கோடீஸ்வரர்கள் வசிக்கும் கிராமம்!



பொதுவாக இந்திய பில்லியனர்கள், இந்திய மில்லியனர்கள் என இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பற்றியே தெரிந்திருப்போம். அவர்கள் அனைவரும் பெருநகரவாசிகள்.
ஆனால், ஒரு கிராமம் 80 கோடீஸ்வரர்களைக் கொண்டிருக்கிறது என்பதை கேள்விப்பட்டிருப்போமா? அதுவும் அது ஒரு மிகச்சிறிய கிராமம் என்றால்..?
நிச்சயம், ஆச்சரியமும் வியப்பும் தானாகவே கூடிவிடும் அல்லவா!?    

அப்படியொரு கிராமத்தின் கதைதான் இது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் இருக்கிறது ஹிவாரே பஜார் கிராமம். சுமார் 1,250 பேர் வசிக்கும் மிகச்சிறிய கிராமம் இது.
மொத்தம் 305 குடும்பங்கள்தான். இதில் 80 குடும்பத்தினர் கோடீஸ்வரர்கள்; 50 குடும்பத்தினர் ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள்.
இவர்கள் அனைவரும் விவசாயிகள் என்பதுதான் ஹைலைட்!

கடந்த 1995ல் இவர்களின் சராசரி மாத வருமானம் வெறும் 830 ரூபாய்தான். ஆனால், இன்று தனிநபர் ஒருவரின் மாத வருமானம் மட்டுமே சராசரியாக 30 ஆயிரம் ரூபாய்!
அதுமட்டுமல்ல. கடந்த 1972ல் வறட்சியாலும் வறுமையாலும் நிலைகுலைந்த கிராமம் இது. ஒருசொட்டு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப்  போனது.
ஒருகட்டத்தில் கிராமவாசிகள் பலரும் பிழைப்பிற்காக இந்தக் கிராமத்தைவிட்டே வெளியேறிச் சென்றனர்.

ஆனால், 1990க்குப் பிறகு இந்த நிலைமை முற்றிலும் மாறியது. அது எப்படி நடந்தது என்பதே இந்தக் கிராமத்தின் வெற்றிக் கதை. உண்மையில் அதை நிகழ்த்திக் காட்டியவர் போபட்ராவ் பாகுஜி பவார் என்பவர். இவர், இந்தக் கிராமத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை படித்த ஒரே நபர். ஹிவாரே பஜார் கிராமத்தின் வறட்சியை போக்கி உலகமே வியக்கும் ஒரு மாதிரி கிராமமாக மாற்றிக் காட்டியவர்.

1989ல் கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற போபட்ராவ் கிராமத்தின் பிரச்னைகளைத் தீவிரமாக ஆராய்ந்தார். வறட்சி, வேலையின்மை ஆகியவற்றால் கிராமத்தினர் குடி, சூதாட்டம், சண்டை, சச்சரவு எனக் காலத்தைத் தள்ளிக் கொண்டு இருந்தனர்.இதனால், முதல்கட்டமாக கிராமத்தில் இருந்த 22 மதுக்கடைகளை மூடினார் போபட்ராவ் பவார். போலவே, புகைபிடிப்பதற்கும் தடைவிதித்தார். இதனால் எழுந்த பிரச்னைகளை எல்லாம் எதிர்கொண்டு சமாளித்தார். மக்களிடம் நேரடியாகச் சென்று பேசினார்.

தொடர்ந்து சிறிய அளவே மழைப்பொழிவைப் பெறும் தன்னுடைய கிராமத்தை தண்ணீர் நிறைவான கிராமமாக மாற்ற முயற்சி எடுத்தார். இதற்காக கிராம சபை மூலம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுடன் கைகோர்த்து கிராமவாசிகளுக்கு லோன் வழங்க ஏற்பாடு செய்தார்.முதல்கட்டமாக மழைநீர் சேகரிப்பையும், தண்ணீர் பாதுகாப்பு திட்டத்தையும் தொடங்கினார். 1990களில் 90 கிணறுகளே கிராமத்தில் இருந்தன. அதை 294 கிணறுகளாக மாற்றினார். அவரின் நற்செயலைப் புரிந்துகொண்ட கிராமவாசிகள் அவருக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

இதனுடன் 9 தடுப்பு அணைகள் கட்டி தண்ணீர் பிரச்னை வராமல் இருக்க நீர் சேகரிப்புக்கும் வழிவகுத்தார். இதனால் கிராமத்தின் நிலத்தடிநீரும் 30 அடி வரை உயர்ந்தது. அத்துடன் கிராமவாசிகள் தண்ணீர் தேவை குறைவான பயிர்களைப் பயிரிடும்படி செய்தார்.சுற்றிலும் பத்து லட்சம் மரங்கள் நட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் நிறைவான, விவசாயம் செழிப்பான கிராமமாக தன்னுடைய கிராமத்தை கிராம மக்களுடன் இணைந்து மாற்றினார் போபட்ராவ்.

விவசாயம் மூலம் கிராமத்தினர் நல்ல வருமானம் ஈட்டத் தொடங்கினர். இதனால், கிராமத்தைவிட்டு வெளியேறிய பலரும் மீண்டும் கிராமத்திற்கு வந்தனர். இந்தியாவில் உள்ள மற்ற கிராமங்களைவிட இரண்டு மடங்கு அதிக வருமானம் ஈட்டும் கிராமமாக மாறியது அது.  அதுமட்டுமல்ல. 1995ல் 182 குடும்பங்களில் 168 குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்தன. இன்று வறுமைக்கோடு என்பதே அங்கு இல்லை.

ஆம். இன்று ஹிவாரே பஜார் சுத்தமான சாலைகள், பசுமையான வயல்வெளிகள், சிறப்பாக கட்டப்பட்ட வீடுகள் என அழகாகக் காட்சியளிக்கிறது. அத்துடன் இன்று திறந்தவெளி மலம் கழித்தல், புகைப்பிடித்தல், காடுகள் அழித்தல், மது அருந்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது எல்லா வீடுகளிலும் கழிப்பறை வசதி, பயோகேஸ் பயன்பாடு ஆகியவை உள்ளன. பள்ளிகளும், சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கின்றனர். மின்சாரமும், நிறைவான தண்ணீர் வசதியும் அனைத்து வீடுகளிலும் இருக்கின்றன.

அத்துடன் இன்று அவர்கள் மாடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 1990களில் நாள் ஒன்றுக்கு 125 லிட்டர் பால் உற்பத்தி செய்தனர். இன்று 3 ஆயிரத்து 325 லிட்டர் நாளொன்றுக்கு உற்பத்தி செய்கின்றனர். பொருளாதாரத்தில் தன்னிறவு பெற்ற கிராமமாக ஜொலிக்கிறது ஹிவாரே பஜார் கிராமம். 

இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் போபட்ராவ் பவார். அவரைப் பற்றி பிரதமர் மோடி மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசி புகழாரம் சூட்டினார். 2020ல் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. மகாராஷ்டிரா அரசு, மாதிரி கிராம திட்டத்தின் சேர்மனாக அவரை நியமித்திருக்கிறது.

பேராச்சி கண்ணன்