எனக்கு நீரிழிவு இருக்கிறது. பல வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கூடவே கொலஸ்ட்ராலுக்கும் சேர்த்து... இது போதாதென, சமீபகாலமாக சரும பிரச்னை வந்து, அதற்கும் மருந்துகள், மாத்திரைகள். அதிக மாத்திரைகள் சாப்பிட்டதாலேயே ஒருவர் இறந்துவிட்டதாக சமீபத்தில் செய்தி படித்தேன். இத்தனை மாத்திரைகள்தான் அளவு என ஏதாவது வரையறை உண்டா? சி.ராஜவேலு, சென்னை-21.
பதில் சொல்கிறார் நீரிழிவு மருத்துவ நிபுணர் விஜய் விஸ்வநாதன்நீரிழிவுக்காரர்களுக்கு ‘கோ மார்பிட் கண்டிஷன்’ என்ற பிரச்னை இருக்கும். அதாவது ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, நரம்பு தொடர்பான பிரச்னை, இதய நோய் எனப் பலதும் சேர்ந்து வரும். நீரிழிவுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தால், மற்ற நோய்களால் அந்த நபரின் உயிருக்கே ஆபத்து வரலாம். உதாரணத்துக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கெட்ட கொழுப்பு, பிபி இரண்டும் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், மாரடைப்பு வரலாம். கிட்னி பாதிக்கப்படலாம். எல்லாவற்றையும் மருந்துகளின் உதவியின்றி, டயட் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.
ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும் மாத்திரையுடன் கொலஸ்ட்ராலை குறைக்கும் மாத்திரையும் எப்போதும் தரப்படும். நூற்றில் 40 பேருக்கு பிபி மாத்திரை தேவைப்படலாம். துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு 2 அல்லது 3 மாத்திரைகள்கூட கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு சில மாத்திரைகள் அவசியப்படும். நியூரோபதி எனப்படுகிற நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் பி12 மாத்திரை பரிந்துரைக்கப்படும். நியூரோபதி இல்லாதவர்களுக்கும் மெட்ஃபார்ம் என்கிற மாத்திரை தரப்படும். அதை எடுத்துக்கொண்டால் பி.காம்ப்ளக்ஸ் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏதேனும் ஒரு வைட்டமின் மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதும்.
அளவுக்கு அதிக மாத்திரைகள் சாப்பிட்டு இறந்த அந்த நபருக்கு என்ன பிரச்னை இருந்தது, என்ன மாத்திரைகளை எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் உண்மை தெரியும். மற்றபடி தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தவறுவது எந்த அளவு ஆபத்தானதோ, அதே போலத்தான் தேவையற்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும்!
ஏராளமாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் என் அப்பாவுக்கு. வீட்டில் வைத்து பராமரிக்க இடம் இல்லை. இவற்றை ஓரளவு நல்ல விலைக்கு விற்க முடியுமா? அல்லது பழைய பேப்பர் கடையில் எடைக்குத்தான் போட வேண்டுமா? மோ.ராஜ், சென்னை-15.
பதில் சொல்கிறார் நூலகர் ஆர்.சுந்தரம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் புத்தகங்களைத் தரவாரியாகப் பிரித்து பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். உங்கள் தந்தையின் சேமிப்பு பல தலைமுறைக்கும் பயன்படும் வகையிலான சேவை இது.
விற்கத்தான் விருப்பம் என்றால், ஆன்லைனில் நல்ல விலைக்கு விற்க முடியும். ebay.in போன்ற வணிகத்தளங்களில் உறுப்பினராகி, புத்தக விவரங்களை அட்டைப்படத்துடன் லிஸ்ட் செய்து விற்பனைக்கு வைக்கலாம். புத்தகத்துக்கான விலையை நீங்களே நிர்ணயிக்கலாம். வாங்க விரும்புபவர் பணம் செலுத்திய உடனே அவருக்கு கூரியர் / தபால் / நேரடி டெலிவரி மூலமாக புத்தகத்தைச் சேர்ப்பிக்க வேண்டும்.

egully.com வலைத்தளத்தில் புதுமையான வழிமுறை பின்பற்றப்படுகிறது. விற்க விரும்பும் புத்தகங்கள் பற்றிய தகவல்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும். அப் புத்தகம் விற்பனைக்குத் தேர்வானால், உடனே கூரியரில் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும். புத்தகம் கிடைக்கப்பெற்றவுடன், அதன் விலையில் 25 சதவீதம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தொகையைப் பணமாகப் பெற முடியாது. அதற்குச் சமமான மதிப்புக்கு இத்தளத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இத்தளத்தில் உடைகள், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் உள்பட சகல பொருள்களும் கிடைக்கும்.
Buyselloldbooks.com என்ற இணையதளம் புத்தகம் வாங்குவோரையும் விற்போரையும் இணைக்கும் இலவச பாலமாகச் செயல்படுகிறது. உங்கள் புத்தக விவரங்கள் இதில் பதிவிடப்படும். வாங்க விரும்புவோர் உங்களோடு மின் அஞ்சல் அல்லது போனில் தொடர்புகொள்வார்கள்.
அவர்களிடம் கொடுத்து பணம் பெறுவது உங்கள் பொறுப்பு!