குறைவான ஜிஎஸ்டி... இருந்தும் தங்கம் விலை உயர என்ன காரணம்?
வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது தங்கத்தின் விலை. இந்தக் கட்டுரை எழுதும்போது ஒரு கிராமின் விலை 7 ஆயிரத்து 440 ரூபாயென, ஒரு சவரன் 59 ஆயிரத்து 520 ரூபாயை எட்டியிருந்தது. அநேகமாக இன்னும் சில தினங்களில் 60 ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில் தங்கத்தின் விலை ஏன் தாறுமாறாக ஏறுகிறது, இனி விலை குறைய வாய்ப்புள்ளதா உள்ளிட்ட கேள்விகளுடன் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், விலைேயற்றத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவருமான கோல்டு குரு சாந்தகுமாரைச் சந்தித்தோம். ‘‘உண்மையில் இது வரலாறு காணாத விலையேற்றம்தான். ஆனால், இதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்தப் புதிய உச்சத்தைத் தொட முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றநிலை. இஸ்ரேல் - பாலஸ்தீனம், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் என எல்லா போர்களுமே இதில் உள்ளடங்கி இருக்கிறது. எப்போதுமே இதுமாதிரியான போர் பதற்றம் வரும்போது தங்கத்தின் விலை உயரும்.
பொதுவாக போர்கள் நடக்கும்போது அங்கே பொருளாதாரம் வீழ்ச்சிக்கு வரும். இரண்டாம் உலகப்போர் நடந்தபோது அகதிகளாக பலர் நாட்டைவிட்டு தஞ்சம் தேடி அண்டை நாடுகளுக்குச் சென்றனர். அப்படி அவர்கள் போகிறபோது தாங்கள் வைத்திருந்த வீடு, நிலம், கால்நடை, மோட்டார் வாகனங்கள், சொந்த உபகரணங்கள் என எதையும் எடுத்துச் செல்லவில்லை.
மாறாக தங்கத்தை மட்டுமே கையில் எடுத்துப் போனார்கள்.
ஏனெனில், உலக கரன்சி என்று பார்த்தால் அது தங்கம்தான். அதற்கு எல்லா இடங்களிலும் மதிப்பு உண்டு. எனவே எல்லோரும் தங்கத்தைக் கொண்டு போனார்கள். அதனால், போர்ச் சூழலில் தங்கம் முக்கியமானதாக இருக்கும். விலையும் ஏற்றமாகும். இரண்டாவது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் அரை சதவீதம் குறைத்துள்ளது. இந்த அரை சதவீதக் குறைப்பு என்பது வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய தொகை. அதனால், பெரிய முதலீட்டாளர்கள் இந்த வைப்பு நிதியில் எந்தப் பயனும் இல்லை எனக் கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்கள் மூன்று, நான்கு மடங்கு என மொத்தமாக வாங்குகிறவர்கள்.
இவர்கள் வாங்குவது வெளியில் தெரியாது. கோடிக்கணக்கான ரூபாயைத் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். வட்டி விகிதக் குறைப்பால் அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. டிமாண்ட் ஆகும்போது இயல்பாகவே விலையேற்றம் ஏற்படும்.
மூன்றாவது காரணம், பிசிக்கல் டிமாண்ட். அதாவது ஆபரணமாகத் தங்கம் அதிக அளவில் தேவைப்படுகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள நம் இந்தியாவில் தங்கம் முக்கிய ஆபரணம். பண்டிகைக் காலங்கள், விசேஷ தினங்கள் வந்தது என்றால் இன்னும் டிமாண்ட் ஆகும். அப்படியாக இந்த பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நேரத்தில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் வந்தன. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்தது. அடுத்து தீபாவளி வந்தது. இதன்பிறகு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இதுதவிர திருமணம், காதுகுத்தல், பூப்புனித நீராட்டு விழா, வீடு கிரகப்பிரவேஷம் எனப் பல விழாக்கள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் தங்கம் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றது. இதுவும் விலையேற்றத்திற்கு முக்கியமான ஒரு காரணம்.
இந்த மூன்று காரணங்களைத் தவிர்த்து நான்காவதாக ஒரு காரணம் உள்ளது. அது, அரசுகள் பல மடங்கு தங்கத்தை வாங்குகின்றன என்பதே. இதில் இந்தியா, ரஷ்யா, ஜெர்மன், சீனா போன்ற நாடுகள் தங்களிடம் ஏற்கனவே ஏகப்பட்ட தங்கம் இருந்தாலும் மீண்டும் மீண்டும் வாங்கிக் குவிக்கின்றன. இதன்வழியாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது.அதுமட்டுமல்ல.
ஒருநாடு தங்கத்தைச் சேர்க்க முக்கிய காரணம், ஒருவேளை அந்நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் போன்ற நிலை ஏற்பட்டால் அப்போது தங்கத்தை மாற்றி பணவீக்கத்தை சரி செய்து கொள்ளலாம் என்பதே. இதனால், பல ஆண்டுகளாக நாடுகளின் நிதி கையிருப்பில் தங்கம் இன்றியமையாத அங்கமாக உள்ளது. இந்தக் காரணங்களால்தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தைச் சந்திக்கின்றது. இப்போது தீபாவளி முடிந்துவிட்டது. இனி, தங்கத்தின் விலையில் சின்ன மாற்றங்கள்
வரலாம். அதிலும் மிஞ்சிப்போனால் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் மாதிரியான இறக்கங்கள் இருக்கும். அவ்வளவுதான்.
இனி, தங்கம் விலை குறையுமா எனக் கேட்டால்... நிச்சயம் பெரிய மாற்றம் வராது. அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் சமயம். தவிர, போர்களும் வீரியம் அடைந்தால் தங்கம் இன்னும் விலையேற்றத்தைக் காணும்.
என்னுடைய கணிப்புப்படி இந்த ஆண்டிற்குள்ளேயே தங்கம் 60 ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும். இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 64 ஆயிரம் ரூபாய் வருகிறது. தற்போது இந்திய அரசு இறக்குமதி வரியை 9 சதவீதமாக குறைத்துள்ளது. அதனால்தான் இந்த விலை.
இருப்பதிலேயே ஜிஎஸ்டி குறைவாக இருக்கும் பொருள் தங்கம்தான். இதற்கு சிறப்புப் பிரிவு என 3 சதவீதமே விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி 6 சதவீதம் போடப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்தால் ஆறு சதவீதம்.
அதே மறுசுழற்சி முறையில் தங்கத்தைப் பயன்படுத்தி இருந்தால் வரி கிடையாது. இப்போது வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்வதால் ஆறு சதவீதம் விதிக்கிறோம்...’’ என்றவரிடம், இனி வரும் காலம் எப்படி இருக்கும் எனக்கேட்டோம்.
‘‘அடுத்து நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இப்போதைய ஒரு கிராம் 7,440 ரூபாய் என்ற தங்கத்தின் விலையானது இன்னும் விலையேற்றத்தைச் சந்திக்கும். அதாவது, இருமடங்காக உயர்ந்து 14 ஆயிரம் ரூபாயைத் தொடும். ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டும் என்பது என்னுடைய கணிப்பு.
ஏனெனில், தங்கம் கடந்து வந்த பாதை அப்படியானது. கடந்த 2023ம் ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்குமான ஒப்பீட்டைப் பார்த்தாலே தெரியும். கடந்த 2023ம் ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கத்தின் விலை 41 சதவீதம் உயர்ந்துள்ளது. இனி 2025ம் ஆண்டு 25 சதவீதமும், 2026ம் ஆண்டு 20 சதவீதமும், 2027ம் ஆண்டு 15 சதவீதமும் எனக் குறைந்த சதவீதத்தில் விலையேற்றம் இருந்தால்கூட, எளிதாக மூன்றே ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை சென்றுவிடும். இன்றுவரை தங்கத்திற்கு மாற்று உலோகம் என எதுவும் இல்லை. தங்கத்திற்கு அடுத்து வெள்ளிதான். ஆனால், வெள்ளியின் நிலைப்பாடு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 54 சதவீதம் உயர்ந்துள்ளது. இது யார் கண்களுக்கும் ெதரிவதில்லை.
ஏனெனில், நம்முடைய பார்வை எல்லாம் தங்கத்தின்மீதுதான் உள்ளது. தங்கத்தையே பிரதானமாகப் பார்க்கிறோம். அடுத்து அனைவரும் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம்... இப்போது பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தங்கம் இன்னும் எட்டு ஆண்டுகள் வரைதான் வெட்டியெடுக்க முடியும்.
அதன்பிறகு நிலத்தில் தங்கம் இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும். நிலத்தில் இருந்து தங்கம் எடுக்க முடியாதபோது நீரிலிருந்து எடுக்கமுடியும் என்கின்றனர். அதாவது ஆழ்கடலுக்கு அடியில் தங்கம் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், இதற்கு நிறைய செலவாகும். நிலத்தில் கிடைக்கும் தங்கத்தை வெட்டியெடுக்கும் செலவைவிட 50 சதவீதம் அதிகம் பிடிக்கும். அப்படிப் போகும்பட்சத்தில் தங்கத்தின் விலை நாம் நினைத்துப் பார்க்காத வகையில் தாறுமாறாக உயரும்...’’ என நம் பல்ஸை எகிற வைக்கிறார் கோல்டு குரு சாந்தகுமார்.
பேராச்சி கண்ணன்
|