தெரு நாய்களால் அல்ல... வீட்டு நாய்களால்தான் ஆபத்து அதிகம்!



எச்சரிக்கிறது நாய்க்கடி குறித்த ஆய்வு

பல்வேறு விலங்குளால் இந்தியாவில் கடிபடுபவர்கள் வருடத்துக்கு 91 லட்சம். இதில் பெரும்பான்மை யானவை நாய்க்கடிதான். அதேபோல் நாய்க் கடியால் மனிதர்களுக்கு தொற்றும் ரேபிஸ் நோயால் இந்தியாவில் வருடத்துக்கு இறப்பவர்கள் சுமார் 5726. இந்தியாவில் சுமார் 20 வருடத்துக்கு முன்பு 20 ஆயிரம் வரை இருந்த ரேபிஸ் இறப்பு, 75 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இருந்தாலும் இன்றைய தேதியில் உலகளவில் ரேபிஸ் இறப்பில் இந்தியாவின் பங்கு 35 சதவீதம் என்றால் கொஞ்சம் மெர்சலாகத்தானே இருக்கிறது?

இந்தப் புள்ளிவிபரங்கள் மட்டுமல்ல, இதுமாதிரி நாய்க் கடி தொடர்பாக அண்மையில் ஒன்றிய அரசின் ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கணக்கெடுப்பு மேலும் என்ன சொல்கிறது என்பதற்கு முன்பாக இந்தியாவில் நாய் தொடர்பான வேறு சில புள்ளிவிபரங்களை பார்த்து விடுவோம்.
இந்தியாவில் 6.2 கோடி தெரு நாய்கள் இருக்கின்றன. வீட்டு நாய்கள் 3.1 கோடி. ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் நோய். நாய்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த நோயை குணப்படுத்துவது வெகு சுலபம். ஆனால், முறையான சிகிச்சை எடுக்காவிடில் மரணம் எக்ஸ்பிரஸ் வேகம்தான்.

இந்தியாவில் ரேபிஸால் இறக்கும் நபர்களில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினர் 15 வயதுக்கும் குறைந்த குழந்தைகள். இனி ஐசிஎம்ஆர் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
ஐசிஎம்ஆரின் ஆய்வு 2022 மற்றும் 2023க்கு இடைப்பட்ட ஓர் ஆண்டுக் காலத்தில் எடுக்கப்பட்டது. இது எல்லாமே வீட்டு நாய்கள் பற்றியவை என்பது நாய்களுக்கு மட்டுமல்ல,
நமக்கும்தான் எச்சரிக்கை.

‘வீட்டு நாய்களில் பாதி அளவு ரேபிஸ் தடுப்பூசி போடப்படாதது. இந்தியாவில் 1000 பேரில் 5.6 பேர் கடிபடுகிறார்கள். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 1000 பேருக்கு 7.5 பேர் கடிபடுகிறார்கள். 60 வயதுக்கு அதிகமானோர்களில் 1000 பேருக்கு 7.8 பேர் கடி வாங்குகிறார்கள். ஆண்களில் 1000 பேருக்கு 7.6, பெண்கள் 1000 பேருக்கு 3.5’ என்று சொல்லும் ஐசிஎம்ஆர் மேலும் புள்ளிவிபர புலியாக மாறுகிறது.

கிராமங்களில் 1000 பேருக்கு 5.8 கடி. நகரத்தில் 1000 பேருக்கு 5.0. இந்தியாவில் 100 நாய்க்கடியில் 39 சதவீதம் வீட்டு நாய்களால் ஏற்படுகிறது. நாய்க்கடி பட்டவர்களில் ரேபிஸ் தடுப்பூசி போடுபவர்களில் ஒரு டோஸ் மட்டும் போடுபவர்கள் 79.5 சதவீதம். 3 டோஸ் போடுபவர்கள் 66.2. எல்லா டோசையும் போடுபவர்கள் வெறும் 40 சதவீதம்தான்... இந்தப் புள்ளிவிபரங்களை வைத்து விலங்கு நல செயற்பாட்டாளரான ஆண்டனி ரூபனிடம் பேசினோம்.

‘‘மொதல்ல தமிழ்நாட்டு நிலைமையை சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டில் இந்த வருடம் மட்டும் 6 லட்சம் நாய்க் கடிகள். இது வீடு மற்றும் தெரு நாய்க்கடி சேர்ந்தது. இதில் சுமார் 36 நபர்கள் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். மொத்த இந்தியாவில் சுமார் 90 லட்சம் நாய்க்கடிகள் என்று ஐசிஎம்ஆர் சொல்கிறது. தமிழ்நாட்டுக் கணக்கு, இந்தியக் கணக்கு எல்லாமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் வந்த இறப்புத் தகவல்கள். 

இதைத் தவிர ரேபிஸ் நோயால் மேலும் சிலர் இறந்திருக்கலாம். அது ஒரு சிறிய பகுதி என்றாலும் அதை நாய் வளர்ப்பவர்களும் அல்லது அந்த நாயால் கடிபட்டவர்களும் அறியாமையால் அந்த தகவல்கள் விடுபட்டிருக்கலாம்...’’ என்று சொல்லும் ரூபன் மேலும் தொடர்ந்தார்.

‘‘வீட்டு நாய்களில் பாதிக்கு மேல் ரேபிஸ் தடுப்பூசி போடுவதில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உண்மையானது. பொதுவாக வீட்டு நாய் வெளியே போனால்தானே கடிக்கும் என்று வீட்டு ஆட்கள் நினைப்பதால்தான் தடுப்பூசியை அலட்சியப்படுத்துகிறார்கள். இந்தியாவில் 6 கோடி தெரு நாய்கள், 3 கோடி வீட்டு நாய்கள் இருப்பதாக ஒரு கணக்கு. 

இதில் 3 கோடி இருக்கும் வீட்டு நாய்களில் 40 சதவீதம் கடிக்கிறது என்றால் மீதி 60 சதவீதம் தெரு நாய்கள் கடிப்பதாகக் கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது தெரு நாய்களைவிட வீட்டு நாய்கள்தானே அதிகமாக கடிக்கிறது?’’ என்று சொல்லும் ரூபன் அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

‘‘தெரு நாய்களைவிட வீட்டு நாய்களுக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி குறைவு. நெருக்கம்தான் வீட்டு நாய்களை கடிக்க வைக்கிறது. அதிலும் தன்னைவிட உயரமும், பருமனும் குறைவான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை நாய்கள் சூழ்நிலையால் கடிப்பது இலகு...’’ என்று சொல்லும் ரூபன், நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசிகள் இந்த நோயை அடியோடு குணப்படுத்தக்கூடியது என்றாலும் நாய்களுக்கும், மனிதர்களும் இந்த தடுப்பூசியை ஏன் செலுத்திக்கொள்ள முன்வருவதில்லை என்றும் விளக்கினார்.

‘‘நாய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போடும் ரேபிஸ் ஊசியின் விலையே 35 ரூபாதான். மருத்துவமனையில் 50 ரூபா கொடுத்து டோக்கன் வாங்கினாலே சல்லிசாக இந்த தடுப்பூசியைப் போடலாம். மனிதர்களைப் பொறுத்தளவில் சில சிக்கல்கள் உண்டு. காரணம், ஒரு டோஸ் ஊசியின் விலை 350 ரூபாய். ஆனால், மரணத்தைவிட மிக மலிவானது இந்த ஊசியின் விலை என்று நினைத்தால் அதை கட்டாயம் செய்யலாம்!

ரேபிஸ் வந்த நாய்கள் இரண்டு வகைப் படும். ஒன்று ‘டம்ப்’ (Dumb - சொங்கி) வகை. இரண்டாவது ‘அக்ரசிவ்’ (Aggressive -ஆக்ரோஷம்). டம்ப் வகை ரேபிஸ் நாய்கள் ஓர் ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும். ஆனால், அக்ரசிவ் வகை நாய்கள் கண்கள் சிவந்து, நாக்கில் எச்சில் வழிய, ஓர் இடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும். அக்ரசிவ் வகை நாயின் நோய்க் குணங்கள் டம்ப் வகைக்கு இருக்காது. ஆனால், இரண்டும் சொல்லமுடியாத காரணங்களால் கடிக்கக்கூடியது. நாய்க் கடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று லேசான உராய்வு அல்லது சிராய்ப்பு மாதிரியான காயம். மற்றது இரத்தம் வரும் அளவு கடி.

இதில் முதல் வகைக்கு ஓடும் தண்ணீரில் கடித்த உடல் பகுதியை சுமார் 15 நிமிடங்களுக்காவது  முதல் சிகிச்சையாக கழுவவேண்டும். பிறகு சோப்புத் தண்ணீரில் மேலெழுந்த வாரியாக மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். காரணம், ஒரு ரேபிஸ் நோய் நாய் ஒருவரைக் கடித்ததும் அந்த வைரஸ் நம் சிராய்ப்புகளில் முதலில் மேலெழுந்தவாரியாகத்தான் இருக்கும். கழுவும்போது வைரஸ் அகலலாம்.

இந்த வகை சிராய்ப்புக்கு நாடி நரம்பு என்றால் 4 தடுப்பூசி போடவேண்டும். ஒருவேளை சதைவழியாக என்றால் 5 ஊசி போடவேண்டும். இந்த 4, 5 தடுப்பூசிக்கும் கணக்கு வைத்திருக்கிறார்கள். அதாவது கடிபட்ட நாள் 0 என்றால் 0, 3, 7, 14, 28 நாள் இடைவெளியில் ஊசியைப் போட்டுக் கொள்ளவேண்டும். ஐசிஎம்ஆர் கணக்குப்படி சுமார் 60 சதவீதத்தினர் முழுமையான ஊசியைப் போடுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறது. இவைதான் மரணங்களுக்கு இட்டுச்செல்கின்றன.

கடிப்பதற்கு முன்பாகவும் சிலருக்கு தடுப்பூசி போடவேண்டிய நிலை இருக்கிறது. விலங்கு மருத்துவர்கள், நாய் பிடிப்பவர்கள் மற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் எல்லோருமே வருடத்துக்கு ஒரு ரேபிஸ் எதிர்ப்பு - சீரம் எனும் ஒருவகை - ஊசியை போட்டுக்கொள்கிறார்கள்...’’ என்று சொல்லும் ரூபன், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறார்.

‘‘மனிதர்களைத் தாக்கும் ரேபிஸ் மரணத்தையாவது அரசு ஓரளவு கண்டுபிடித்துவிடுகிறது. ஆனால், ஒரு நாய் ரேபிஸால்தான் இறந்தது என்று சொல்வதற்கான கணக்கீடுகள், ஆய்வுகள் இந்தியாவில் ஏதாவது இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

நாய்களால்தான் பெரும்பாலும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்று சொல்கிறோம். அப்படி இருக்க நாய்களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோயைக் கண்டுபிடிக்காமல் மனிதர்களுக்கு அது தொற்றும் வகையைக் கண்டுபிடித்து அதை ஒழிப்பது எப்படி?

பொதுவாக வீட்டு நாய்களை கார்ப்பரேஷனில் பதியவேண்டும் என்று சென்னையில்கூட கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பதியும்போது முதலில் கேட்கும் கேள்வி ‘அந்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா’ என்பதே. ஆனால், வீட்டு நாய்களை வளர்ப்பவர்கள் ஊசியும் போடுவதில்லை, பதிவும் செய்வதில்லை.

பதிந்தால்தான் நாய்க்கு வரும் ரேபிஸ் நோய்களைப் பற்றி அரசுக்குத் தெரியவரும். அதைக் களைய அரசு முயற்சிக்கும். இதன் வழியாகத்தானே அது மனிதர்களுக்கும் தொற்றுவது களையப்படும்? இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதும் தீர்வுக்கான வழியாக இருக்கும்...’’ என்கிறார் ரூபன்.

டி.ரஞ்சித்