கெத்து காட்டிய பெண்கள் கிரிக்கெட் அணி!



இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வென்று டி20 உலகக் கோப்பையை பெற்ற அதே தருணத்தில்தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி பல சாதனைகளைப் படைத்துள்ளது.
தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகிறது. பெங்களூரில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளையும் வென்ற இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை சென்னையில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.இதில்தான் சாதனை மேல் சாதனை படைத்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்தது. இதனையடுத்து 48 ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் சென்னையில் பெண்கள் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. அதில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது.

அப்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சென்னையைச் சேர்ந்த சாந்தா ரங்கசாமி இருந்தார். அதுமட்டுமல்ல. அப்போது பெண்கள் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்கள் கொண்டதாக இருந்தது. இதில் மழை குறுக்கிட போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் தற்போது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. இதில் முதல் நாளில் மட்டும் 525 ரன்கள் குவித்தது. ஒரு நாளில் ஐந்நூறு ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது. இந்த சாதனை இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் இரண்டிலும் செய்யப்படவில்லை. ஆண்கள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு இலங்கை அணி ஒருநாளில் 509 ரன்கள் குவித்ததே இதுவரையிலான சாதனை.

பெண்கள் கிரிக்கெட்டில் 1935ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாளில் 431 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது இங்கிலாந்து அணி. இதையெல்லாம் மொத்தமாக தகர்த்துள்ளது இந்திய பெண்கள் அணி. அத்துடன் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 575 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதனை சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  ஆஸ்திரேலியா அணி செய்திருந்தது.

அதையும் சேப்பாக்கம் மைதானத்தில் தகர்த்தனர் இந்திய பெண்கள் அணியினர். ஒரு இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர். இதில் இந்திய ஓபனிங் பேட்ஸ்வுமன்கள் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் தலா 149, 205 ரன்கள் குவித்தனர்.  இதில் ஷபாலி வர்மா ஒரேநாளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அத்துடன் எட்டு சிக்சர்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் ஒருநாளில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்களை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

செய்தி: பி.கே.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்