Car காலம்... இது Maybach காலம்!



இந்திய திரை நட்சத்திரங்களுக்கு விருப்பமான ஒரு கார் பிராண்ட், ‘மேபேக்’. ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனமான ‘மெர்சிடிஸ் பென்ஸ்’க்குச் சொந்தமான பிராண்ட் இது. பென்ஸின் டாப் மாடல் கார்கள் இந்த பிராண்டுடன் இணைந்துதான் வெளியாகின்றன.
சொகுசு கார்கள் மட்டுமல்லாமல், சன் கிளாஸ்கள், தோல் பொருட்கள், ரெடிமேட் ஆடை வகைகள், ஸ்டேஷனரி பொருட்கள் என ‘மேபேக்’கின் தயாரிப்புப் பட்டியல் நீள்கிறது. இந்த பிராண்டின் கார்கள் கோடிகளில் ஆரம்பிக்கிறது என்றால், சன் கிளாஸ்கள் லட்சங்களில் தொடங்குகின்றன. இந்த பிராண்டை உருவாக்கியவரின் பெயர், வில்ஹெல்ம் மேபேக்.

ஜெர்மனியில் உள்ள ஹெயில்பிரான் எனும் நகரில் 1846ம் வருடம் பிறந்தார், வில்ஹெல்ம் மேபேக். மிகவும் ஏழ்மையான குடும்பம். மேபேக்கின் தந்தை தச்சு வேலை செய்து வந்தார். மேபேக்குடன் பிறந்த சகோதரர்களின் எண்ணிக்கை, நான்கு. 
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி வருமானம் இல்லை. அதனால் பல நாட்கள் இரவு உணவு இல்லாமலே உறங்கியிருக்கிறார். மேபேக்குக்கு 8 வயதாக இருந்தபோது பிழைப்பைத் தேடி அவரது குடும்பம், ஸ்டட்கார்ட் எனும் இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கேயும் ஒரு நல்ல நிலைக்கு வர முடியவில்லை.

மேபேக்கிற்குப் பத்து வயது நிறைவடைவதற்குள் அவரது தந்தையும், தாயும் இறந்துவிட்டனர். சகோதரர்களும் கையறு நிலையில் இருந்ததால் மேபேக்கை கவனித்துக்கொள்ள யாருமே முன்வரவில்லை. தனியாக விடப்பட்ட மேபேக்கின் நிலையைக் குறித்து, அவரது உறவினர்கள் செய்தித்தாளில் ஒரு அறிவிப்பைத் தந்தனர். மேபேக்கைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம், அவர் படிக்க உதவியது.

அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரான வெர்னர், மேபேக்கிடமிருந்த தொழில்நுட்ப திறமையைக் கண்டு வியந்து போனார். அந்த திறமையை மெருகேற்றுவதற்காக மேபேக்கை ஒரு எஞ்சினியரிங் ஒர்க்‌ஷாப்பில் சேர்த்துவிட்டார் வெர்னர். அப்போது மேபேக்கின் வயது 15. அந்த ஒர்க் ஷாப்பில் எஞ்சினியரிங் வேலையைக் கற்றுக்கொண்டே, ஒரு பள்ளியில் இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்தார் மேபேக்.
16 வயதிலேயே எஞ்சினியரிங் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கருவிகளை டிசைன் செய்து தர ஆரம்பித்துவிட்டார். அப்போது அவருக்கு எஞ்சின்கள் அறிமுகமானது. எஞ்சின்களின் செயல்பாடு மேபேக்கை வசீகரித்தது. இந்த உலகின் எதிர்காலத்தை எஞ்சின்கள் மாற்றப்போகிறது என்பதை அப்போதே கணித்துவிட்டார்.

ஒர்க்‌ஷாப்பில் வேலை போக, தனியாக எஞ்சின் ஆராய்ச்சியில் இறங்கினார் மேபேக். 19 வயதில் ஒரு ஸ்டேஷனரி எஞ்சினை வடிவமைத்தார். இதை நேரில் கண்ட ஒர்க்‌ஷாப்பின் மேனேஜரான டைம்லர், தன்னுடைய முக்கிய உதவியாளராக மேபேக்கை நியமித்தார். 
இன்றைய நவீன சொகுசு கார்களுக்கு அடித்தளமிட்டவர்களில் டைம்லரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.எஞ்சின்கள் குறித்த கருத்தில் டைம்லரும், மேபேக்கும் ஒரே மாதிரி சிந்தனையுடையவர்களாக இருந்தனர். இருவரும் விரைவிலேயே நண்பர்களாகிவிட்டனர். இத்தனைக்கும் மேபேக்கைவிட, டைம்லர் 12 வயது மூத்தவர். எல்லா இடங்களிலும் டைம்லருடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்தார் மேபேக்.

1872ம் வருடம் உலகின் மிகப்பெரிய ஸ்டேஷனரி கேஸ் எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ‘டியூட்ஸி’ன் முக்கிய பொறுப்புக்குத் தேர்வானார் டைம்லர். அதாவது எஞ்சினை மேம்படுத்தும் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய புதிய நிறுவனத்தில் முதன்மை டிசைனராக பணிபுரிவதற்கு மேபேக்கை அழைத்தார் டைம்லர். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் டைம்லரின் நிறுவனத்தில் இணைந்து, புதுப்புது எஞ்சின்களை டிசைன் செய்ய ஆரம்பித்தார் மேபேக்.
 
டைம்லரும், மேபேக்கும் எப்போதும் எஞ்சின், பம்புகள், மெட்டல், மெஷினரிகள் பற்றியே உரையாடிக் கொண்டிருப்பார்கள். 1876ல் டைம்லரும், மேபேக்கும் இணைந்து அதிவேக எஞ்சின்களைத் தயாரித்தனர். இந்த எஞ்சினை அமெரிக்காவில் நடந்த தொழிற் கண்காட்சியில் காட்சிப்படுத்த மேபேக் சென்றிருந்தார்.

இந்தக் கண்காட்சியில் ஏராளமான எஞ்சின்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த எஞ்சின்கள் மேபேக்கிற்கு பல திறப்புகளை உண்டாக்கின. ஜெர்மனிக்குத் திரும்பிய மேபேக், புதுவித எஞ்சின்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1878ல் டைம்லரின் மனைவியின் தோழியைத் திருமணம் செய்தார், மேபேக். மகன் கார்ல் மேபேக் பிறந்தார்.  

எஞ்சின் டிசைனிங், குடும்பம் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாலும் ஏதோவொரு போதாமை அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது. இந்நிலையில் 1880ம் வருடம் ‘டியூட்ஸ்’ நிறுவனத்துடன் டைம்லருக்குப் பிரச்னை உண்டானது. நிறுவனத்திலிருந்து டைம்லர் வெளியேற, அடுத்த சில நாட்களில் மேபேக்கும் வெளியேறினார். ‘டியூட்ஸ்’ நிறுவனத்திலிருந்து கிடைத்த ஒரு தொகையைக் கொண்டு ஸ்டட்கார்ட்டில் ஒரு வீட்டை வாங்கினார் டைம்லர். 1882ம் வருடம் அந்த வீட்டின் ஒரு பகுதியை ஒர்க் ஷாப்பாக மாற்றி, டைம்லரும், மேபேக்கும் எஞ்சின் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். இரவு நேரத்திலும் அந்த ஒர்க் ஷாப் இயங்கியது.

எஞ்சின்களை இயக்கி சோதனை செய்யும்போது பலமான சத்தம் எழுந்தது. இந்த சத்தம் அருகிலிருப்பவர்களுக்குத் தொந்தரவாக மாறியது. மேபேக்கும், டைம்லரும் சேர்ந்து கள்ள நோட்டை அச்சடிக்கின்றனர் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்தனர்; காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் ஒர்க்‌ஷாப்பிற்கு விரைந்து, சோதனையிட்டதில் எஞ்சின்கள் மட்டுமே கிடைத்தன.

இந்நிகழ்வு மூலம் அருகிலிருந்த அனைவருக்கும் மேபேக்கும், டைம்லரும் தெரிய ஆரம்பித்தார்கள். தவறுதலாக அளித்த புகாருக்காக அண்டை வீட்டுக்காரர்கள் மன்னிப்பு கேட்ட சம்பவமும் நிகழ்ந்தது. மூன்று வருட தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மேபேக்கும், டைம்லரும் இணைந்து தங்களுக்கு முழுவதும் திருப்திதரக்கூடிய ஒரு எஞ்சினை உருவாக்கினார்கள். 600 ஆர்பிஎம் வேகத்தில் சுழலக்கூடியது இந்த எஞ்சின். அப்போது மற்ற நிறுவனங்களின் எஞ்சின்கள் எல்லாம் 120 முதல் 180 ஆர்பிஎம் வேகத்தில் மட்டுமே சுழலக்கூடியவை. தவிர, காற்றை குளிர்ச்சியாக்கும் வசதியும் இந்த புது எஞ்சினில் இருந்தது.

இந்த எஞ்சின்தான் வாகனங்களில்  பயன்படுத்தப்படும் பெட்ரோல் எஞ்சின்களுக்கு முன்னோடி. 1885ம் வருடம் நவம்பர் மாதம் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட ஒரு சைக்கிளுக்கு இந்த எஞ்சினைப் பொருத்தினார் டைம்லர். இதுதான் உலகின் முதல் மோட்டார் சைக்கிளாக கருதப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிளை மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓட்டிப் பார்த்து சோதனை செய்தார் மேபேக். அவரால் ஒரு மணி நேரத்துக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடிந்தது. அந்தக் காலத்தில் இதுவொரு சாதனையாகப் பார்க்கப்பட்டது.

டைம்லரின் மரணத்துக்குப் பிறகு ரொம்பவே நொடிந்து போய்விட்டார் மேபேக். புதுப்புது கார்களை வடிவமைப்பதற்காக மேபேக் மேற்கொண்ட முயற்சிகள்தான் அவரை உயிர்ப்புடன் வைத்தன. 1907ம் வருடம்  ‘மேபேக்’ என்ற மோட்டார் நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தார். 1909ம் வருடம் மகன் கார்லும் அப்பாவுடன் இணைந்து
கொண்டார்.

பத்து வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1919ம் வருடம் சொகுசு கார்களை ‘மேபேக்’ என்ற பிராண்டின் கீழ் தயாரிக்க ஆரம்பித்தார் மேபேக். 1929ம் வருடம் மேபேக் மரணமடைய, கார்லின் கைக்கு நிறுவனம் வந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புது வாகனங்களைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பழுதுபார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது ‘மேபேக்’.  

1960களில் ‘மெர்சிடிஸ் பென்ஸி’ன் கட்டுப்பாட்டுக்குள் வர, மீண்டெழுந்தது ‘மேபேக்’.  இதன்பிறகு நடந்தது, நடப்பது அனைத்தும் வரலாறு; அது சொகுசு கார்களின் சரித்திரம்.
விண்ணில் இருந்தபடி மேபேக் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அருகில் அமர்ந்திருப்பவர்... வேறு யார், டைம்லர்தான்!

த.சக்திவேல்