STR 49



எத்தனையோ தடைகள், இடையில் பல வருடங்கள் படங்களே இல்லை என்றாலும் கூட ‘நான் உங்கள் ரசிகர்’ என ஒரு நடிகருக்கு ரசிகர்கள் அமைவது அவ்வளவு சுலபமல்ல.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனித்துவமான ஸ்டைல் அடையாளங்களோடு ரசிகர்களை தன் வசப்படுத்தி வலம் வருகிறார் சிம்பு. 
சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதிக்கும் இயக்குநர் டி.ராஜேந்தரின் மகனான இவர், தன் தந்தை இயக்கத்தில்  குழந்தை நட்சத்திரமாக 1984ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியான ‘உறவைக் காத்த கிளி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு @ சிலம்பரசன்.

அதன்பின் பல படங்களில் கவனிக்கத்தக்க குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த சிம்பு ‘காதல் அழிவதில்லை’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். எப்படி ரஜினிகாந்த் என்றாலே வேகம், ஸ்டைல் என தனி முத்திரை இருக்கிறதோ அதேபோல தன் படங்களிலும் தனக்கென தனி அடையாளங்களையும், ஸ்டைல் முத்திரைகளையும் சிம்பு பயன்படுத்தியதால் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியும் பெற்றார்.சிம்பு நடிப்புடன் பாடல் எழுதுவது, பாடுவது, இயக்குவது, தயாரிப்பது, இசையமைப்பது என அப்பா டி.ஆரைப்போல எல்லா துறைகளிலும் கால் பதித்தார்.

ஒரு கட்டத்தில் மிக மெருகேறிய முதிர்ச்சியான படங்களிலும் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இந்த ஆண்டு 2024 தீபாவளியுடன் சிம்பு நடிக்க வந்து 40 ஆண்டுகள் முடிவடைகிறது. 1984ல் ‘உறவைக் காத்த கிளி’ படத்தில் தொடங்கி சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட ‘STR49’ வரை கெத்தாக நிற்கிறார்.

 இதில் 48வது படமாக  கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படம் தன் சினிமா வரலாற்றில் தனி அந்தஸ்தைத் தரும் என எதிர்பார்க்கிறார் சிம்பு.  தனது 50வது படத்தை மிக பிரமாண்டமான படமாகக் கொடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில், ‘தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 - 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்’ எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பும் அவருடைய டிரேட் மார்க் கை சிம்பளுடன் வெளியானது.

 இந்தப் படம் திரில்லர், ஆக்‌ஷன், காதல் கலந்த  திரைப்படமாக இருக்குமாம். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் இந்த 49வது படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. l

காம்ஸ் பாப்பா