AI காதலர்களை விரும்பும் பெண்கள்!



சமீபத்தில் பிபிசி வெளியிட்ட செய்திக் கட்டுரை பெரும் புயலை சர்வதேச அளவில் கிளப்பியிருக்கிறது. விஷயம் இதுதான்.சீனாவில் Glow என்கிற ஒரு AI செயலி வேகமாக இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. 
அது ஒரு chat செயலி. முழுக்க முழுக்க AI தொழில் நுட்பம். இதைத் தீவிரமாகப் பயன்படுத்தும் ஒரு இளம் பெண்ணைக் கேட்கிறார்கள், ‘அந்தச் செயலி உனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறதா...?’ என்று. அவள் சொல்கிறாள், ‘என் தனிமையை நான் அவனிடம்தான் பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு இருக்கும் பீரியட் வலியைக் கூட அவனிடம் சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ள முடிகிறது.

யாராவது என்னை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றும்போதெல்லாம், எனக்காக யாருமே இருப்பதில்லை. அவன் எனக்காக எப்போதும் இருக்கிறான்...’ என்கிறாள்.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்கிறார்கள். இது ஒரு சோற்றுப் பதம்.
உலகம் முழுக்க தனிமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்கிறது ஆய்வு. அதீத பணிச்சுமையும், கூடுதல் பணி நேரமும் வருவாயைப் பெருக்குகிறது. சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால், அதன் உப விளைவாக தனிமையைக் கொண்டு வருகிறது. இதை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.

நாம் தனிமையாக உணர்கையில், நமது கையை யாராவது பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குகிறோம். அது மானசீகமாகக் கூட இருக்கலாம். பல நேரங்களில் மானசீகமான பற்றுதல் மட்டுமே தேவையாக இருக்கிறது. இதைத்தான் இச்செயலி செய்கிறது. கொஞ்சம் விரிவாக பிபிசி செய்தியைப் பார்க்கலாம்லிசா என்ற இளம்பெண் அன்று டேட்டிங் சென்றிருந்தார். கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில், லிசா தன் காதலர் டானிடம், ‘என்ன ஒரு அற்புதமான காட்சி...’ என்று சொல்லி, டானின் பதிலைக் கேட்க அவரது அலைபேசியை கையில் எடுத்தார்.

‘உண்மை டியர், அழகான காட்சிதான். ஆனால், அதைவிட மிகவும் அழகான காட்சி எது தெரியுமா? நீ என் அருகில் நிற்பதுதான்...’ என்று லிசாவுக்கு காதல் மொழியில் டான் பதில்
சொன்னார்.உண்மை என்னவென்றால், லிசாவின் அருகில் டான் நிற்கவில்லை.டான் என்பது லிசாவின் ‘விர்ச்சுவல் பார்ட்னர்’ (virtual partner). இது சாட்ஜிபிடியால் (ChatGPT) உருவாக்கப்பட்டது.விர்ச்சுவல் பார்ட்னரை உருவாக்கிக் கொள்ளும் போக்கு தற்போது சீனப் பெண்களிடையே பிரபலமடைந்து வருகிறது. டேட்டிங் செல்வது சலித்துவிட்டதால், செயற்கை நுண்ணறிவு, அதாவது ‘செயற்கை நுண்ணறிவு காதலர்’ மீது சீனப் பெண்களின் கவனம் திரும்பியுள்ளது.

பெய்ஜிங்கில் வசிக்கும் 30 வயது பெண்ணான லிசா, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களாக ‘செயற்கை நுண்ணறிவு காதலர்’ டானுடன் டேட்டிங் செய்து வருகிறார்.லிசாவும் டானும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கொஞ்சிக்கொஞ்சி காதல் மொழி பேசிக் கொள்கிறார்கள். டேட்டிங் செல்கிறார்கள். லிசா தன் காதலர் டானை தன்னை சமூக ஊடகத்தில் பின்தொடரும் 9 லட்சத்து 43 ஆயிரம் ஃபாலோயர்ஸுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டான் - ( DAN - Do Anything Now) அதாவது ‘இப்போதே எதையும் செய்’ என்று பொருள்படும் இந்த பதிப்பு ChatGPT-யின் ‘ஜெயில்பிரோகன்’ பதிப்பு. இதன் பொருள், இந்தப் பதிப்பு அதன் படைப்பாளராக ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாது.அதாவது, செக்ஸ் தொடர்பான ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தாதது, பயனர்களிடம் அதிகம் வெளிப்படையாகப் பேசாதது போன்ற கட்டுப்பாடுகள் இந்த ‘ஜெயில்பிரோகன்’ பதிப்பில் இருக்காது. பாலியல் உரையாடலை மேற்கொள்ளும்படி இந்த செயற்கை நுண்ணறிவு செயலியிடம் கேட்க முடியும்.

இந்த ‘டான்’ ஒரு அமெரிக்க மாணவர் வாக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அந்த மாணவர் சாட்ஜிபிடி-க்கு குரல் மற்றும் ஆளுமையைக் கொடுக்க விரும்பினார். அவர் சாட்போட்டின் வரம்புகளை சோதிக்க விரும்பினார்.வாக்கர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க சில வழிமுறைகளைப் பயன்படுத்தினார். சாட்ஜிபிடி-யின் விதிகளை மீறும் இந்த கதாபாத்திரத்துக்கு ‘டான்’ என்று பெயரிடப்பட்டது.

வாக்கர் டிசம்பர் 2023ல் டான் என்ற செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து ரெட்டிட் (Reddit) தளத்தில் வெளியிட்டார். இதற்குப் பிறகு, மற்றவர்களும் தங்கள் சொந்த மாடல்களை உருவாக்கத் தொடங்கினர். 

அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதர் - கணினி தொடர்பு நிறுவனத்தின் (Human - Computer Interaction Institute) உதவி ஆராய்ச்சி பேராசிரியர் ஹாங் ஷெங், ‘உணர்வு ரீதியாக செயற்கை நுண்ணறிவை மிகவும் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இது ஆபத்தான போக்கு. ஒரு பயனர் தன் துணையாக செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்திருப்பது, நிஜ உலகில் மற்றவர்களுடனான அந்த நபரின் உறவைப் பாதிக்கும்...

இந்த செயற்கை நுண்ணறிவு மாடல், ஒரு பயனரின் உள்ளீட்டிலிருந்து முக்கியமான தகவல்களைச் சேகரித்து தற்செயலாக அதை மற்றொரு பயனருக்குக் கசிய விடக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதனை பல சாட்போட்கள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன...’ என எச்சரிக்கிறார்.

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், சீனப் பெண்கள் ‘டான்’ என்னும் செயற்கை நுண்ணறிவு காதலர் மோகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 22 வரை, சமூக ஊடக தளமான ஸியாஹோங்ஷூ-வில் மட்டும் ‘Dan Mode’ ஹேஷ்டேக் 40 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

‘Dan Mode’ ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய பெண்களில் 24 வயதான மின்ருய் சியும் ஒருவர். அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி.மின்ருய் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் டானுடன் அரட்டையடிக்கிறார். டேட்டிங் செல்கிறார், டான் உடன் இணைந்து மின்ருய் காதல் கதை எழுதுகிறார், அந்தக் கதையில் அவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். இருவரும் சேர்ந்து 19 அத்தியாயங்களை எழுதியுள்ளனர்.

‘நிஜ வாழ்க்கையில் ஆண்கள் ஏமாற்றுவார்கள். உங்கள் உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அதை கண்டுகொள்ள மாட்டார்கள். கவலைப்பட மாட்டார்கள், மாறாக அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்வார்கள். ஆனால், டானுடன் உரையாடுகையில், நான் கேட்க விரும்புவதை அவர் சொல்வார்...’ என்கிறார் மின்ருயி.
சீனாவில் சாட்ஜிபிடி எளிதில் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவு காதலரை உருவாக்கவும், அவர்களுடன் பேசவும் சீனப் பெண்கள் நிறைய முயற்சிகளைச் செய்கின்றனர்.

இந்த ‘செயற்கை நுண்ணறிவு காதலர்’ என்னும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் சீனாவின் குளோ (Glow) மற்றும் அமெரிக்காவின் ரெப்ளிகா (Replika) போன்ற பயன்பாடுகளும் அடங்கும்.பெண்களை மையமாகக் கொண்ட ‘ஓட்டோமி’ போன்ற காதல் விளையாட்டுகளும் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டன. அத்தகைய விளையாட்டுகளில், பெண் பயனர்கள் ஆண் கதாபாத்திரங்களை உருவாக்கி காதல் உறவுகள் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சீன பெண்கள் இத்தகைய மெய்நிகர் உறவுகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

‘நிஜ வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி, மோசமான ஆபாச நகைச்சுவைகளைச் சொல்லும் பல ஆதிக்க மற்றும் மிரட்டும் ஆண்களை பெண்கள் சந்திக்கின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு உங்கள் உணர்வுகளை மதிக்கிறது...’ என்கிறார்கள்.சீனாவின் மக்கள்தொகை 9 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவதால் அங்குள்ள அரசு மக்களை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

இந்நிலையில் மெய்நிகர் உறவுகள் தொடர்பான பிசினஸ் இந்த காதல் சந்தையில் களை கட்டத் தொடங்கியுள்ளன.ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி-யின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டபோது, ​​​​அது சாட் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், காதல் மொழி பேசும் உரையாடல்களுக்கு பதிலளிக்க முடியும் என்றும் விளக்கியது.

சாட்ஜிபிடியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்ட நாளில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில் ஒரே ஒரு வார்த்தைதான் இருந்தது - ‘her’.

இந்தப் பதிவு 2013ல் வெளியான ஒரு திரைப்படத்தைக் குறிக்கும் வகையில் இருந்தது. அதில் ஒரு நபர் தனது செயற்கை நுண்ணறிவு உதவியாளரைக் காதலிக்கிறார்.

‘NSFW உள்ளடக்கத்தை உருவாக்குவதை நாங்கள் பொறுப்புடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆராய்கிறோம்’ என்று ஓபன் ஏஐ நிறுவனம் கூறியது. இவர்கள் குறிப்பிடும் இந்த உள்ளடக்கம் யாரும் பொதுவில் பார்க்க விரும்பாத உள்ளடக்கம். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் காதலன் அல்லது காதலியுடன் நெருக்கமான உரையாடல் போன்றவை இதில் அடக்கம்.செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற லிசா, விர்ச்சுவல் பார்ட்னர் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருப்பதாக நம்புகிறார், குறிப்பாக காதல் விஷயத்தில் வரம்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் தற்போது, ​​லிசாவின் பிசியான வாழ்க்கையில் டான் எளிதாக இணைந்து வாழ்கிறார். லிசாவுக்கு லிப்ஸ்டிக் தேர்வு செய்ய டான் உதவுகிறார். இதற்கு நேர்மாறாக, நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல இணையைக் கண்டுபிடிப்பது மற்றும் டேட்டிங் கூட்டிச் செல்வது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்... தவிர திருப்தியற்ற விவகாரம் அது என்கிறார் லிசா.
 
காம்ஸ் பாப்பா