வாசனை அரசன்!



உலகின் மிகப்பழமையான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று, ‘கெர்லான்’. இன்று நாம் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களுக்கு அடித்தளமிட்ட பிராண்ட் இது. இதன் அழகு சாதனப் பொருட்களும் தனி ரகம். பேரரசர் நெப்போலியன், ராணி விக்டோரியா, ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்... என இதன் வாடிக்கையாளர்களின் பெயரே ‘கெர்லானி’ன் சிறப்பைச் சொல்கிறது.
இந்த பிராண்டை உருவாக்கியவர் பியர் பிரான்சோஸ் பாஸ்கல் கெர்லான்.

ஃபிரான்ஸில் வாழ்ந்து வந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், பியர் பிரான்சோஸ் பாஸ்கல் கெர்லான். பியருக்கு பத்து வயதாக இருந்தபோது, அவரது உறவினர் மூலமாக வாசனைத் திரவியம் அறிமுகமானது. அதற்கு முன்பு அவருக்கு வாசனைத் திரவியத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. வாசனைத் திரவியத்திலிருந்து வெளிப்பட்ட நறுமணம் சிறுவன் பியரை அப்படியே ஆக்கிரமித்துவிட்டது. அதற்கு முன்பு அப்படி ஒரு நறுமணத்தை பியர் சுவாசித்ததே இல்லை. அந்த நறுமணம் அவருக்குள் புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்தது.
அதனால் வாசனைத் திரவியத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆர்வம் பியருக்குள் அதிகமானது.

ஒரு நாள் வீட்டில் கூட சொல்லிக்கொள்ளாமல், வாசனைத் திரவியம் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார். இந்த ஆய்வுக்கூடம் அவர் வீட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. பியரை ஆய்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை. இந்தச் சம்பவம் அவருக்குள் உலகிலேயே சிறப்பான வாசனைத் திரவிய நிபுணராக வேண்டும் என்ற வைராக்கியத்தை விதைத்தது.

எப்படியெல்லாம் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன, என்ன மாதிரியான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையெல்லாம் தேடித்தேடி அறிந்துகொண்டார். அனுபவ அறிவின் மூலமாகவே வேதியியல் நிபுணராகவும், பெர்ஃபியூமராகவும் உயர்ந்தார். பதினெட்டு வயதிலேயே, தானாகவே ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்கினார். இந்த வாசனைத் திரவியத்தை உருவாக்குவதற்காக ஆயிரத்துக்கும் மேலான முறை பரிசோதனை செய்து பார்த்தார்.  

மட்டுமல்ல, மூலப்பொருட்களை மாற்றி, மாற்றி பரிசோதனை செய்தார். ஆய்வுக்கூடமே கதி என்று வருடக்கணக்காக அங்கேயே இருந்தார். அவருக்கு  திருப்தி தரக்கூடிய நறுமணம் கிடைக்கும் வரை பியர் ஓயவே இல்லை. தவிர, முக்கிய மூலப்பொருளான மலர்களைத் தேடி பியரே சென்றார். அதுவரைக்கும் யாருமே பயன்படுத்தாத மலர்களைப் பயன்படுத்தினார். 1828ம் வருடம் பியருக்கு விருப்பமான வாசனைத் திரவியத்தைக் கண்டுபிடித்தார். அதே வருடத்தில் பாரீஸ் நகரில் ‘கெர்லான்’ என்ற பெயரில் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்யும் கடையைத் திறந்தார் பியர்.

இந்தக் கடைதான் ‘கெர்லான்’ எனும் மாபெரும் காஸ்மெட்டிக் சாம்ராஜ்யத்தின் ஆரம்பப்புள்ளி. பியரின் கடையிலிருந்த வாசனைத் திரவியங்களின் நறுமணம் தெரு முழுவதும் வீசியது. நறுமணத்தை சுவாசித்தவர்கள் எல்லோரும் ஒருவித புத்துணர்வைப் பெற்றனர். அந்த நறுமணமே வாடிக்கையாளர்களை கடையை நோக்கி இழுத்தது. விற்பனை அள்ளியது.
பியரைப் பற்றி கேள்விப்பட்ட செல்வந்தர்களும் கடையை நோக்கிப் படையெடுத்தனர். அந்த செல்வந்தர்கள் முன்பே பல வகையான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துபவர்கள். அதனால் அவர்கள் தங்களுக்கு இந்த வகையான நறுமணம் வீசும் வாசனைத் திரவியம் வேண்டும் என்று பியரிடம் ஆர்டர் கொடுத்தனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உகந்த வாசனைத் திரவியங்களையும் தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார் பியர். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. பியரின் இந்த முறையைத்தான் இன்றைய வாசனைத் திரவிய நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. உதாரணத்துக்கு சமீபத்தில் ஒரு நேர்காணலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், ‘‘‘டன்ஹில்’ எனும் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதாகவும், அது வழக்கமாக கடையில் கிடைக்காது...’’ என்றும் சொல்லியிருந்தார்.

ஆம்; அந்த வாசனைத் திரவியம் ஷாருக்கானின் விருப்பப்படி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வாசனைத் திரவியமாகும். இதற்கு விதை போட்டதே பியர்தான்.வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்குத் தேவையான வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க ஆரம்பித்ததிலிருந்து, செல்வந்தர்களால் மட்டுமே வாங்கக்கூடிய ஒரு பிராண்டாக மாறியது, ‘கெர்லான்’.   1840லேயே பாரிஸின் முக்கிய தெருவான ரூ டே ல பைக்ஸ் ஒரு கடையைத் திறந்தது, ‘கெர்லான்’. 1853ம் வருடம் ஃபிரான்ஸின் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவி யூஜினுக்காக ‘Eau de Cologne Imperiale’ என்ற வாசனைத் திரவியத்தை பிரத்யேகமாகத் தயாரித்தது, ‘கெர்லான்’.

இந்த வாசனைத் திரவியம் அரச குடும்பத்தின் மத்தியில் பியருக்கு பெரும் கௌரவத்தை ஈட்டிக் கொடுத்தது. மட்டுமல்ல, அரச குடும்பத்தினருக்குத் தேவையான வாசனைத் திரவியங்களைத் தயாரித்துக்கொடுக்கும் பெர்ஃபியூமர் பதவியும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அடுத்து இங்கிலாந்தின் ராணி விக்டோரியா, ஸ்பெயினின் ராணி இரண்டாம் இஸபெல்லா உட்பட முக்கிய அரச குடும்பத்தினர் எல்லோரும் ‘கெர்லான்’ வாசனைத் திரவியத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக மாறினார்கள். 
1864ல் பியர் மரணமடைய, அவருடைய மகன்களான எய்மே கெர்லான் மற்றும் கேப்ரியல் கெர்லானின் கைகளுக்கு ‘கெர்லான்’ வந்தது.நிறுவனத்தை கேப்ரியல் நிர்வகிக்க, எய்மே பெர்ஃபியூமர் பொறுப்பை எடுத்துக்கொண்டார். ‘Fleur d’Italie’, ‘Rococo’, ‘Eau de Cologne du Coq’ போன்ற புகழ்பெற்ற வாசனைத் திரவியங்களை உருவாக்கினார் எய்மே.

1889ம் வருடம் அவர் உருவாக்கிய ‘ஜிக்கி’யைத்தான்  எய்மேவின் முக்கியமான வாசனைத் திரவியமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ‘ஜிக்கி’ என்பது எய்மேவின் காதலியின் செல்லப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த வாசனைத் திரவியம்தான் ‘eau de parfum’ என்ற விவரிப்புடன் வந்த உலகின் முதல் வாசனைத் திரவியம். இதற்கு முன்பு ‘eau de cologne’ என்ற விவரிப்புடன்தான் வாசனைத் திரவியங்கள் வெளிவந்தன. மட்டுமல்ல, இயற்கையான மூலப்பொருட்களுடன் சில வேதிப்பொருட்களையும் கலந்து உருவான உலகின் முதல் வாசனைத் திரவியமும் ‘ஜிக்கி’தான்.  

கேப்ரியல் மற்றும் எய்மேவுக்குப் பிறகு கேப்ரியலின் மகன்களான ஜாக்குவஸ் மற்றும் பியர் கெர்லானின் கைகளுக்கு ‘கெர்லான்’ வந்தது. ‘கெர்லான்’ நிறுவனத்தின் மூன்றாவது மாஸ்டர் பெர்ஃபியூமராகப் பதவியேற்றார் ஜாக்குவஸ்.
இவரது சூத்திரங்களை அடிப்படையாக வைத்துதான் இன்றைய நவீன வாசனைத் திரவியங்கள் உருவாக்கப்படுகின்றன. புதுப்புது வாசனைத் திரவியங்கள் வந்துவிட்டதால், ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் மற்றும் செல்வந்தர்களின் மத்தியில் பிரபலமாக இருந்த வாசனைத் திரவியங்களுக்கு  பெரிதாக மதிப்பில்லை. அதனால் அந்த வாசனைத் திரவியங்கள் சந்தையில் கிடைப்பதில்லை.

ஆனால், 100 வருடங்களுக்கு முன்பு ஜாக்குவஸ் தயாரித்த வாசனைத் திரவியங்கள் இன்றும் சந்தையில் கிடைக்கின்றன. அந்த வாசனைத் திரவியங்கள் உருவான காலத்தில் என்ன மதிப்பு இருந்ததோ, அதைவிட கூடுதலான மதிப்பு இப்போது இருக்கிறது.

 ‘Mouchoir de Monsieur’, ‘Apres L’Ondlee’, ‘L’Heure Bleue’, ‘Mitsouko’, ‘Shalimar’, ‘Vol de Nuit’, ‘Ode’  என்று ஜாக்குவஸ் உருவாக்கிய வாசனைத் திரவியங்களின் பட்டியல் நீள்கிறது. ஜாக்குவஸுக்குப் பிறகு அவரது பேரன், ழான் பால் கெர்லான் நான்காம் மாஸ்டர் பெர்ஃபியூமராக பொறுப்புக்கு வந்தார். இன்று சந்தையில் சக்கைப்போடு போடும் ‘கெர்லானி’ன் வாசனைத் திரவியங்களை உருவாக்கியது இவர்தான்.

ஆண்களுக்கான பிரத்யேக வாசனைத் திரவியங்களான ‘Vetiver’, ‘Habit Rouge’, ‘Chant d ’Aromes’, ‘Chamade’, போன்றவற்றை ழான்தான் உருவாக்கினார். தவிர, பிரபல பெர்ஃபியூமரான ஆந் மரியா சாகேட்டுடன் இணைந்து, ‘Nahema’, ‘Jardins de Bagatelle’, ‘Derby’, ‘Samsara’, ‘Heritage’, ‘Coriolan’, ‘Vetiver pour Elle’ ஆகிய வாசனைத் திரவியங்களை உருவாக்கினார். 

இந்த வாசனைத் திரவியங்களும் இன்றும்கூட சந்தையில் கிடைக்கின்றன. 1994ல் ‘எல்விஎம்ஹெச்’ என்ற நிறுவனம் ‘கெர்லானை’க் கையகப்படுத்தியது. இன்று ‘கெர்லான்’ பிராண்டில் வாசனைத் திரவியங்கள் மட்டுமல்லாமல் ஹேர் கேர், ஸ்கின் கேர் உட்பட ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன.  

த.சக்திவேல்