உலர் பூக்கள் தொழிலில் அசத்தும் நாகலாந்து மாநில பெண்கள்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. விவசாயம், கனிமங்கள், கால்நடைகள், தொழில்துறைகள் என பொருளாதாரப் பின்புலம் கொண்ட மாநிலமான இது, இப்போது ட்ரை ஃப்ளவர்ஸ் எனப்படும் உலர் பூக்கள் தொழிலில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளது. இதில் குறிப்பாக பெண் தொழில்முனைவோர்கள் நிறைய பேர் உருவாகத் தொடங்கியிருப்பது நாகலாந்து மாநிலத்தைப் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. இதற்குக் காரணம் நாகலாந்தில் இயற்கையாகவே கிடைக்கும் சில வகை பூக்கள்தான்.
இந்தியாவில் உலர் பூக்கள் தொழில் மையங்களாக தமிழகத்தின் தூத்துக்குடி, கேரளாவின் கொச்சி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.இந்தப் பூக்களுடன், கட் கிரீன்ஸ் (பொக்கேவில் வைக்கப்படும் இலைகள்) எனப்படும் பச்சை இலைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேற்கொள்கின்றன. அதுமட்டுமல்ல. இந்தியா உலர் பூக்கள் தொழிலில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏற்றுமதியில் 320 கோடி ரூபாய் பங்களிப்பை வழங்கும் துறையாக இது மிளிர்கின்றது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் இந்தத் துறையில் பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாகி வருவது இந்தத் துறையை இன்னும் முன்னேற்றும் என்கின்றனர் மலர் வளர்ப்புத் துறை அதிகாரிகள்.
உலர் பூக்கள்…
இயற்கையாகக் கிடைக்கும் மலர்களை உலர வைத்து தயாரிக்கப்படுபவையே உலர் பூக்கள். அதாவது பூக்களை பாதுகாக்கும் ஆரம்பமுறைகளில் ஒன்று உலர்த்துவது. இதனால், நீண்டகாலம் பூக்கள் வாடாமல் இருக்கும்.அப்படியான இந்தப் பூக்கள் அலங்காரத்திற்கும், பரிசளிக்கவும் பயன்படுகின்றன. நாம் திருமணம் உள்ளிட்ட நிகழ்விற்கு பரிசளிக்கும் பொக்கேக்களில் இருப்பது உலர் பூக்கள்தான்.
நாகலாந்தில் எப்படி தொடங்கியது?
நாகலாந்தில் உலர் பூக்கள் என்பது மார்க்கெட் மற்றும் கடைகளில் பொதுவாக காணப்படும் ஒன்று. 1990களிலிருந்து உலர் பூக்கள் தொழில் வந்ததாக அந்தப் பகுதி மக்கள் நம்புகின்றனர். காரணம், புதிய பூக்கள் அழுகுவதைத் தடுக்கவும், சில பருவங்களில் மட்டுமே பூக்கும் பூக்களைத் தொடர்ந்து பராமரிக்கவும் இந்த உலர் பூக்கள் நடைமுறை தொடங்கியதாகச் சொல்கின்றனர். நாகலாந்தின் காலநிலை மற்றும் புவியியல் அமைப்பால் சில பூக்கள் பருவகாலங்களில் மட்டுமே கிடைக்கும்.
இந்நிலையில் அவற்றின் அழகியல் மதிப்பை நீட்டிக்க உலரச் செய்யும் நுட்பத்தை மேற்கொள்ள இந்த மக்கள் நினைத்துள்ளனர். அப்படியாக இவர்கள் உலர் பூக்கள் தொழிலுக்குள் வந்தனர். நாகலாந்தைச் சேர்ந்த சுச்சானோ கித்தான் என்பவர், சிறுவயதில் இதுபோன்ற பருவகால பூக்களை வீட்டில் வளர்த்ததாகச் சொல்கிறார். ‘‘லில்லி பூக்கள் அந்தப் பருவத்தில் மட்டுமே பூப்பவை. அந்தப் பருவம் முடிந்ததும் அது வாடிவிடும். நாங்கள் அந்தப் பூக்களின் அழகைக் காக்கவும், தக்கவைக்கவும் அதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு உலர்த்த ஆரம்பித்தோம்.
என் தந்தைக்கும் காட்டுப்பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் காட்டில் சுற்றும்போது, அவற்றைப் பறித்து வீட்டிற்குக் கொண்டு வந்து உலர்த்துவார்’’ என்கிறார். இருப்பினும் தேவைக்காக ெதாடங்கிய பூ உலர்த்தும் செயல்பாடு பின்னர் பெண்களின் வாழ்வாதாரமாக மாறியது. நாகலாந்து மக்களும் பிறந்தநாள், பண்டிகைகள், திருமணம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு கிஃப்ட்டாக உலர் பூக்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் படிப்படியாக இந்த வணிகமும் வளர ஆரம்பித்தது.
டிஜூவினு டேட்ஸோ என்ற பெண்மணி இந்த உலர் பூக்கள் தொழில் தன் வாழ்க்கையை மாற்றியதாகக் குறிப்பிடுகிறார். ‘‘ஆரம்பத்தில் காய்கறிகள் விற்கும் தொழில் செய்து வந்தேன். பிறகு, 2021ல் பூ விற்பனை வணிகத்திற்குள் வந்தேன். முதலில் அன்று மலர்ந்த ஃப்ரஷ் பூக்களை மட்டுமே விற்க ஆரம்பித்தேன்.
ஆனால், பூக்கள் விரைவாக அழுகி அதில் நிறைய நஷ்டத்தைச் சந்தித்தேன். இந்நிலையில்தான் உலர் பூக்கள் தொழிலுக்குள் வந்தேன். இப்போது எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை. ஆண்டு முழுவதும் எனது தொழில் சிறப்பாக நடக்கிறது. சுற்றுலாப் பயணிகளும், வாடிக்கையாளர்களும் இந்தப் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்’’ என்கிறார் சந்தோஷமாக.
இவர் பூக்களை உலர்த்துவதற்கென்றே தனி ஷெட் வைத்துள்ளார். இதன்மூலம் தனது குடும்பத்திற்கு உதவிகரமாகவும் இருந்து வருகிறார். இதேபோல நாகலாந்து மலர் வளர்ப்போர் சங்கத்தின் துணைத் தலைவரான டெம்சுயாங்லா பொன்ஜென் என்ற பெண்மணி பல ஆண்டுகளாக இந்தப் பூத்தொழிலில் இருப்பவர். தற்போது இன்டோர் பிளான்ட்ஸ் எனப்படும் உட்புற அழகுச் செடிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.
‘‘இந்த இன்டோர் பிளான்ட்ஸ் அதிக டிமாண்ட் கொண்டது. உட்புற அழகுச் செடிகளையும் உலர் பூக்களையும் நன்றாகப் பராமரித்தால் நீண்டஆயுள் கொண்டு அழகாக ஜொலிக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசியல்வாதிக்காக நான் உலர் பூக்களில் பூங்கொத்தை உருவாக்கிக் கொடுத்தேன். அது இன்றுவரை புதியதாகவும் அழகாகவும் அப்படியே இருக்கிறது’’ என்கிறார் அவர்.
இந்த உலர் பூக்கள் வணிகத்தைப் பெண்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் ஒரு தொழில்முனைவோராக இருப்பதற்கான வாய்ப்பையும், நிறைய சுதந்திரத்தையும் அது தருகிறது என்பதால்தான்.
இதற்கு ஒரு உதாரணம், ருகுனு கென்னாவ் என்ற பெண்மணி. இவர் நாகலாந்து தலைநகர் கோஹிமாவின் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தவர். இப்போது பூக்கடை வைத்துள்ளார்.
புதிய பூக்கள் மற்றும் உலர் பூக்கள் இரண்டையும் விற்பனை செய்கிறார். இவரைப் போல பல பெண்கள் இந்த வணிகத்திற்குள் வந்துள்ளனர். நாகலாந்தில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்களில் பலரும் இந்த உலர் பூக்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
பல தேவாலயங்களும் அலங்காரம் செய்வதற்காகவே புதிய மற்றும் உலர் பூக்களை வாங்க தனி பட்ஜெட்டே போடுகின்றன. இதனால் இந்தத் தொழில் முன்னேற்றப் பாதையைக் கண்டுள்ளது. இதற்காகவே கடந்த 2006ம் ஆண்டு நாகலாந்து மலர் வளர்ப்பாளர்கள் சங்கமும் நிறுவப்பட்டது. தற்போது இது மலர் வளர்ப்பாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கும் தங்கள் சந்தை இருப்பை விரிவுபடுத்துவதற்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
இருந்தும் இந்தச் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக உற்பத்தியை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.‘‘புதிய மற்றும் உலர் பூக்களுக்கான டிமாண்ட் நிறைய இருக்கிறது. அதேநேரம் நாகர்களான எங்களிடம் நிலமும், ஏராளமான நீரும், பல பகுதிகளில் வளமான மண்ணும் உள்ளது. இவை அனைத்தும் பூக்களை வளர்ப்பதற்கு ஏற்ற சூழலாக இருப்பவை. இந்த வளங்களை இணைக்க முடிந்தால், இன்னும் வலுவான சமூகமாக மாறலாம்.
அதாவது நாகலாந்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பெண்களை அணிதிரட்டி அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். புதிய பருவகால பூக்களை பயிரிடுவதற்குத் தேவையான பொருட்களை வழங்க வேண்டும். இதனால் கோஹிமா மற்றும் திமாபூர் நகரங்களுக்கு உள்ளூர் பூக்களையே அதிகமாக வழங்கலாம்.
வேறு மாநிலத்திலிருந்து பூக்கள் ஆர்டர் செய்வதை குறைக்கலாம். தவிர, உள்ளூரில் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும். அத்துடன் இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு புதிய மற்றும் உலர் பூக்களை தினசரி ஏற்றுமதி செய்யவும்முடியும்...’’ என நம்பிக்கையாகச் சொல்கின்றனர் அந்தப் பெண்கள். இதனை எல்லாம் கவனத்தில் கொண்டுள்ளதாகச் சொல்கிறது நாகலாந்து மலர் வளர்ப்போர் சங்கம்.
பேராச்சி கண்ணன்
|