா எளிமை. அதிர்ந்துகூட பேச மாட்டாள். கல்லூரியில் பக்கத்து பெஞ்சில் இருக்கும் பெண்களைத் தவிர பழகக் கூட அவளுக்கு ஆள் கிடையாது. உடையில் தொடங்கி எல்லாவற்றிலும் நேர் எதிர்! விஜயாவுக்கு ராதாவைப் பற்றி கவலையாக இருந்தது. ஒருவகையில் நமக்குப் பார்க்கும்போதே ராதாவுக்கும் மாப்பிள்ளை பார்ப்பது நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டாள்.
விஜயா கையில் குடையும் கைப்பையுமாக ரோட்டில் இறங்கிவிட்டால் அடுத்த ஸ்டாப்பிங், ஸ்வீட் ஸ்டால்தான்... அங்கே கடலை வாங்கிக் கொண்டால் அடுத்து வண்டி பள்ளிக்கூடத்தில்தான் நிற்கும். அன்றும் அப்படித்தான்... ஆனால், ஸ்வீட் ஸ்டாலில் கடலை வாங்கிக்கொண்டு, கொறித்தபடி நடந்தவளை ‘‘எக்ஸ்கியூஸ் மீ’’ என்ற குரல் இழுத்து நிறுத்தியது.
திரும்பிப் பார்த்தால்... அந்த மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ் நின்று கொண்டிருந்தான்.
(தொடரும்)
மெட்டி ஒலி திருமுருகன்