இனி கலவரம் செய்தாலும் கைது!



அமலுக்கு வரும் புதிய கிரிமினல் சட்டம்

செதுக்கிச் செதுக்கி அழகாக உருவான ஒரு சிற்பத்தை ஒருநாள் தரையில் போட்டு உடைத்தால் எப்படி இருக்கும்? அது மாதிரியான செயலாகத்தான் பார்க்கிறார்கள் அமலாக இருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தை. 
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்தபோது இரு குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஒன்று, இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி 1860). இரண்டாவது, இந்திய சாட்சியச் சட்டம் (எவிடன்ஸ் ஆக்ட் 1872).

சுதந்திரம் பெற்ற இந்தியா மூன்றாவதாக ஒரு குற்றவியல் சட்டத்தைக் கொண்டுவந்தது. அது இந்திய நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி 1983). இந்த மூன்று சட்டங்களைத்தான் குற்றவியல் சட்டம் என அழைப்பார்கள். 
இந்த மூன்றையும்தான் கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றம் காலியாக இருக்கும்போது சத்தமில்லாமல் மாற்றியது ஒன்றிய அரசு. புதிய சட்டங்களுக்கும் சமஸ்கிருத்தில்தான் பெயர். ‘பாரதிய நியாய சன்ஹிதா’ (தண்டனைச் சட்டம்), ‘பாரதிய நகரில் சுரக்‌ஷா’ (நடைமுறைச் சட்டம்) மற்றும் ‘பாரதிய சாட்சிய அதினியம்’ (சாட்சிய சட்டம்).

காலனிய சட்டங்களை மாற்றுகிறோம் என்று இந்தப் புதிய சட்டங்களுக்கு பெயர் வைத்தாலும் பழைய சட்ட விதிகளுக்கான விளக்கங்கள் மாறவில்லை எனச் சொல்கிறார்கள் விமர்சகர்கள்.
மேலும் இணைக்கப்பட்ட பல புதிய விதிகள் இந்த மூன்று சட்டங்களையும் நீதிமன்ற பரிபாலனத்துக்குப் பதிலாக காவல்துறையின் வசம் ஒப்படைத்து விட்டதாக சொல்கிறார்கள் விமர்சகர்கள். இது குறித்து சென்னை குற்றவியல் வழக்குரைஞரான விஜயகுமாரிடம் பேசினோம்.

‘‘இந்தப் புதிய சட்டமே சட்ட விரோதமானது. அரசியலமைப்பு (கான்ஸ்டிடியூஷன்) விதி 348ன்படி ஒரு சட்டம் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். ஆனால், புதிய சட்டம் சமஸ்கிருதப் பெயரில் இருக்கிறது. 

இதுவே முதல் கோணல். அத்தோடு கடந்த டிசம்பரில் பாராளுமன்றத்தில் சுமார் 145 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு இந்தச் சட்டத்தை ஒரே நாளில் எந்த விவாதமும் இல்லாமல் அரசு மறைமுகமாக இயற்றியதில் இருந்தே இது தவறான நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது...’’ என்ற விஜயகுமார், தொடர்ந்தார்.

‘‘பழைய சட்டம் 150 வருடங்கள் பழமையானது. காலனிய காலத்தது என்று பாஜக சொல்லி புதியதைக் கொண்டு வந்தாலும் அது எத்தனையோ தடவை திருத்தம் செய்யப்பட்டு புடம் போடப்பட்ட சட்டம். ஆனால், புதியதாக இணைக்கப்பட்ட சட்டம் அப்படியல்ல. இப்புதிய சட்டம் 140 கோடி இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை தினசரி சிக்கலுக்கு ஆளாக்கக் கூடியது.

உதாரணமாக புதிய சட்டம் அமலுக்கு வரும்போது அதற்கு முந்தைய வழக்குகள் எந்த சட்டத்தில் நடத்தப்படும் என்று ஒரு தெளிவான பார்வை புதிய சட்டத்தில் இல்லை.
ஒருவேளை அரசு சொல்வது மாதிரி பழைய வழக்குகள் பழைய சட்டப்படியும், புதிய வழக்குகள் புதிய சட்டப்படியும் நடக்கும் என்றாலும் பழைய வழக்குகளை ஒரு வழக்கறிஞர் புதிய சட்டப்படி நடத்த கோரலாம். அரசும் இதுமாதிரி கோரலாம்.

எனவே இனிவரும் 30 அல்லது 40 வருடங்களுக்கு இரண்டு வகையான சட்டங்களின்படியும் வழக்குகள் நடத்தபடுவதற்கான விண்ணப்பங்கள் வரும்போது அது இரண்டு சட்டத்துக்குமே சிக்கலாக மாறும். 

ஏற்கனவே நிலுவை வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் இந்த முரண்பாடும் சேர்ந்துகொள்ளும்போது மேலும் தேக்கம் ஏற்படும்...’’ என்று விஜயகுமார் சொல்ல, இந்திரா ஜெய்சிங் போன்ற வடநாட்டு மூத்த வழக்கறிஞர்கள் புதிய சட்டம் மிக கொடூரமானவையாக இருக்கின்றன... காவல்துறைக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதற்கான பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என விமர்சனம் செய்வது பற்றி அவரிடம் கேட்டோம்.

‘‘1978ம் ஆண்டு கிருஷ்ணய்யர், நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஒருவருக்கு கைவிலங்கு மாட்டக்கூடாது என்று ஒரு தீர்ப்பை வாங்கித் தந்தார். அதுதான் கடந்த 30 ஆண்டுகளாக பல நிரபராதிகளைக் காப்பாற்றி வந்தது. ஆனால், இனி இந்தப் புதிய சட்டத்தால் யாரையும் கைவிலங்கு மாட்டி காவல்துறை கேவலப்படுத்தலாம். கொலைக் குற்றம் என்றால் ஐ.பி.சி.யின் படி 302 என்ற சட்டம்தான் இதுவரை பலருக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டம் இதை 101 என போன் நம்பர் மாதிரி மாற்றியிருக்கிறது.

காலனிய அரசு கொண்டு வந்த சட்ட விளக்கங்களில் எல்லாம் இந்தப் புதிய சட்டம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், புதிய... விதிகளை கொண்டுவந்த அளவில் அது மிக கொடூரமாக இருக்கிறது...’’ என விஜயகுமார் விளக்கியதும் ‘இந்திரா ஜெய்சிங் புதிய சட்டத்தில் ஒரு புகார்தாரர், முதல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பெறுவது கடினம், ஒரு கலவரம்கூட பிரிவினைவாதம், தீவிரவாதத்துக்கு சமமாக பார்க்கப்படும்’ போன்ற விமர்சனங்களை வைக்கிறாரே என்று கேட்டோம்.

‘‘ஆமாம். எஃப்.ஐ.ஆர்., இல்லாவிட்டால் போலீசாரின் வரம்புகள் அதிகரிக்கும். அதுபோல பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை சிறப்பு சட்டமான ஊபா (UAPA - Unlawful Activities Prevention Act 1967) சட்டம்தான் இதுவரை அணுகியது. ‘ஊபா’ அதிகாரிகள்கூட ஒருவரை இதுதொடர்பாக கைது செய்யவேண்டும் என்றால் மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்கவேண்டும்.

ஆனால், புதிய சட்டத்தின்படி கலவரக்காரர்கள், கோஷம் போடுபவர்களைகூட காவல்துறை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளைப் போல கைது செய்யலாம். அதாவது ஒரு சாதாரண சட்டத்திலேயே ‘ஊபா’வை இணைத்துவிட்டார்கள். அப்படி காவல்துறையால் கைது செய்யப்பட்டவரைக்கூட காவல் சிறையில் சுமார் 60 முதல் 90 நாளைக்கு அடைக்கலாம்.

பழைய சட்டத்தின்படி ஒரு நபரை காவல்துறை சிறையில் (ரிமாண்ட்) 15 நாட்கள் மட்டுமே வைக்கமுடியும். இது எல்லாம் எதைக் காட்டுகிறது என்றால் ஏற்கனவே தேங்கிக்கிடக்கும் வழக்குகளை இதுபோன்ற காவல்கள் மேலும் காலதாமதப்படுத்தும். இது ஒருவருக்கு விரைவில் பெயில் கிடைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டுமென்றால் நீதிமன்றங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும். ஆனால், புதிய சட்டம் நகரங்களில் இருக்கும் பெருநகர குற்றவியல் நிதிமன்றங்களை (Metropolitan Magistrate Court) நீக்க வழிசெய்கிறது.

அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக செஷன் கோர்ட் என்று மூன்று பிரிவுகள் இருக்கிறது. இதில் அசிஸ்டெண்ட் செஷன் கோர்ட் எனும் ஒரு பிரிவை புதிய சட்டம் விலக்கியிருக்கிறது. இப்படி நீதிமன்றங்களையே காலிசெய்யும்போது எப்படி வழக்குகள் விரைவாக முடியும்? மொத்தத்தில் அலங்கோலமாக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்துக்கான எதிர்ப்புகள் கூடிக்கொண்டே போகும்போது இந்த சட்டமும் விரைவில் திரும்பப் பெறப்படும்...’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் விஜயகுமார்.

டி.ரஞ்சித்