ஆக்‌ஷன் ரோல் மட்டுமில்ல...ரொமான்ஸும் செய்வேன்!



சிறுவாணி தண்ணீர் குடித்து வளர்ந்த கோயமுத்தூர் பெண் சாய் பிரியங்கா ரூத். ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து ‘மெட்ரோ’, ‘இரவின் நிழல்’ போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பைக் கொடுத்து கோலிவுட்டில் தன்னை தக்கவைத்துக் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘பயமறியா பிரம்மை’ படத்தில் இவருடைய அதிரடியான நடிப்பை ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய நிலையில் சாய் பிரியங்கா ரூத்திடம் பேசினோம்.

‘பயமறியா பிரம்மை’ படத்தில் துப்பாக்கி பிடிச்ச அனுபவம் எப்படி?

என்னுடைய படங்களை பார்த்துவிட்டுதான் என்னை தொடர்பு கொண்டார்கள். பரீட்சார்த்த ரீதியான படம் அது. நடிகையாக எனக்கு நல்ல அனுபவம் கிடைச்சது. நான் பண்ணிய படங்கள் எல்லாமே அப்படித்தான் அமைஞ்சிருக்கு. இயக்குநர் ராகுல் கபாலி ஃப்ரெண்ட்லியா வேலை வாங்கினார். ஆர்ட்டிஸ்ட்டுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். அதனால் என்னுடைய ஸ்டைலில் நடிக்க முடிஞ்சது.

எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூப்பிடுறாங்க?

குறிப்பிட்டு சொல்ல முடியாது. சினிமாவில் டைப்காஸ்ட் ரோல் வரத்தான் செய்யும். கதைகள் என்னைத் தேடி வருவதைவிட எந்தக் கதைகளில் நான் இருக்க நினைக்கிறேன் என்றால் நல்ல டீம், நல்ல கதைகளில் இருக்கணும். இந்த மாதிரி கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லை. எல்லோரும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ பற்றி பேசுகிறார்கள். அது என்னுடைய முதல் படம். ‘இரவின் நிழல்’, ‘இருதுருவம்’ வெப் சீரீஸ் என எல்லாமே வித்தியாசமான படைப்புகள்.  

அடிக்கடி காணாமல் போகிறீர்களே?

அப்படிச் சொல்ல முடியாது. ஒரு ஆர்ட்டிஸ்ட் சராசரியா வருஷத்துக்கு இரண்டு படம் பண்ணலாம். அதுல ஒரு படம் பேசப்படும். அப்படி வருஷத்துக்கு ஒரு படம் பேசப்படும் படமா இருந்துள்ளது. போன வருஷம் ‘இரு துருவம்’. அதற்கு முந்தைய வருஷம், ‘இரவின் நிழல்’ என ஒவ்வொரு வருஷத்துக்கும் பேசும்படியான படங்கள் பண்ணியிருக்கிறேன். சினிமாவில் பிசினஸ் மாதிரி டெய்லி வேலை கிடைக்காது. அதே சமயம் பிஸி ஆர்ட்டிஸ்ட்ன்னு சொல்லும் இடத்துக்கு இன்னும் நான் வரவில்லை.

நடுவுல படிப்பும் இருந்துச்சு. ஆரம்பத்துல பரீட்சை லீவுல நடிப்பேன். வீட்ல உள்ளவங்க நான் டிகிரி முடிக்கணும் என்பதுல உறுதியா இருந்தாங்க. சினிமாவுல நடிக்க முழுசா அனுமதிக்கல. போன வருஷத்துலருந்துதான் சினிமாவுல தீவிரமா கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

சினிமா, வாழ்க்கையின் முக்கிய அங்கமா மாறும்ன்னு எதிர்பார்த்தீங்களா?

சின்ன வயசுலருந்து டான்ஸ், டிராமா, கதை எழுதுவது பிடிக்கும். அதுதான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்துச்சு. சினிமாவுல இப்ப சரியான இடத்துல இருக்கிறேன். சினிமா எங்கே அழைச்சுட்டுப்போகுதோ அங்கே போவேன். என்னுடைய பாதையை நான் உருவாக்கலை. எனக்குப் பிடிச்ச வேலையைச் செய்தேன். 

அது என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நடிக்கணும்னு சொல்லும்போது வீட்ல ஒத்துக்கல. பத்தாம் கிளாஸ் படிக்கும்போது ஆங்கர் ஆகணும் என்ற ஆசையில சன் மியூசிக்ல அப்ளை பண்ணி ஆடிஷன் பண்ணியிருக்கிறேன். ஆனால், வீட்ல விடல. நான் டாக்டர் ஆகணும் என்பது அப்பாவின் ஆசை. அம்மாவுக்கும் அதுதான் ஆசை. எனக்கு கலை மீது ஆசை.

அதிகமான உழைப்பு கொடுத்த படம் எது?

எல்லா படங்களுக்கும் மெனக்கெடல் தேவைப்படுது. நிறைய இயக்குநர்களுக்கு நான் பரிச்சயமாகவில்லை. சாய் பிரியங்கா ரூத் ஆக்‌ஷன் படங்களில் நடிச்சிருக்கிறார், லவ் படங்களில் நடிக்க விரும்புகிறார் என்பது வெளியே தெரியணும். அது தெரிகிற மாதிரி இன்னும் சூழ்நிலை அமையவில்லை. முதல் படம் அவ்வளவு எளிதா கிடைக்கவில்லை என்று முன்பு சொல்லியிருந்தீர்கள்? இப்போது வாய்ப்புகள் எளிதாகியுள்ளதா?

முதல் படத்துக்கு என்ன சூழ்நிலை இருந்துச்சோ அதுதான் இப்பவும் நடக்குது. முன்பு ஆடிஷன் போவேன். அது மட்டும்தான் இப்ப கட்டாகியிருக்கு. மத்தபடி இப்படி ஒரு பொண்ணு இருக்கிறார் என்பதை தெரியப்படுத்துவது டஃப் ஜாபா இருக்கு. இயக்குநர்கள் என்னை மனசுல வெச்சு எழுதக் கூடிய இடத்துக்கு நான் இன்னும் வரவில்லை. நான் என்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வேலையை தொடர்ந்து செய்யும்போது, கமர்ஷியல் ஹிட் கொடுக்கும்போது அந்த மேஜிக் நடக்கும்.

ஆனால், அதற்கு சில காலம் பிடிக்கும். அந்தவகையில் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பட வாய்ப்பு அமைவது கடினம். போட்டி அதிகமாகியுள்ளது. கதைக்குப் பொருத்தமான நாயகிகளைத் தேர்வு செய்கிற இயக்குநர்கள் இப்போது வந்துள்ளார்கள். அப்படி கதையின் நாயகிக்கான சான்ஸ்தான் கிடைத்துள்ளது. அந்த மாதிரி சில கதைகள்தான் வருஷத்துக்கு வருது.  கமர்ஷியல் ஹீரோயின் சான்ஸ் இன்னும் அமையவில்லை. தமிழ் சினிமாவில் நான் வளர்ந்து வரும் நடிகை.

விஷ் லிஸ்ட்ல உள்ள இயக்குநர்கள் யார்?

எல்லோருடணும் நடிக்கணும் என்பது லட்சியம். நடிகை என்பதைவிட பெர்ஃபார்மர் என்ற பேர் வாங்கணும். எல்லா மொழிகளிலும் நடிக்கணும். விஷ் லிஸ்ட்டை உருவாக்கி என்னுடைய உலகத்தை சுருக்கமாட்டேன். இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்பது தவறில்லை. நான் அப்படி கேட்பதில்லை. சான்ஸ் கேட்பது நல்ல விஷயம். அப்போதுதான் நான் இருக்கிறேன் என்பது தெரிய வரும்.  வாய்ப்பு கேட்பது கெளரவ குறைச்சல் கிடையாது.

‘இரவின் நிழல்’ பார்த்திபனிடம் கற்றது?

பார்த்திபன் சார் ஆகச் சிறந்த படைப்பாளி. சினிமாவுக்கான ஒர்க்கிங் ஸ்டைலை அவரிடம் கத்துக்கலாம். என்னிடம் அளவாகப் பேசுவார். பழகுவதற்கு இனிமையானவர். தயாரிப்பாளராக பத்து மடங்கு மதிப்பு, மரியாதை தருவார்.  அவரிடம் முக்கியமா கத்துக்கிட்டது, எதுக்கும் டென்ஷன் ஆகமாட்டார். அவர் டைரக்டரா இருக்கும் படத்தில் ஒன் மேன் ஆர்மியா எல்லா வேலையிலும் கவனம் செலுத்துவார். பல அழுத்தம் இருந்தாலும் ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் கோபத்தைக் காட்டமாட்டார். ஹியூமனா அது வெரி குட் குவாலிட்டி.

எஸ்.ராஜா