சிறுகதை-தெய்வம்



‘‘என்ன வேணும்..?’’

என்றான் அவரைப் பார்க்காமலேயே. பெரியவரின் சிரிப்பு இன்னமும் உதட்டில் தொக்கியிருந்தது. எதிராஜின் ஓரப் பார்வையில் பெரியவரின் கால்கள் மட்டுமே தென்பட்டிருக்கும். பழகிய செருப்பும் கால்களும்.காய்கறிகள் இனவாரியாகப் பிரிக்கப்பட்டு இடையே நடைபாதை போல் ஒரு சின்ன ரிப்பன் இடைவெளி. நடுவில் எதிராஜ். அப்போது பிரித்த மூட்டையிலிருந்து எடுத்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், வெங்காயக் குவியலை உதவியாளிடம் கொடுத்தபடியேதான் கேட்டான்.‘‘நுனி இலை பத்து... ஏடு பத்து...’’ என்றார் பெரியவர்.

யாருக்கும் தொந்தரவின்றி ஒதுங்கி நின்றிருந்தார். கையில் ஒரு மஞ்சள் பை. பழுப்பேறிய வேட்டி. கால்களில் செருப்பில்லை. எதிராஜுக்கு அருகிலேயே இடது புறம் இலைக்கட்டு. அதைத்தாண்டி இருந்த இன்னொரு மூட்டையை எக்கி எடுத்தான்.

‘‘பச்ச மொளகா, இஞ்சி இதுலதான வச்ச..?’’

‘‘ஆமாண்ணே...’’‘‘டேய் பாத்துரா. நசுக்கினா நமக்குத்தான் நஷ்டம்...’’அந்த மூட்டையும் அரங்கேறியது. இப்போது எதிராஜின் எதிரில் முழுமையான காய்கறிக் கடை. வடக்குத் தெருவில்தான் காலை மார்க்கெட். ஒன்பது மணி வரை. பிறகு கிழக்குத் தெருவிற்குப் போகும். அங்கே மதியம் வரை அல்லது கொண்டு வந்தவை விற்றுத் தீரும் வரை. மெயின் மார்க்கெட் அதுதான். 
ஒரு சிலர் இங்கே ஆறு மணி முதல் இந்தப் பக்க குடியிருப்புவாசிகளின் நலனுக்காக கடை விரிப்பார்கள்.‘‘வெண்டக்காய் பத்தே ரூவா. வாங்கம்மா வாங்க. பிஞ்சா இருக்கு...’’எதிராஜின் கவனம் எல்லாத் திசையிலும் இருக்கும். நடுவே தெரு. இரு பக்கமும் வீடுகள். ஒரு வீட்டின் வாசலில் வழி விட்டு அவன் கடை.
‘‘தம்பி...’’ என்றார் பெரியவர்.

‘‘என்ன கேட்டிங்க..?’’

‘‘நுனி பத்து... ஏடு பத்து...’’‘‘சார் புடலங்கா கேட்டிங்களே. வந்துருச்சு...’’ கத்தினான் எதிராஜ் அப்போது அந்த வழியே போன ஒருவரைப் பார்த்து.‘‘போன வாரம் கேட்டேன். இப்ப சொல்ற...’’ நக்கலாய்ச் சிரித்தார்.‘‘ஃப்ரஷ்ஷா இருக்கு...’’அவர் பதில் சொல்லாமல் போனார் இன்னொரு வியாபாரியிடம்.

‘முத்தலா கொடுக்கிறவன்ட்ட போய் ஏமாறுனா என்ன செய்ய...’ பொருமினான்.
‘‘தம்பி...’’ மறுபடியும் பெரியவர் முனகினார்.

‘‘டேய்... டீ சொன்னியா?’’
‘‘சொல்லிட்டேன் ண்ணே...’’‘‘மூணு மணிக்கு பெரிய சந்தைக்குப் போனது. இன்னும் பாரு இவளைக் காணோம். வவுறு சங்கடம் பண்ணுது...’’
எதிராஜின் குரலில் எரிச்சல்.‘‘புள்ளைங்களை அனுப்பிட்டு வரேன்னு சொன்னாங்க...’’

‘‘கீழ் வீட்டு சார் எலை கேட்டாரே... ஃபோன் போட்டியா?’’

‘‘எடுத்து வச்சிட்டேன் ண்ணே. அரை மணில வந்து வாங்கிக்கறேன்னு சொன்னாரு...’’
‘‘என்ன கேட்டிங்க..?’’ என்றான் பெரியவர் பக்கம் திரும்பி.
‘‘நுனி ஏடு...’’‘‘எவ்ளோ?’’
‘‘பத்து...’’

‘‘கேரட் எவ்ளோ..?’’ அப்போது வந்த பெண்மணி கேட்டார்.

‘‘எவ்ளவும்மா. ஒரு கிலோவா... ரெண்டா..?’’
‘‘விலை சொல்லுப்பா...’’‘‘புதுசும்மா... இன்னிக்கு வாங்கியாந்தது...’’‘‘ரெண்டு போடு. கேரட்ட தவிர வேறெதுவும் திங்க மாட்டேங்கிறான். அஞ்சு வயசுக்கு அவ்ளோ அழும்பு...’’ என்றார் பேரனைப் பற்றிய பெருமிதத்தில்.தட்டில் போட்டதை நிறுத்து பையில் போட்டான். போடும்போதே ஒன்று கீழே விழுந்ததைப் பெண்மணி லாவகமாய்க் குனிந்து எடுத்துக் கொண்டார்.
‘‘தக்காளி... வெங்காயம்..?’’

‘‘அதெல்லாம் இருக்கு. இது எவ்ளோ?’’
‘‘வெள்ளரி நல்லாருக்கும்மா...’’பெண்மணி பர்சைத் திறந்து நோட்டை நீட்டினார். எதிராஜ் மடித்து வைத்திருந்த சாக்கைத் தூக்கிப் பார்த்துவிட்டு நோட்டைத் தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்டான். மீதியை நீட்டினான்.வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு முனகினார்.

‘‘போன வாரத்தை விட விலை ஏத்தம் போல..?’’
‘‘நயம் கேரட் மா. சூப்பர் குவாலிட்டி...’’
‘‘விலையே சொல்லாம அழுத்தமா இருக்கும்போதே நினச்சேன்...’’
அவர் நகர்ந்து போனதும் எதிராஜின் பார்வை பெரியவர் பக்கம் திரும்பியது.
‘‘வேற எதுனாச்சும் வேணுமா?’’
‘‘எலை மட்டும்...’’

‘‘நாளைக்குத் தேவையா..?’’
‘‘ஆமா...’’
‘‘பத்து... பத்து...’’

பெரியவர் பொறுமையாய்த் தலையாட்டினார். எதிராஜ் இலைக் கட்டின் மேல் கை வைக்கப் போனபோது அந்தக் குரல்.

‘‘எடுத்து வச்சிட்டியா..?’’
நிமிர்ந்து பார்த்தவனிடம் ஒரு குழைவு.
‘‘அப்பவே வச்சிட்டேன். எங்கடா சாருக்கு எலைக்கட்டு..?’’
‘‘கட்டணும்னு சொன்னேனே ண்ணே...’’
‘‘என்ன வேலைரா பண்ற...’’ கடுப்படித்தவன் திரும்பினான்.

‘‘இதோ ரெடி பண்ணிடறேன். இருபது நுனி... டிபன் எலை அம்பது...
சரியா?’’

வந்தவர் தன் டூவீலரிலிருந்து இறங்காமல் வேகமாய்த் தலையாட்டினார்.
‘‘ரெடியா இருக்குன்னு சொல்லவும் கைவேலையை அப்படியே போட்டுட்டு வந்தேன்...’’
‘‘வேற எதுவும் வாங்கணுமா?’’
டூவிலருக்கு ஃபோன் ஒலித்தது.

‘‘சொல்லுடி...’’
‘‘.....’’
‘‘வேற. அப்புறம் நினைச்சு நினைச்சு சொல்லாத...’’
‘‘....’’‘‘சரி சரி புலம்ப ஆரம்பிக்காத...’’
எதிராஜிடம் திரும்பிச் சொன்னார்.

‘‘பால் பாக்கெட் வாங்கிட்டு வந்துடறேன். சீக்கிரம் போவணும்...’’டூவீலர் புகையைக் கக்கி விட்டு நகர்ந்தது.எதிராஜ் இலைக்கட்டைப் பிரித்து ஒவ்வொன்றாய் எடுத்தான். நுனி தனியாய், ஏடு தனியாய், கிழிந்த பகுதி தனியாய்.பெரியவர் திடீரென குரல் உயர்த்திச் சொன்னார்.‘‘பத்து போதும்பா...’’எதிராஜ் அதைக் கேட்காதவன் போல் பாதிக் கட்டு வரை பிரித்து விட்டான். இருபது நுனி எண்ணியபோதே அவன் தனக்கு எடுக்கவில்லை என்று பெரியவருக்குப் புரிந்து விட்டது.

இத்தனை நேரமாய் நின்றதில் கால்களில் குடைச்சல். பின்னால் இருந்த வீட்டு வாசலில் சிட் அவுட் இருந்தது. அங்கு போய் உட்காரலாம் என்றால் எதிராஜ் சுத்தமாய்த் தன்னை மறந்துவிடக் கூடும் என்கிற பயம்.டூவீலர் திரும்பி வந்தபோது அவருக்கான இலைக்கட்டு தயாராய் இருந்தது.

‘‘எவ்வளவு?’’
‘‘கொடுங்க சார்...’’ஐநூறை நீட்டினார். நோட்டு சட்டைப்பைக்குள் போக மீதியை சாக்கு மடிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்தான்.‘‘ரேட் எகிறிட்டே போகுது...’’‘‘கிராக்கி ஆயிருச்சு சார். காத்துல நிறைய நாசம். நம்மூர்லதான் இலை கிடைக்குது. டவுன்லயே நுனி பத்து ரூபா...’’டூவீலர் சலித்துக் கொண்டார்.‘‘என்னவோ கதை சொல்லு. உன்கிட்டேதான் வந்தாகணும்... நீ சொல்ற ரேட்... ம்ஹும்...’’போய் விட்டார்.

‘‘என்னப்பா இங்கே நிக்கிற?’’
பெரியவர் குரல் வந்த திசையில் திரும்பினார். சண்முகம். கூட வேலை பார்த்தவர்.பெரியவர் முகம் பூத்துக் கொண்டது.‘‘இன்னும் இருக்கியா..?’’ஹா ஹாவென்று இருவருமே சிரித்தனர். கேலியை மீறி இருவரின் பார்வையிலும் நட்பின் ஈரம் ஜொலித்தது.‘‘காடாறு மாசம் நாடாறு மாசம்... போன வாரம்தான் வந்தேன். அவ போன பிறகு அதான் வாழ்க்கை...’’‘‘ஏய்... உம்பொண்ணுங்க எவ்ளோ ஆசையாக் கூப்பிடுதுங்க!’’‘‘நீ மாறவே இல்லை. தெய்வம்னு உனக்கு அப்ப வச்ச பேர் சரியாத்தான் இருக்கு...’’ சண்முகம் சிரித்தார்.

அலுவலக நாட்களில் பெரியவரின் நிஜப் பெயரே மறந்து போகும் அளவுக்கு ‘தெய்வம்’ என்றே அழைக்கப்பட்டார். அலுவல் சம்பந்தமாய் உதவி தேவை என்றால் ‘தெய்வத்த கேட்டியா?’
பேச்சு ஓடியதில் சூழல் மறந்து போனது. ‘‘அய்யா கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க...’’ என்று யாரோ அதட்டிய குரலில் சொன்னதும் சுதாரித்துக் கொண்டார்கள்.
‘‘இங்கே எதுக்கு நிக்கிற?’’‘‘எல வாங்க வந்தேன்...’’சண்முகம் திரும்பி எதிராஜைப் பார்த்தார்.

‘‘டாலர் ரேட்டுல்ல சொல்வான்...’’
‘‘நல்லா இருக்கும் இங்கே...’’

‘‘அது சரி. எனக்கு இங்கே கட்டுப்படி ஆவாது. ஒரு தடவை அர்ஜெண்டா வாங்கிட்டு போனேன். வூட்டுல செம்ம டோஸ் வுழுந்துச்சு. விசாரிச்சு வாங்க மாட்டிங்களான்னு...’’
‘‘நல்லா சொன்னீங்க. எதிராஜ் வச்சதுதான் விலை...’’ இவர் பேசியதைக் கேட்ட இன்னொருவரின் கேலிச் சிரிப்பு.

எதிராஜின் குரல் கேட்டது.
‘‘ஒங்களுக்கு கட்டி வச்சாச்சு...’’ என்றான்
பெரியவரிடம்.
குனிந்து எடுத்துக் கொண்டார். ரூபாயை நீட்டினார்.

‘‘என்ன விருந்து சாப்பாடா?’’ என்றார் சண்முகம்.
பெரியவர் நிதானமாய் சொன்னார்.
‘‘நாளைக்கு அவ நாள். படையல் வைக்க...’’
‘‘நாலு வருசம் ஓடிப் போச்சுல்ல?’’
‘‘ம்ம்...’’

‘‘இந்த எதிராஜுக்குக் கல்யாணம் நடந்ததுலேர்ந்து குழந்தை டெலிவரி வரைக்கும் ஒம்பொண்டாட்டிதான் உதவிக்குப் போயிருக்காங்க...’’ என்றார் சண்முகம் உடம்பு பழைய நினைவுகளில் சிலிர்த்தபடி.

‘‘ம்ம்...’’
‘‘இங்கே எப்படியும் பார்த்துருவேன். ஒரு நா இல்லாட்டி ஒரு நா. நீ எப்படியிருக்கேன்னு விசாரிப்பேன். வூட்டுக்கு வரச் சொல்வாங்க. வரேன் வரேன்னு சொல்லிட்டு கடைசில மொகம் பார்க்க வராப்ல ஆயிருச்சு...’’சண்முகத்திற்கு மீண்டும் உடம்பு சிலிர்த்துக் கொண்டது.

எதிராஜ் மீதியைக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டார். இலைக் கட்டை லாவகமாய்க் கையில் இடுக்கிக் கொண்டார்.‘‘கிளம்பிட்டியா?’’‘‘போக வேண்டியதுதான்...’’
‘‘சொன்னா வீட்டுல கொண்டு வந்து தரல்லாம் ஆள் இருக்கு. நீ ஏன் அலையற?’’ என்றார் சண்முகம் கரிசனத்துடன்.பெரியவர் நிதானித்து பெருமூச்சு விட்டார்.‘‘அவ இவன்ட்டதான் வாடிக்கையா வாங்குவா. இங்கே வந்தா அவ மிதிச்ச மண்ணைத் தொட்ட உணர்வு வருது. ஏதோ அவளுக்குப் பிடிச்சத செய்யற மாதிரி தோணுது...’’குரல் தழைந்தது.

‘‘அவ உயிரோட இருந்தப்ப பிடிச்ச மாதிரி நடந்துகிட்டேனா தெரியல. ஆனா, இப்ப அவ இல்லாதப்ப அவளுக்கு எது எது பிடிக்கும்னு புத்தி ஓடுது...’’சண்முகம் விக்கித்து நின்றார். ‘தெய்வம்’ திரும்பி வீட்டைப் பார்க்க நடந்தபோது குனிந்திருந்த எதிராஜின் கண்ணிலும் நீர் முட்டியது.

- ரிஷபன்