வட பாவ் கேர்ள்!



உலகின் பிரபலமான ஸ்நாக்ஸ் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது, வட பாவ். ஐம்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட உணவு இது. மும்பையின் முக்கியமான தின்பண்டமும், மலிவான தெருவோர உணவும் இதுவே. 
சாதாரண தொழிலாளிகள் முதல் ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் வரையிலான பிரபலங்களுக்கும் பிடித்தமான உணவாக வட பாவ் இருந்து வருகிறது.

ஆம்; டிம் குக் பிசினஸ் விஷயமாக மும்பைக்கு வந்தபோது வட பாவ் சாப்பிட்டுவிட்டு அதைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார். வட பாவை சாப்பிடுவதற்காகவே மறுபடியும் மும்பைக்கு வருவேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு ஒருமுறை சுவைத்துவிட்டால் நம்முடனே ஒட்டிக்கொள்ளும் ஓர் உணவு இது. 
தவிர, மும்பை கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட வட பாவை, ‘பாம்பே பர்கர்’ என்றே அழைக்கின்றனர். மும்பையில் மட்டுமே வட பாவ்க்கு என்று பிரத்யேகமாக 20 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மும்பையின் தெருவோரக் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட வட பாவ், இன்று இந்தியாவின் முக்கிய உணவகங்களில் எல்லாம் கிடைக்கிறது.

இத்தகைய வட பாவ் பிசினஸில் கொடிகட்டிப் பறந்து வருகிறார், சந்திரிகா தீக்‌ஷித். இவரை ‘வட பாவ் கேர்ள்’, ‘தில்லியின் வட பாவ் ராணி’ என்று வாடிக்கையாளர்கள் அழைக்கின்றனர்.
யார் இந்த வட பாவ் கேர்ள்?சில வருடங்களுக்கு முன்பு இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பில் முன்னோடியான ‘ஹல்திராம்’ நிறுவனத்தில் வேலை செய்து வந்தார், சந்திரிகா தீக்‌ஷித்.
இவரது கணவருக்கு ‘ரேபிடோ’ கம்பெனியில் வேலை. சந்திரிகாவுக்குக் காலையிலிருந்து மாலை வரை வேலை. ஆனால், கணவருக்கு வேலை நேரம் மாறி, மாறி வரும். எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது.

சில நாட்களில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை இருக்கும். அதனால் மகனை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடும். இந்நிலையில் சந்திரிகாவின் மகனுக்கு டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது. மகனைக் கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டார் சந்திரிகா. கணவருடைய வருமானம் மட்டுமே குடும்பத்தை நகர்த்துவதற்குப் போதுமானதாக இல்லை.

மகனையும் கவனித்துக்கொண்டு, வருமானமும் ஈட்ட வேண்டுமானால் சொந்தமாக தொழில் செய்தால் மட்டுமே சாத்தியம். அதனால் தனக்குப் பிடித்தமான சமையல் வேலையில் இறங்கினார். அதுவும் மும்பையின் ஸ்பெஷலான ஒரு உணவை தில்லிக்குக் கொண்டுவந்தார்.

ஆம்; தில்லியில் உள்ள சைனிக் விஹாரில் அமைந்திருக்கும் சாலையோரத்தில் தள்ளு வண்டியில் வட பாவ் விற்பனை செய்ய ஆரம்பித்தார் சந்திரிகா.
சுற்று வட்டாரத்திலேயே எங்கேயும் கிடைக்காத சுவையுடன் வட பாவைக் கொடுக்க, வாடிக்கையாளர்கள் கூட்டம் சந்திரிகாவின் கடையை மொய்த்தது. விரைவிலேயே கடையிருந்த பகுதி முழுவதும் பிரபலமானார். சந்திரிகாவின் கடையில் கிடைக்கும் வட பாவை ருசிப்பதற்காக தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து எல்லாம் மக்கள் படையெடுத்தனர்.

சைனிக் விஹாரின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது சந்திரிகாவின் வட பாவ். வருமானம் கொட்டத் தொடங்கினாலும் அதே தள்ளு வண்டியில் தன்னுடைய பிசினஸைத் தொடர்ந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அமித் ஜிண்டால் என்ற யூடியூபர் சந்திரிகாவின் வட பாவ் கடையைப் பற்றிய வீடியோவைத் தனது சேனலில் வெளியிட, ஒரே நாளில்  இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். 

குறிப்பாக அந்த வீடியோவில் சந்திரிகா வட பாவ் செய்கின்ற ஸ்டைலும், அதை அவர் விற்பனை செய்யும்அழகும் பார்வையாளர்களை வியப்படையச் செய்தன. டெல்லியைத் தாண்டி மற்ற ஊர்களிலிருந்து எல்லாம் மக்கள் வரத் தொடங்கினார்கள். வியாபாரம் சிகரத்தை தொட்டது.

இன்னொரு பக்கம் சாலையோரத்தில் கடை வைத்திருப்பதால் மாநகராட்சியின் கெடுபிடிகளையும், சட்ட திட்டங்களையும் சந்திரிகா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடையை காலி செய்யச் சொல்லி நிறைய அழுத்தங்கள் விழுந்தன. அதே நேரத்தில் இணைய வெளியில் சந்திரிகாவிற்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே போயின. மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு தொகையைச் செலுத்திவிட்டு, கடையை நடத்தினார் சந்திரிகா. 

தவிர, சாலையோரத்தில் கடை இருப்பதால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வண்டிகளை ஆங்காங்கே சாலையிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால் கடையிருக்கும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; எப்போதும் கடையைச் சுற்றி  ஐம்பது பேருக்கும் குறைவில்லாமல் இருப்பதால் இரைச்சல் அதிகமாக இருக்கும்.

இதனால் கடைக்கு அருகே வசித்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களும் கடையை அகற்றச் சொல்லி மாநகராட்சியிடம் முறையிட்டனர். இதனால் காவல்துறைக்கும், சந்திரிகாவுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. இணையவாசிகளின் ஆதரவுக்கரம் இந்தப் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்து, கடையை நடத்த சந்திரிகாவுக்கு உதவியது. 

சமீபத்தில் தில்லியில் வட பாவ் விற்பனை செய்வதற்காக ஒரு கஃபேவைத் திறந்திருக்கிறார். இன்று சந்திரிகாவின் சொத்து மதிப்பு 1.5 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. வட பாவ் விற்பனையின் மூலம் ஈட்டிய சொத்து இது. ஆம்; தினமும் வட பாவ் விற்பனையின் மூலம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் சந்திரிகா.

த.சக்திவேல்