ஃபகத் ஃபாசிலுக்கு என்ன ஆச்சு..?
சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸாவது ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால், இந்த வாரம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், ‘பசங்க - 2’ படத்தின் கருவை ரீ-ரிலீஸ் செய்துள்ளார்! சமீபத்தில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய ஃபகத், ‘‘வயது கூடிய பின்பு ஏடிஹெச்டி எனும் கவனச்சிதறல் நோய் கண்டறியப்பட்டாலும் அதனை குணப்படுத்த முடியுமா..?’’ என்று அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் கேள்வியெழுப்ப... அவ்வளவுதான்... 41 வயதான ஃபகத்தின் ஏடிஹெச்டி அறிகுறிகளும், ‘பசங்க - 2’ திரைப்படத்தின் நயனா மற்றும் கவினின் குழந்தைப்பருவ ஏடிஹெச்டியும் இணையமெங்கும் இப்போது பேசு பொருளாகியுள்ளது. அது என்ன ஏடிஹெச்டி..?அது ஒரு மனநோயா அல்லது மனநலக் குறைபாடா..?
ஏடிஹெச்டி யாருக்கு, எப்போது, எப்படி, ஏன் வருகிறது என்பதையும் அதற்கான தீர்வுகளையும் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.‘‘சொன்ன பேச்சைக் கொஞ்சமும் கேக்கறதில்ல...’’‘‘ஒரு இடத்தில நிக்கறதே இல்ல...’’‘‘எப்ப பாரு கால்ல சக்கரம் கட்டிவிட்டது போல ஓடிட்டே இருக்கான்...’’‘‘விளையாடிட்டு இருக்கும்போதே திடீர்ன்னு அவனுக்குப் பிடிச்ச பாட்டரி பொம்மையைப் போட்டு உடைச்சுடறான்...’’- இது பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மீது வைக்கும் செல்லக் குற்றச்சாட்டுகள்தான்.
ஆனால், குழந்தைகளின் இந்த சொல்பேச்சு கேளாமை மற்றும் அதீத இயக்கம், சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிமிகுந்த செயல்பாடுகளுடனும் (Impulsive Action) அதிக கவனக்குறைவுடனும் (Inattention) ஞாபகமறதியுடனும் இணையும்போது, ADHD எனும் மனநலக் குறைபாடாக அது வெளிப்படுகிறது. அது என்ன ADHD?
Attention Deficit Hyperactivity Disorder என்பதுதான் ADHD. ‘கவனக்குறைவு மற்றும் மிகை இயக்க நோய்’, அதிலுள்ள சொற்களைப் போலவே ஒருசிலரில் வெறும் கவனக்குறைவு (Attention Deficit) சார்ந்த குறைபாடாகவும், ஒருசிலரில் அதீத இயக்கம் (Hyperactivity) சார்ந்த குறைபாடாகவும், ஒருசிலரில் இரண்டும் கலந்த குறைபாடாகவும் காணப்படுகிறது.
ஆக, ஏடிஹெச்டி என்பது உண்மையில் ஒரு நோயல்ல... மனநலக் குறைபாட்டின் வெளிப்பாடே. அதிலும், ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அறிகுறிகள் ஒரே வயதில், ஒரே அளவில், ஒரேபோல எப்போதும் வெளிப்படுவதில்லை. அதனால்தான் ஏடிஹெச்டி ஸ்பெக்ட்ரம் (ADHD Spectrum) என்று - அதாவது ஒன்று, இரண்டு, மூன்று எனும் படிநிலைகளாக அதனை விளக்குகிறார்கள் மனவியல் மருத்துவர்கள். சுருங்கச் சொன்னால், ஏடிஹெச்டியின் சில அறிகுறிகள் நமக்குள்ளும் இயல்பாகக் காணப்படலாம் என்றாலும், நம்மால் அவற்றை எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்பதே இதிலுள்ள வேறுபாடாகும்.
ஏடிஹெச்டி பொதுவாக 5 -12 வயதுக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளிடையே மூன்று மடங்கு அதிகம் காணப்படுகிறது. உலகளவில் ஏறத்தாழ நான்கு கோடி பேருக்கு இந்தக் குறைபாடு இருப்பதாகக் கூறும் புள்ளிவிவரங்கள் - இன்னமும் குறிப்பாக, நகர்வாழ் குழந்தைகளிடமும் மேல்தட்டுக் குழந்தைகளிடமும், அதிலும் மொபைல், இன்டர்நெட் பயன்பாடு அதிகமுள்ள குழந்தைகளிடம் ஏடிஹெச்டி குறைபாடுகள் அதிகம் காணப்படுகிறது என்கிறது.
பொதுவாக, தங்கள் வயதைக் கொண்ட குழந்தைகளைப் போலில்லாமல், பொறுமையின்றி அங்குமிங்கும் ஓடுவது, கட்டுப்பாடின்றி செயல்படுவது, உணர்ச்சிவசப்படுவது, பொருட்களை உடைத்து சேதம் செய்வது, தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது, எதிர்த்துப் பேசுவது, குழந்தைப் பருவத்தில் ஆச்சரியமூட்டும் விதமாக தூங்காமல் இருப்பது, ஆனாலும் சுறுசுறுப்பாக இயங்குவது, எந்தவொரு செயலையும் முழுமையாகச் செய்யாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஒருபக்கமும் -பள்ளியில் கவனமின்மை மற்றும் ஞாபகமறதி, கல்வியில் பின்னடைவு, பசியின்மை, பகல் கனவுகள், யாரிடமும் பேசாமல் இருப்பது, யாருடனும் சேர்ந்து விளையாடாமல் இருப்பது, பொய், களவு, இறுதியாக தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் இன்னொரு பக்கத்திலும் - ஏடிஹெச்டியில் காணப்படுகிறது.
சில குழந்தைகளுக்கு, ‘டிஸ்லெக்சியா’ (Dyslexia) எனும் எழுத்துக்கூட்டி வாசிக்க முடியாத நிலையும், ஆட்டிசம், ஒற்றைத் தலைவலி, வலிப்புநோய் போன்ற நரம்பியல் ரீதியான சிக்கல்களும் இதில் சேர்ந்தே இருக்கக்கூடும். பெரும்பாலும் சிறுவயதிலும் பள்ளிப்பருவத்திலும் தோன்றும் இந்த ஏடிஹெச்டி அறிகுறிகள், பதின்பருவ வயதை அடையும்போது குறைந்துவிடுகிறது என்றாலும், அதிர்ச்சியூட்டும் விதமாக 30 - 50 சதவிகிதத்தினருக்கு, வளர்ந்த பிறகும் தொடர்கிறது; 41 வயது ஃபகத் பாசிலை கேள்வியெழுப்பவும் செய்கிறது.
கவனக்குறைவு, கோபம், பொறுமையின்மை, ஞாபகமறதி, தனிமையை நாடுதல், பழக மறுத்தல், தூக்கமின்மை, தொழிலில் ஈடுபாடின்மை போன்ற அறிகுறிகள் இவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது.ஏன் இந்த ஏடிஹெச்டி குறைபாடு ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், இதற்கு, 75% மரபியல் காரணமாகவும், மிகுதி 25% சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மரபியல் காரணத்தால் குடும்பங்களில் அடுத்தடுத்து ஏடிஹெச்டி வெளிப்படலாம் என்றிருக்க, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களில், கர்ப்பகாலத்தில் தாய் மது அருந்துதல், புகைப் பழக்கம் அல்லது போதை மருந்துப் பயன்பாடுகள் போன்றவற்றிலும் -குறைமாத அல்லது குறைந்த எடைக் குழந்தைகளிடமும், குழந்தைகள் வளரும்போது ஏற்படும் நோய்த்தொற்றுகள் குறிப்பாக மூளைக்காய்ச்சல், தட்டம்மை, ரூபெல்லாக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலும் -விபத்தின் காரணமாக மூளையில் ஏற்படும் இரத்தக்காயங்களிலும், இவற்றுடன் சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் குழந்தைக்கு சிறுவயதில் ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் ஆகிய அனைத்திலும் இந்த ஏடிஹெச்டி குறைபாடு காணப்படலாம்.
இதன் ஸ்பெக்ட்ரத்தை லேசான நிலை, மிதமான நிலை, தீவிர நிலை என வகைப்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.ஏடிஹெச்டியைக் கண்டறிவதில் குழந்தையின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது எனலாம்.பொதுவாக 12 வயதிற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி அறிகுறிகள் கண்டறியப்பட்டாலோ, அறிகுறிகள் தொடர்ந்து ஆறு மாதத்திற்கும் மேலாகக் காணப்பட்டாலோ, பள்ளி - வீடு என இரு வேறு இடங்களிலும் சந்தேகப்படும் அறிகுறிகளுடன் குழந்தை இருந்தாலோ, மருத்துவ ஆலோசனையுடன் ‘கான்னர்ஸ் - 4’ (Conners - 4) எனும் கேள்வி - பதில் சார்ந்த மதிப்பீடும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஏடிஹெச்டி குறைபாடு உறுதி செய்யப்பட்டால், தகுந்த சிகிச்சைகள் இக்குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளில் குழந்தை மனநல மருத்துவர், மனவியல் ஆலோசகர், பேச்சுப் பயிற்சியாளர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்... என ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாததாக இருக்கிறது. இதில் குறிப்பாக ‘Cognitive Behavioral Therapy’ எனப்படும் புலனுணர்வு சார்ந்த சிகிச்சை, Family Therapy என்ற குடும்ப மனநல ஆலோசனைகள், இதர நடத்தை சிகிச்சைகள் பெரிதும் உதவுகிறது.
தகுந்த பள்ளிக்கல்வி, தக்க உடற்பயிற்சிகள், தியானப்பயிற்சிகள், இவற்றுடன் வைட்டமின் ஈ, சி மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவுகள் மற்றும் ஊட்டங்கள் இதில் நன்கு உதவுகின்றன.
ஏடிஹெச்டியைப் பொருத்தவரை மூளையின் நரம்பூக்கிகளான டோப்பமைன் மற்றும் நார்-அட்ரீனலின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால் இந்தக் குறைநிலை ஏற்படுகிறது என்றுகூறும் மருத்துவர்கள், ஏடிஹெச்டிக்கான சிகிச்சைக்கு இந்த நரம்பூக்கிகளை சமன்படுத்தும் மருந்துகளை குறிப்பாக மெத்தில் ஃபெனிடேட், டெக்ஸ் - ஆஃம்பீட்டமின் போன்ற ஊக்க மருந்துகளையும், தேவைப்படும்போது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தைக் கூட்டும் மருந்துகளையும் பரிந்துரைக்கின்றனர்.
இந்த மனநலக் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், இதற்கான தொடர் சிகிச்சைகள், மனவியல் ஆலோசனைகள், தகுந்த கல்வி மற்றும் தொழில் சார்ந்த ஊக்கங்கள் இவர்களுக்கு இப்படியொரு குறைபாடு உள்ளது என்பதே தெரியாமல் இவர்களை வழிநடத்தும் என்பதே உண்மை.ஆக... ஏடிஹெச்டி என்பது குழந்தைப்பருவ குறைபாடுதான்.
ஆனால், ஃபகத் பாசில், அபிஷேக் பச்சன், எம்மா வாட்சன் என நமக்குத் தெரிந்த பிரபலங்களுக்கும், நம் அருகிலுள்ள சிலருக்கும் வயது கூடிய பின்னும் கூட காணப்படுகிறது என்றாலும் இந்தக் குறைபாட்டைக் கையாளும் முறைகளை அவர்களும் உடனிருப்பவர்களும் அறிந்தாலே போதுமானது..‘பசங்க - 2’ படத்தில் கூறப்படுவது போல, குழந்தைகளின் உலகை, அவர்களின் எண்ணங்களை, அவர்களின் உணர்வுகளை, அவர்களின் கனவுகளை உணர்வதும் அவர்களை வழிநடத்துவதும் அவசியமான ஒன்றுதானே..!
- டாக்டர் சசித்ரா தாமோதரன்
|