மதிப்பிழக்கும் பிராண்ட்கள்... கண்டுகொள்ளாத மக்கள்... தலைகீழாகும் உலக மார்க்கெட்!



25 வருட எலக்ட்ரானிக் வளர்ச்சியில் ஆப்பிளின் பிராண்ட் மதிப்பு சரிவைச் சந்தித்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

அதுதான் உண்மை. 2024ம் ஆண்டின் சிறந்த உலகளாவிய பிராண்டுகள் அறிக்கையின்படி, இன்னும் உலகின் மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்ப பிராண்டாக ஆப்பிள் தொடர்ந்து அட்டவணையில் அங்கம் வகித்தாலும் இந்த வருடம் 3% சரிவைச் சந்தித்திருக்கிறது. 2023ம் ஆண்டில் 4% அதிகரிப்பில் இருந்த நிலையில் 2024ம் ஆண்டு 4% மதிப்பிழப்பு என்பது சரியான துவக்கம் அல்ல. இது ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை இடையூறு செய்யும் என்பது உறுதி.

மட்டுமல்ல; உலக அளவில் பல பிராண்ட்கள் தங்களின் மதிப்பை இழந்து வருவதுதான் ஆச்சர்யம். கடந்த 10 வருடங்களாகவே 74% மக்கள் பிராண்ட் மதிப்பிழப்பு குறித்து பெரிதாகக் கவலை கொள்வதில்லை அல்லது குறிப்பிட்ட பிராண்ட்கள் காணாமல் போனாலும் கூட அதற்கு பெரிதாக சலனம் காட்டுவதில்லை.

அதாவது பிராண்ட்களுக்கு மயங்குவதில்லை என்பதுதான் உண்மை. உள்ளூர் அல்லது பக்கத்து நாட்டு உற்பத்தியை விரும்பும் மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டனர். முதலாவதாக கொஞ்சம் கொஞ்சமாக தமது பிராண்ட் மதிப்பை இழந்திருக்கின்றன குழந்தைகளுக்கான பல பிராண்ட்கள். உதாரணத்திற்கு ‘ஜான்சன் & ஜான்சன்’ பேபி கேர் புராடக்ட்கள். அதற்கு மாற்றாக ‘மாமா எர்த்’, ‘ஹிமாலயா’ போன்ற பல உள்நாட்டுத் தயாரிப்பு பிராண்ட்கள் தமது பிராண்ட் மதிப்பை பெருக்கியுள்ளன.  

காரணம், அந்தந்த தேசத்தின் காலநிலை, சூழல் மாற்றம், வெப்பம்... இதெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத்தான் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் புராடக்ட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கக் காரணம் அவை பெரும்பாலும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, காலநிலை, இவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதுதான்.

அதாவது உறையும் பனியில் பயன்படுத்தக் கூடிய புராடக்ட்களை சுட்டெரிக்கும் வெயில் மற்றும் பாலைவன பூமியிலும் பயன்படுத்தினால் எப்படி பயனளிக்கும்?

இதே நிலைதான் எல்லா காஸ்மெட்டிக்ஸ், எலாக்ட்ரானிக் கருவிகளின் நிலையும். உதாரணத்திற்கு, என்னதான் ஆப்பிள் மொபைல்கள் ஸ்மார்ட் போன் பிராண்ட்களில் டாப் ரகம் என்றாலும் இந்திய பொருளாதாரம், ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் ஆப்பிள் போன் பயன்பாடு குறித்து யோசித்துக் கூட பார்க்க இயலாது. எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களைக் கொண்ட ஆசிய நாடுகளில் கொரியா மற்றும் சீனா தயாரிப்புகளான Vivo, Oppo, Redmi, Samsung போன்ற மொபைல் போன்கள் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியான One + வகை போன்களும் கூட அமெரிக்க அடிப்படையைக் கொண்டதால்தான் அதன் விலை குறைந்தது ரூ. 40,000 என்கிற நிலையில் இருக்கிறது. ஓர் ஏழ்மையான குடும்பம் ரூ.40,000 பணத்தை ஒரு ஸ்மார்ட் போனுக்கு ஏன் செலவிட வேண்டும் என்றுதான் யோசிப்பர். 

எனவேதான் ரூ.10000 முதல் அவரவர் தேவைக்கு, பொருளாதார வசதிக்கு ஏற்ப தேவையான வகைகளை அடுக்குகின்றன ஆசிய பிராண்ட்கள்.குறைந்தபட்ச கள ஆய்வு இங்கே தேவை. அதை சரியாகச் செய்ததாலோ என்னவோ அமேசான் தன் மதிப்பில் 8% + மற்றும் மைக்ரோசாஃப்ட் மதிப்பு 11% + என மதிப்பு கூடியிருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

ஒரு காலத்தில் டாப் பிராண்ட் உடைகள், எலக்ட்ரானிக் கருவிகள் எல்லாம் பயன்படுத்தினால்தான் மதிப்பு என்னும் நிலை மாறி உலகின் வளர்ச்சிக்கு, அல்லது தனிமனித வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் அக்கறை காட்டும் பிராண்ட்களின் மதிப்புகள்தான் அதிகரித்து வருகின்றன. மேலும் உலகின் ஆரோக்கியம், மனிதனின் ஆயுட்காலம், சுற்றுச்சூழல் இவற்றிற்கு பயனுள்ள பிராண்ட்களுக்குத்தான் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ முன்னுரிமை கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஆர்கானிக் மற்றும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத புராடக்ட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை 25% அதிகரித்து வருவதாக ஆர்கானிக் இந்தியா மார்க்கெட் ரிப்போர்ட் (Organic India Market Report - 2022) தெரிவிக்கிறது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வருடந்தோறும் ஒரு அப்டேட் மாடலை வெளியிட்டே ஆகவேண்டும் என்னும் உறுதியுடன் இருக்கின்றனரே தவிர அதில் கடைசி நான்கைந்து வருடங்களாக எந்தவொரு பெரிய அப்டேட்டோ அல்லது நவீனத்துவமோ இல்லை என்கிறார்கள் ஆப்பிள் பயனாளர்கள்.
குறிப்பாக எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வை ஆப்பிள் புராடக்ட்களில் இல்லை என்பது சமீபத்திய வாடிக்கையாளர்களின் விமர்சனம்.

பல ஆப்பிள் பயனாளர்கள் கூகுள் போன் மற்றும் சாம்சங் பயன்பாட்டுக்கு மாறிவரும் நிகழ்வும் நடந்து வருகிறது. உடனடி அப்டேட்,  பட்ஜெட்டில் புராடக்ட், நவீனமயம்... எல்லாவற்றிற்கும் மேல் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய குறிக்கோள் இருக்கும் பிராண்ட்கள்தான் தற்போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பாக மாறியிருக்கின்றன. 73% மக்கள் தாங்கள் வாங்கும் பிராண்டுகள் அதிக கடினமான சூழலில் மனிதாபிமானத்தை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 

71% பேர் வெறும் தகவல்தொடர்பு, இன்றைய தேவைகளுக்கு அப்பால் சமூகத்திற்கும் பூமிக்கும் என்ன நல்லது செய்யப் போகிறது என யோசிக்கிறார்கள். 70% மக்கள் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பிராண்ட்களுக்கு தீவிர ஆதரவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

விளம்பர யுக்திகளைக் கண்டுகொள்ளாத பிராண்டுகள்

முன்பு டிவி, ரேடியோ மற்றும் பத்திரிகைகள் மட்டுமே விளம்பரங்களில் முதன்மையாக இருந்தன. உலக டாப் பிராண்ட்கள் இன்னமும் அதே வழிகளில்தான் விளம்பரங்களை கொடுக்கிறார்கள். 

ஆனால், இன்று சமூக வலைதளங்கள், புராடக்ட்களுக்கான உடனடி விமர்சனங்கள் என பல உள்ளூர் பிராண்ட்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடத் துவங்கிவிட்டார்கள். உதாரணத்திற்கு, உலகின் டாப் குளிர்பான நிறுவனத்தின் புராடக்ட் ஒன்று சரியில்லை எனில் குறிப்பிட்ட நிறுவனத்தை எப்படி நாம் அணுகுவது?

 இதே உள்ளூர் புராடக்ட் எனில் அந்தந்த மொழிகளுக்கு, மாநிலங்களுக்கு என வாடிக்கையாளர் சேவை மையம் நிறுவப்பட்டு குறை கேட்டுத் தீர்க்கப்படும்.  அதனால் உள்ளூர் பிராண்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

இன்றைய வாடிக்கையாளர்களுடன் சுலபமாக இணைய இந்த மூன்று வழிகள் அவசியம் என்கிறார்கள் மார்க்கெட் வல்லுனர்கள்.செயல்படுத்துதல் : தயாரிப்பு செயல்பாடு, வாடிக்கையாளர் சேவை, உடனடி குறை தீர்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் அப்டேட் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பகுத்தறிவை செயல்படுத்துதல்.

தனிப்பட்ட தேவை: இன்று தனிமனித வாழ்க்கையின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தனிப்பட்ட தேவை, விருப்பம் அல்லது தனிமனித உணர்வுக்கான முக்கியத்துவம் அளிக்கும் புராடக்ட்களுக்கு தேவை அதிகம்.கூட்டு முயற்சி: உள்ளூர் களம் சார்ந்த முயற்சிகள், செயல்கள், சமூகம், கலாசார கிரகிப்பு மற்றும் அதற்கான செயல்திட்டங்கள் தேவை. குறிப்பாக என்னதான் தனிமனித மதிப்பு அதிகரித்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு குடும்பம் சார்ந்துதான் வாழ்கிறான். ஒரு தனிமனிதனின் குடும்பத்துக்கான கூட்டு முயற்சியும் இங்கே தேவை.

அந்தந்த ஊர்களின், உள்ளூர்களின் விழாக்கள், பண்டிகைகள், பழக்கங்களும் சேர்த்துதான் பிராண்ட் விளம்பரங்கள், சலுகைகள் என யோசிக்க வேண்டும். இதிலிருந்து டாப் பிராண்ட்கள் தவறும் நிலையில் அதன் மதிப்பு இழக்கக் கூடும்.  பண்டிகைக் காலம் தொடங்கும் வேளையில் 68% நுகர்வோர் பணத்தைச் சேமிக்க உரிய சலுகைகளை பிராண்ட்களிடம்  எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக உள்ளூர் மக்களைக் கொண்டு செய்யப்படும் விளம்பர யுக்திகள். இந்த ரேஸ்களில் தன்னை இணைத்துக்கொள்ளாத பல பிராண்ட்கள்தான் கடந்த 10 வருடங்களாக தனது மதிப்பை இழப்பதுடன் காணாமல் போகின்றன என்கிறார்கள் நுகர்வோர் சேவை ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள்.  

ஷாலினி நியூட்டன்