உலகின் நம்பர் ஒன் தலைநகர்!



முடி மாற்று அறுவை சிகிச்சையில் சக்கைப்போடு போடுகிறது துருக்கி

உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏதாவது ஒரு தனித்துவம் இருக்கும். விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, வர்த்தகம் என ஏதாவது ஒரு துறையில் அந்நாடுகள்
சிறப்புற்று விளங்கும். அந்தவகையில் துருக்கி முடி மாற்று அறுவை சிகிச்சையில் உலகின் ‘தலை’நகரமாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் ஒரு ஆன்லைன் இணையதளம் முடி மாற்று அறுவை சிகிச்சையில் உலகின் சிறந்த பத்து நாடுகள் குறித்து சர்வே எடுத்தது. அதில் பலரும் தங்கள் விருப்பமாகக் கைகாட்டியது துருக்கியைத்தான். இதனை மருத்துவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.  முடி மாற்று அறுவை சிகிச்சையில் துருக்கி ஏன் முதலிடத்தில் இருக்கிறது? அப்படி என்ன அங்கே ஸ்பெஷல்?
விடை தேடியபோது கிடைத்த தகவல்கள் இதோ...

மேற்கு ஆசிய நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் மையப்பகுதி துருக்கி. ஒருபக்கம் மத்திய தரைக்கடல், இன்னொரு பக்கம் கருங்கடல் என அத்தனை அழகியலோடு காட்சியளிக்கும் நாடு அது. யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களையும் கொண்டது. அப்படியான நாடு இன்று மருத்துவ சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது.குறிப்பாக முடி மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணியில் இருந்து வருகிறது. இதிலும் முதல் நகராக இருப்பது துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல். இதற்கு முதல் காரணம் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுதான்.

அமெரிக்காவில் முடி மாற்று சிகிச்சைக்கு ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவே துருக்கியில் ஆவதாகச் சொல்கின்றனர் வாடிக்கையாளர்கள். அங்கே முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் டாலர் வரை செலவு பிடிக்கும். 

அதுவே துருக்கியில் 2 ஆயிரம் டாலரில் முடிகிறது எனக் குறிப்பிடுகின்றனர் அவர்கள். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவு 16 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய். அது துருக்கியில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாயில் முடிந்துவிடும்.

தவிர, ஹோட்டலில் தங்க, மருத்துவ கன்சல்டன்ட் கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து சராசரியாக இரண்டரை லட்சம் ரூபாயே ஆகும் என்கின்றனர். அமெரிக்கா என்றில்லை. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் முடி மாற்று அறுவை சிகிச்சை காஸ்ட்லிதான். இதனாலேயே முடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள நினைக்கும் பலரும் துருக்கியை நோக்கி படையெடுக்கின்றனர்.

இஸ்தான்புல் ஏர்போர்ட்டில் பணிசெய்யும் ஒரு பெண்மணி வேடிக்கையாக துருக்கி ஏர்லைன்ஸ் சேவையை ‘துருக்கி ஹேர்லைன்ஸ்’ எனக் குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு தினமும் இஸ்தான்புல் ஏர்போர்ட்டில் முடி மாற்று அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு திரும்புகிறவர்களை, தான் பார்ப்பதாகச் சொல்கிறார்.அதுமட்டுமல்ல. சிலர் இஸ்தான்புல் என்கிற பெயரை ஹேர்ஸ்தான்புல் என்றுதான் அழைக்கின்றனர். அந்தளவுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்ட்டென பெயரெடுத்துள்ளது இஸ்தான்புல்.

சரி, செலவுக்கு அடுத்தபடியாக வேறென்ன காரணம்?

சிறந்த மருத்துவர்களும் சேவைகளும்தான். ஆம். இங்கே முடி மாற்று அறுவை சிகிச்சைக்கென சிறந்த மருத்துவர்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் சுற்றுலா கைடுகள்.குறிப்பாக முடி மாற்று அறுவை சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் தெரிந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நிறைய இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

இதனால், தற்போது ஹேர் டூரிசம் வேகமாக வளர்ந்துவருவதாகச் சொல்கின்றனர் அவர்கள். இருந்தும், இதில் நோயாளிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சில மருத்துவர்கள் அடுக்குகின்றனர். அதில் முதலாவதாக கிளினிக் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்த பிறகே சிகிச்சை பெற வரவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இல்லையெனில் அது பின்னாளில் தலையில் வடுக்களையோ, தொற்றுகளையோ, மோசமான முடி வளர்ச்சியையோ, இயற்கைக்கு மாறான ஹேர்லைன்களையோ ஏற்படுத்திவிட்டால் பிரச்னைதான் என எச்சரிக்கின்றனர்.  

அதனால், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள், அந்தக் கிளினிக்கில் உள்ள மருத்துவர் லாப நோக்கமற்ற மருத்துவ சங்கமான ‘இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஹேர் ரெஸ்டோரேஷன் சர்ஜரி’யில் பதிவு செய்திருக்கிறாரா எனப் பார்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர்.

தற்போது இந்த முடி மாற்று அறுவை சிகிச்சை இஸ்தான்புல்லைத் தாண்டி துருக்கியின் தலைநகரான அங்காரா, அந்தால்யா, இஸ்மிர் உள்ளிட்ட நகரங்களிலும் வேகமெடுத்து உள்ளன.
துருக்கிக்கு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் வரை மருத்துவ சுற்றுலாவாக வருகை தருகின்றனர். 

இதில் முதலிடத்தில் இருப்பது முடி மாற்று அறுவை சிகிச்சைதான். இதற்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் சர்ஜரி, பல் சிகிச்சை, உடல் குறைப்பு சிகிச்சை ஆகியவை இடம்பிடித்துள்ளன. இதனால் துருக்கி அரசு இந்த மருத்துவ சுற்றுலாவை வளர்க்கும் எண்ணத்தில் மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நோயாளிகளின் ஹோட்டல் அறைகள் போன்றவற்றுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.          

பேராச்சி கண்ணன்