கெட்டவன் சாகக்கூடாது... கெட்டதுதான் அழியணும்!



மழை பிடிக்காத மனிதன் சீக்ரெட்ஸ்

35 படங்களுக்கு ஒளிப்பதிவாளர், 8 படங்களுக்கு இயக்குநர் என தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படைப்பாளி விஜய் மில்டன். அதுமட்டுமல்ல, ‘கொலுசுகள் பேசட்டும்’, ‘விலக்கப்பட்ட கவிதைகள்’ போன்ற தொகுப்புகள் மூலம் கவிஞராகவும் அறியப்படுபவர்.இப்போது விஜய் ஆண்டனியை வைத்து இவர் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் விஜய் மில்டனிடம் பேசினோம்.

தமிழ் சினிமாவில் ஆளுமைமிக்க படைப்பாளியாக உருவாவோம்னு எதிர்பார்த்தீர்களா?

என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம். அங்கிருந்து பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு, மஞ்சப் பையோடு சென்னைக்கு பயணமான என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு.அது எதுவுமே அவருக்கு அவ்வளவு சுலபமா அமையவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு படங்களை இயக்கினார். அந்தப் படங்களும் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பாவின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் மகன் வழியில் இறைவன் நிறைவேற்றியதாகவே நினைக்கிறேன்.

விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காது?

இந்தக் கேள்விக்கு எளிமையா பதில் சொல்லிட முடியும். ஆனால், அப்படி பதில் சொல்லமாட்டேன். ஒருவரைப் பற்றி மேலோட்டமாகத்தான் நமக்கு தெரியும். பர்சனலா பழகினாதான் ஒருவரின் பல்வேறு குணம் பிடிபடும். அந்த கெமிஸ்ட்ரியை இதுல டிரை பண்ணியிருக்கிறேன்.ஹீரோவுக்கு ஏன் மழை பிடிக்காது என்ற இந்தக் கேள்வி எப்படி ஆடியன்ஸ் மத்தியில் இருக்கிறதோ அதே மாதிரி படத்துல உள்ள மத்த கேரக்டர்களிடமும் இருக்கும். அந்தக் கேள்விக்கான தேடல்தான் படம்.

விஜய் ஆண்டனி என்ன சொல்றார்?

விஜய் ஆண்டனி என்னுடைய நீண்ட நாள் நண்பர். சொல்லப்போனால் நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். இருவரும் சேர்ந்து ‘ட்ரீம் பாட்டில்’ என்ற கம்பெனி ஆரம்பிச்சோம். ‘கோலிசோடா’வை அந்தக் கம்பெனி மூலம் தயாரிப்பது என்றெல்லாம் ப்ளான் போட்டோம்.விஜய் ஆண்டனி பிசி மியூசிக் டைரக்டரா இருந்தபோதே அவருக்கு நடிக்கணும்னு ஆசை. 20 வருஷமா சந்திச்சு பேசினாலும் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போச்சு.

தயாரிப்பாளர் தனஞ்செயன் சாரிடம் கதை சொன்னதும், அவர் உடனே விஜய் ஆண்டனியிடம் கதை சொல்லவெச்சு படத்தை ஆரம்பிச்சுட்டார். கதைக்கும் விஜய் ஆண்டனிதான் பொருத்தமா இருந்தார்.

இயக்குநர் விஜய் ஆண்டனியை இயக்கிய அனுபவம் எப்படி?

விஜய் ஆண்டனி ரசிகர்களுக்குதான் மியூசிக் டைரக்டர், நடிகர். எனக்கு அவருடைய பர்சனல் பக்கங்கள் தெரியும். எந்தவொரு செயலா இருந்தாலும் அதிக ஆர்வம் காட்டுவார்.
நாங்கள் ஏன் கம்பெனி ஆரம்பிச்சு படம் தயாரிக்கவில்லையென்றால், ஓர் உறையில் இரண்டு கத்தி வேணாம் என்பதால்தான். அப்படி, இயக்குநர் விஜய் ஆண்டனி திறமைசாலின்னு எனக்கு முன்பே தெரியும்.விஜய் ஆண்டனியிடம் எனக்கு பிடிச்ச விஷயம் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தருவார். தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடமாட்டார். கதை சொன்னதும் சில விளக்கம் கேட்டார். அதன்பிறகு தேவையில்லாத கேள்விகள் கேட்கமாட்டார். அவர் வேலையில் சின்சியரா இருப்பார். நானும் ஒவ்வொரு ஷெட்யூல் முடிஞ்சதும் அவரிடம் காட்டுவேன். காப்பி ரெடியாகும் வரை இந்த பிராசஸ் இருந்துச்சு.

சத்யராஜ், சரத்குமார் இருக்கிறார்களே?

சத்யராஜ், சரத்குமார், விஜய் ஆண்டனி மூவரும் ஒண்ணா வேலை செய்பவர்கள். அவர்களுக்கு என சில விதிகள் இருக்கும். விதி மீறல் நடக்கும்போது பிரச்னை உருவாகிறது. அவர்களுடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை தங்கள் அனுபத்தால் அசரடிக்குமளவுக்கு பிரமாதமா நடிச்சிருப்பாங்க.ஹீரோயின் மேகா ஆகாஷ். சிறந்த நடிகை. திரையில் அவருடைய அழகு அள்ளும். எந்த சிரமமும் தரமாட்டார். தமிழ் பேசக்கூடிய எளிமையான பெண். அவர் ஏன் இன்னும் உயரத்துக்கு வரலை என்பது ஆச்சர்யம். முன்னணி நடிகைக்கான எல்லா தகுதியும் உடையவர்.

சீன் பேப்பர் பார்த்ததும் அந்த மூடுக்கு வந்துவிடுவார். ஆர்டிஸ்ட்டுக்கு எதிரில் இருப்பவர் என்ன பேசப்போறார்ன்னு ரிகர்சலில் தெரிஞ்சாலும், அப்போதுதான் கேட்பதுபோல பேசுவதும் ரியாக்‌ஷன் தருவதும் சவால். அதை அவ்வளவு அழகா பண்ணினார். வில்லன்களா டாலி தனஞ்செயா, பிருத்வி அம்பார். கன்னடத்தில் ஹீரோவாக படம் பண்ணியவர்கள். கன்னடத்தில் நான் இயக்கிய ‘கடுகு’ ரீமேக்கிலும் நடித்துள்ளார்கள்.

இது வெகுதொலைவில் உள்ள தீவில் நடக்கும் கதை. அதற்கு ஃப்ரெஷ் முகம் தேவைப்பட்டுச்சு. அதுக்கு இவர்கள் சரியா இருந்தார்கள்.முன்பின் தெரியாத இடத்துல கதை நடக்குதுன்னு எழுதிட்டேன். அந்த லொகேஷன் பொறுப்பை தயாரிப்பு நிறுவனம் ஏத்துக்கிச்சு. டையூ, டாமன், கோவாவில் எடுத்துள்ளோம். தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கமல் போரா, பிரதீப் ஆகியோர் பெரிய சப்போர்ட். டீசர் பார்த்துட்டு எல்லோரும் இந்த இடம் நல்லா இருக்கேன்னு பாராட்டுகிறார்கள்.

கதையை இன்னும் சொல்லவில்லையே?

கெட்டவன் சாகக் கூடாது, கெட்டது சாகணும் என்பதுதான் லைன். கெட்டவன் என்பவன் யார்? வானத்துலருந்து குதிச்சு வந்தவன் கிடையாதே? அவனும் சக மனிதன். அவனைக் கொல்வதால மாற்றம் வராது. மக்கள் தொகையில் ஒரு எண்ணிக்கை  குறையும். அவனுக்குள் இருக்கும் கெட்டதைக் கொன்னுட்டா ஒரு உயிர் பிழைக்கும். இதுதான் கதை.

ரசிகர்கள் என்ன மனநிலையில் இந்தப் படத்தைப் பார்க்க வரணும்?

ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி, சென்டிமெண்ட் என கமர்ஷியல் சினிமாவுக்கு சில டெம்ப்ளேட் இருக்கும். அது எல்லாமே இதுல இருக்கு. அதுல கவித்துவமான எதிர்பார்க்காத அம்சங்கள் இருக்கும். ரசிகர்களை பரவசப்படுத்தும்.

ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர் - எது ஆத்ம திருப்தி தருகிறது?

கவிதை. அதுல கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைக்காது. இயக்குநராக ஒரு படத்தில் என்னுடைய முடிவு இல்லாமல் எதுவும் படத்தில் இடம் பெறாது. அப்படி முழுக்க முழுக்க திரைப்படம் இயக்குநரின் படைப்பாக இருந்தாலும் சினிமாவில் எல்லோருடைய உழைப்பும் இருக்கும்.கவிதை என்று வரும்போது அதில் யாரும் பங்குபோட முடியாது. முழுவதையும் நானே சொந்தம் கொண்டாட முடியும். அது அலாதியான மகிழ்ச்சி.

எழுதுவதில் ஏன் அவ்வளவு ஆர்வம் என்று கேட்கிறார்கள். சினிமாவில் ஒரு கேமராமேனிடம் லட்சியம் எது என்றால் மணிரத்னம் படம் எனும்போது அது நடந்துவிட்டால் அவருடைய லட்சியம் நிறைவேறிவிடும்.கவிதை எழுதுவதற்கு வரையறை இல்லை. என்னுடைய மனசுல தோணும் விஷயங்களை எழுதுகிறேன். நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது.

மீதியான காட்சிகளை ஒன்று சேர்த்து வெளியிடுவதுதான் இரண்டாவது பாகம் என்ற விமர்சனம் குறித்து?

‘கோலி சோடா’ முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தமே இருக்காது. அடையாளத்தை அழிக்க நினைப்பவர்களை திருப்பி அடிப்பதுதான் இரண்டு படத்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. அந்த ‘தீம்’மை வெச்சு வெவ்வேறு ஊர்களில் நடக்கும் கதையா பல பாகங்கள் எடுக்கலாம்.உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதாக இருந்தால் மீதியான காட்சிகளை வெச்சு எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ‘நாயகன்’ இப்போது வெளிவந்திருந்தால் மூன்று பாகங்களாக வந்திருக்கும். அதில் பல சம்பவங்களை இரண்டரை மணி நேரத்தில் எவ்வளவு சுருக்கமா சொல்ல முடியுமோ அப்படி சொல்லியிருந்தார்கள்.

முதல் பாகத்துக்கு எப்படி உழைப்பு தேவைப்படுதோ அதே உழைப்பு இரண்டாம் பாகத்துக்கும் தேவைப்படும். முதல் பாகம் வெற்றியடையும்போது இரண்டாம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்.அது பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்று சொல்லமுடியாது. ‘கோலிசோடா - 2’ல பல சவால்  இருந்துச்சு. அந்தப் படத்துக்கு ‘இடி மின்னல் மழை’  என்றுதான் டைட்டில் வெச்சிருந்தேன்.

‘கோலிசோடா - 2’ என மாத்தியதும் ‘கோலிசோடா’ எதிர்பார்ப்புடன் வந்தாங்க. அது வேற இது வேறன்னு சொல்வது பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். இரண்டாம் பாகம் எடுப்பது அவ்வளவு எளிது கிடையாது.  

கேமரா பண்ண கூப்பிடுகிறார்களா?

கூப்பிடச் சொல்லுங்க!

எஸ்.ராஜா