வெள்ளிப் பனிமலையின் மீதுலாவி...



சண்டிகார் வி.நிலையத்திற்கு வெளியே எங்களுக்காக பெரிய சைஸ் முயல்களாய் இரண்டு வெள்ளை இன்னோவா கார்கள் காத்திருந்தன. அதன் பஞ்சாபி ஓட்டுனர்கள் இருவரும் (டர்பன் கட்டி ஒருவர், கட்டாமல் ஒருவர்) தமிழ் முறைப்படி கைகூப்பி வணக்கம் வைத்தபோது, ஆஹா, தமிழறிந்த ஓட்டுனர்கள் என்பதால் பயணம் முழுக்க நிறைய உரையாடி அதிகமான தகவல்கள் அறிந்துகொள்ளலாம் என்கிற என் எண்ண பலூன், “க்யா சாப்... ஆப் கைஸே ஹை?’’ என்கிற கேள்வியால் ஊசி குத்தப்பட்டது.தமிழ் நஹி மாலுமாம். இந்தி, பஞ்சாபி மட்டுமே மாலுமாம். 
இங்கிலீஷ் குச் குச் மாலுமாம். ஓட்டுனர் கவி பல்ராம்சிங் (டர்பன் கட்டியவர்.) நேற்று, நாளை என்பதற்கு யெஸ்டர்டேயையும், டுமாரோவையும் மாற்றி மாற்றி சொல்லி பயணம் முழுதும் குழப்(ம்)பினார்.

மிகுந்த சிரத்தையாக என்னிடம் தமிழில் எண்களை எப்படிச் சொல்வது என்று கேட்டு வழங்கு தமிழில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு என்று பத்து வரை கற்றுக்கொண்டார்.
இன்னும் எவ்வளவு தூரம், இன்னும் எவ்வளவு நேரம், தொகை எவ்வளவு போன்ற கேள்விகளுக்கு தமிழ்ப் பயணிகளுக்குச் சொல்ல சிரமமாக இருக்கிறதாம். ஆனால், ஒன்பது நாள் பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட இந்தி வார்த்தைகளை இரண்டு கை விரல்களுக்குள் எண்ணிவிடலாம்.

என் பள்ளிப் பருவத்தின்போது ஏதோ மொழி அரசியல் புரிந்தவன் போல இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தி ஒழிக என்று கத்தியபடி ஊர்வலம் சென்ற ஃப்ளாஷ் பேக் நினைவுக்கு வந்தது. இந்தியைத் திணிக்காதே என்றுதானே கோஷமிட்டிருக்க வேண்டும்? ஒரு மொழி ஏன் ஒழிய வேண்டும் என்று கேள்வி கேட்கத் தோன்றவில்லை அப்போது.

போராட்டத்தின் விளைவாக இந்தி மொழி ஒழிக்கப்பட்டிருந்தால் கல்லூரிக் காலத்தில் ‘பாபி’, ‘ஆராதனா’ எப்படி பார்த்திருக்க முடியும்? பெல் பாட்டம் எப்படி தமிழ்நாட்டுக்குள் வந்திருக்க முடியும்? ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை ரசிக்காமலேயே போயிருப்போமே... ஆர்.டி.பர்மன், பியாரிலால், லதா, ஆஷா எல்லாமே மிஸ்ஸாகியிருக்கும் அல்லவா? நல்ல வேளையாக நான் கலந்துகொண்ட போராட்டத்தின் விளைவாக இந்தி ஒழிக்கப்படவில்லை.

ஃபுல்ஸ்கேப் பேப்பரை ரூல் தடி மாதிரி சுருட்டி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் வகுப்பு சென்ற காலத்தில் அங்கேயே இந்தி கற்றுத்தரும் வகுப்பும் இருந்ததால் அதில் சேர்ந்தேன் (உண்மைக் காரணம் இந்தி கற்றல் அல்ல என்பது நெருக்கமான சில நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!). அந்தப் படிப்பில் பிராத்மிக் என்கிற எல்.கே.ஜி மட்டும் எழுதி சான்றிதழ் வாங்கி சில வருடங்களில் முற்றிலும் மறந்தேன்.

சமீபமாக கொேரானா வழங்கிய ஏராளமான வெட்டி நேரத்தில் இணையம் வழியாக இந்தி படிக்க மீண்டும் உந்துதல் ஏற்பட்டு பெங்களூரில் வாழும் ஒரு அம்மிணியைப் பிடித்தேன். முழுத் தொகையையும் கட்டியதும் இந்தியின் அணா, ஆவண்ணாவில் ஆரம்பித்தார். 

எனக்கு எழுதப் படிக்க அவசியமில்லை. வழங்கு இந்தி அதாவது பேச, புரிந்துகொள்ளும் இந்தி மட்டும் கற்றுத்தந்தால் போதும் என்று நான் எத்தனை கெஞ்சியும்... அந்தப் பண்டிட் ஏற்கவில்லை. எழுதப் படிக்க கற்றுக்கொண்டு, பிறகு பேச்சு வழக்கிற்கு வரலாம் என்று ஸ்ட்ரிக்ட்டாய் இருந்தார்.

வீடியோ வகுப்பு என்பதால் ஃபிரேமுக்கு வெளியே குனிந்துதான் கொட்டாவி விடுவேன். ஹோம் வொர்க் வேறு கொடுத்தார். அவர் மொபைல் போனை ஒரு ஸ்டாண்டில் வைக்காமல் கையில் பிடித்தபடியே பாடம் நடத்துவதைப் பார்த்து அமேஸான் மூலம் ஒரு ஸ்டாண்ட் பரிசனுப்பிய கையோடு முழுமையாக கட்டடித்துவிட்டேன். முடியல!

‘மத்லப்’, ‘லேகின்’, ‘பியார்’, ‘பகூத்’ என்று ஒரு சில வார்த்தைகள் மூளைக்குள் டவுன்லோடு ஆனதோடு சரி. ஆனால், அந்த வார்த்தைகள்தான் இந்த வட இந்தியப் பயணத்தில் ஓட்டை உடைசல் இந்தி பேச உதவியாய் இருந்தது.

கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் எல்லோருக்குமே உண்டான ஒரு குணாதிசயமானது... தலைப்பை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் ஷார்ட்கட்டில் வந்து சேர்வது!சண்டிகாரிலிருந்து புறப்பட்ட இரண்டு கார்களும் ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஊரெல்லாம் குட் நைட் சொல்லும் நேரத்திற்கு சிம்லா வந்து சேர்ந்தன.
சிம்லா நகரத்தைப் பொருத்தவரை அங்கே சுற்றிப்பார்க்க அதிகமில்லை. ஊருக்கு வெளியே குஃப்ரி என்னும் ஊரில்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான வீர சாகச விளையாட்டுகள் இருப்பதால் குஃப்ரிக்கு அருகாமையில் அறைகள் போட்டிருந்தோம்.

அந்த ஹோட்டலில் திரும்பின பக்கமெல்லாம் ஓர் அறிவிப்பு ஒட்டியிருந்தார்கள். அது: ‘குரங்குகளின் தொல்லை இருக்கலாம் என்பதால் அறையின் கதவையோ, ஜன்னல் கதவுகளையோ திறந்துவைக்காமல் எச்சரிக்கையுடன் இருக்கவும்’! 

இந்தக் குரங்கு மேட்டர் ஹோட்டலில் ஏற்கெனவே தங்கியவர்களின் கருத்துக்களில் இல்லையே என்றார் மாப்பிள்ளை. (தங்கியவர்களின் கருத்துக்கள் என்கிற பகுதியிலும் அந்தந்த ஹோட்டல்காரர்களே கள்ளக் கருத்துக்கள் பதிவு செய்யும் மற்றும் ஒரு ஃபிராடுத்தனம் உண்டு என்பதறிக! அவர்களின் இணையதளத்தில் போட்டிருக்கும் படங்கள் சிலரின் இள வயது முகநூல் படங்கள் போல ஹோட்டல் துவங்கிய முன்னொரு காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும்).

இரண்டாம் நாள் காலையில் ஜன்னல் திரையை விலக்கியதும் சுற்றிலும் இடைவெளியே இல்லாமல் படர்ந்திருக்கும் மலைச் சிகரங்களைப் பார்த்து பிரமிப்பு ஏற்பட்டது.
பால்கனிக்குச் சென்று பார்க்கலாமென்றால் குரங்கு பயம்! அந்த எச்சரிக்கையை மறந்து என் மாப்பிள்ளை பால்கனிக்குச் சென்று இயற்கையை ரசித்த விநாடிகளில் ஒரு குரங்கு அறைக்குள் வந்து இன்னும் பிரிக்கப்படாத சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கவர்ந்துகொண்டு சென்றுவிட்டது.  குரங்கு கவர்ந்துசென்ற குறிப்பிட்ட அந்த சிப்ஸ் பாக்கெட்தான் வேண்டும் என்று என் பேரன் தூங்கி எழுந்ததுமே அடம் பிடித்தான்.

அரை மணி பயண தூரத்தில் குஃப்ரி! சிம்லாவில் மே, ஜூன் மாதங்களில்தான் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகமிருக்கும் என்பதால் கார்கள் ஊர்ந்து சென்றுதான் அடைந்தன.
கடல் மட்டத்திலிருந்து 7238 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சிம்லா. 

ஊட்டியைவிட (7350) கொஞ்சம் குள்ளம். கொடைக்கானலை (7200) விடவும் கொஞ்சம் உயரம். கிளைமேட் இரவில் 12 டிகிரி சென்டிகிரேடும் பகலில் 22 டிகிரியும் இந்த சீசனில் இருப்பதால் இரவில் அவசியமாக கம்பளி ஆடைகள் தேவைப்படும். பகலில் அணியலாம். அணியாமலும் இதமான குளிரை அனுபவிக்கலாம்.

குஃப்ரியில் இருந்து இருபது நிமிடங்கள் குதிரையில் பயணம் செய்துதான் ஜிப்லைன் போன்ற சாகச விளையாட்டுகள் நிறைந்த பகுதிகளுக்கு வர இயலும். கிட்டத்தட்ட இருநூறு, முன்னூறு குதிரைகள் போய், வரும் அந்தச் சாலையின் மொத்த அகலமே சில இடங்களில் அதிகபட்சம் பனிரெண்டடி மட்டுமே இருக்கும். 

அந்தப் பனிரெண்டு அடி மோசமான பாதைதான் போகிற வருகிற எல்லாக் குதிரைகளுக்குமான ஒரே பாதை. அந்தப் பாதையோ சீராக அமைத்து தார் போடப்பட்ட சாலை அல்ல! மேடும், பள்ளமுமாக, ஏற்றமும் இறக்கமுமாக மலைகளில் ட்ரெக்கிங் போகும் பாதை போன்ற கடினமான பாதை.

பாதையின் ஒரு எல்லையில் சரிவாக பாதாளம். குதிரை சறுக்கினால் நம்மைத் தேடிக் கண்டுபிடித்து பொறுக்கி பொட்டலமாகத்தான் கொண்டுவர வேண்டும்!
என் மனைவியோ எடுத்த எடுப்பிலேயே அதிபுத்திசாலித்தனமாக ‘நான் காரிலேயே இருக்கிறேன், நீங்கள் அனைவரும் போய் வாருங்கள்’ என்றார். அதே மாதிரி நானும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லக் கூச்சமாக இருந்தது.

குழந்தைகள் அதீத ஆர்வத்துடன் குதிரைகளில் அமர்ந்துவிட்டார்கள். ஊட்டி, கொடைக்கானலில் ஏரியோரமாக மெதுவாக நடை பழகும் சோம்பல் குதிரைகளின் மீது சவாரி(?) செய்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஒரு உற்சாகத்தில் நானும் ஒரு குதிரையில் அமர்ந்துவிட்டேன். ஐந்து குதிரைகளுக்கு ஒரு ஆசாமி கூடவே ஓடிவருகிறான். ஒவ்வொரு குதிரைக்கும் பெயர் வைத்திருந்த எங்கள் ஆசாமி என் குதிரையின் பெயர் ‘சைக்கோ’ என்றபோதே நான் கும்பிட்டு இறங்கியிருக்க வேண்டும்! ஏறி உட்கார்ந்து புறப்பட்ட இரண்டாம் நிமிடம் அந்த ‘சைக்கோ’ செய்த வேலை...

(...தொடரும்)

- பட்டுக்கோட்டை பிரபாகர்