ஒரு வீடு... ஒரு பிரச்னை...



ஆம்.ஒரு ஃப்ளாட் டை முன்வைத்த பிரச்னைதான் தெலுங்கு திரையுலகை சுனாமியாக தாக்கிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அந்த ஃப்ளாட்டை நடிகை சமந்தாவும், அவரது முன்னாள் கணவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.நடிகர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்து விவாகரத்து ஆனபிறகு தன் முன்னாள் கணவர் குறித்து இதுவரை சமந்தா எங்குமே பேசியதில்லை. சொல்லப் போனால் விவாகரத்துக்குப் பிறகுதான் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமல்ல; தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைத்துறையில் களமிறங்குவதற்கு முன்பாக சமந்தா மாடலிங் துறையில் பயணித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
கடந்த 2017ம் ஆண்டு, சுமார் ஏழு ஆண்டுகளாக, தான் காதலித்து வந்த நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சூழலில், நான்கு ஆண்டுகள் கழித்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இதன்பிறகு உடல் அளவிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்கான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். அப்பொழுது அவர் காண்பித்த மன உறுதியை இன்றளவும் மக்கள் வியந்து கொண்டிருக்கிறார்கள்.சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா, ஒரு புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.

இச்சூழலில்தான் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறது ஒரு ஃப்ளாட்.நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இருவரும் விரும்பியபடி அந்த வீட்டினை வடிவமைத்து உருவாக்கினார்ர்கள். உண்மையில் அது அவர்களது கனவு வீடாகவே இருந்தது என்றே கூறலாம்.

இந்த ஃபிளாட் வாங்கும் போது, நாக சைதன்யாவை விட சமந்தாதான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவரே கூறியுள்ளார். இது தொடர்பான டாக்குமெண்ட்ஸும் அவர் வசம் இருக்கிறதாம்.

எனவே இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி, அந்த ஃப்ளாட்டை தன்வசம் எடுத்துக்கொள்ளப் போகிறார் என டோலிவுட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.இதற்கிடையில் நடிகை சோபிதாவை நாக சைதன்யா மறுமணம் புரிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சமந்தாவுடன் இணைந்து, தான் வாங்கிய ஃப்ளாட்டில், புது மனைவி சோபிதாவுடன் குடியேற நாக சைதன்யா நினைப்பதாக சொல்கிறார்கள்.
இந்த முடிவுக்கு இச்செய்தியை பிரசுரத்துக்கு அனுப்பிய நொடி வரை சோபிதா சம்மதிக்கவில்லை. அப்படித்தான் ஆந்திர மீடியாக்கள் சொல்கின்றன.ஏனெனில் அந்த ஃப்ளாட்டில் தாங்கள் தங்கினால் தன் கணவர் நாக சைதன்யாவுக்கு பழைய மனைவியின் நினைவு வரலாம் என சோபிதா நினைக்கிறாராம்.

தற்போது அந்த ஃபிளாட்டில் யாரும் இல்லை. என்றாலும் விரைவில் சோபிதாவிற்கு அதை நாக சைதன்யா பரிசளிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சூழலில்தான் சமந்தா நீதிமன்றத்தை நாடப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

காம்ஸ் பாப்பா