இப்படியெல்லாம்கூட நாடுகள் இருக்கு!



உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இவற்றில் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டவை 193. பாலஸ்தீனமும், த ஹோலி சீ எனப்படும் வாடிகன் நகரும் உறுப்பினர் அல்லாத அவதானிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் இருக்கின்றன. 
ஆனால், அங்கீகரிக்கப்படாதவை எனச் சில நாடுகளும் உலகில் இருக்கின்றன. அவை தீவுகளாகவோ அல்லது ஒரு நாட்டின் பகுதிக்குள்ளோ இருந்து கொண்டு தங்களைத் தனிநாடாக அங்கீகரித்து செயல்படுகின்றன. அப்படி ஐநாவால் அங்கீகரிக்கப்படாத சுவாரஸ்யம் கொண்ட சில நாடுகளின் கதைகள் இவை.

கிறிஸ்டியானியா

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் உள்ளேயே இருக்கிறது இந்தப் பகுதி. மொத்தமே 84 ஏக்கர்தான். 1971ல் கைவிடப்பட்ட ராணுவத் தளத்தில் ஹிப்பி குழுவினர் குடியேறினர். அப்போதே தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். 
ஹிப்பி என்பது 1960களில் எதிர்பண்பாட்டு வாழ்க்கைமுறை கொண்டவர்களைக் குறிக்கும் சொல். அதாவது விடுதலை மனப்பான்மையுடனும், அதிகார மையத்திற்கு எதிர் நிலைப்பாட்டுடன் உள்ளவர்களைக் குறிக்கிறது. அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நாடு இது. இதனால் இந்நாட்டின் அரசே அரசின்மை கோட்பாட்டைக் கொண்ட ஒன்று.

1978ல் இவர்களுக்கென அரசமைப்பை உருவாக்கினர். தற்போது சுமார் 1000 பேர் இந்த நாட்டில் வசிக்கின்றனர். கோபன்ஹேகனில் நான்காவது சுற்றுலா இடமாக கிறிஸ்டியானியா விளங்குகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இங்கு வந்துசெல்கின்றனர். மியூசியம், பாரம்பரியமான இடங்கள் உள்ளிட்டவை இங்கு உள்ளன. இதைவிட கிறிஸ்டியானியாவின் புஷ்ஷர் தெரு திறந்தவெளி கஞ்சா வணிகத்திற்குப் பெயர்போன ஒன்று.

ஆனால், டென்மார்க்கில் இது சட்டத்திற்கு எதிரானது. அதனால், பல்வேறு பிரச்னைகள் நடந்து சமீபத்தில்தான் திறந்த வர்த்தகத்திற்கு தடைவிதித்துள்ளனர்.

இந்நாட்டின் நாணயமாக கிறிஸ்டியானியா க்ரோனர் உள்ளது. ஆனால், இது டென்மார்க்கில் செல்லாது. இந்தச் சமூக மக்கள் கஃபேக்கள், உணவகங்கள், கடைகள், கலைக்
கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

சீலேண்ட்

பெயரைப் பார்த்ததும் கடலுக்குள் இருக்கும் ஒரு தீவு என்றே நினைப்பீர்கள். அது உண்மையும்கூட. கடலுக்குள் இருக்கும் பகுதியேதான். ஆனால், இந்த சீலேண்ட் சமஸ்தானம் நிலமாக இல்லை என்பதுதான் சுவாரஸ்யம்! உலகின் மிகச்சிறிய நாடு என அழைக்கப்படும் இந்த சீலேண்ட் இங்கிலாந்தின் வடக்குக் கடல் பகுதியில் சஃப்போக் மாநில கடற்கரைப் பகுதியிலிருந்து 12 கிமீ தொலைவில் கடல் நடுவே இருக்கிறது. அதாவது ஆஃப்ஷோர் பிளாட்ஃபார்மாக உள்ள நாடு இது.

உதாரணத்திற்கு, கடலுக்கு நடுவே எண்ணெய் வளத்திற்கு ஆஃப்ஷோர் பிளாட்ஃபார்ம் உருவாக்கப்படும் அல்லவா... அதேபோல இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் அரசு வான்வழித் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பிற்காக இதனை 1942ம் ஆண்டு உருவாக்கியது. அதுதான் இப்போது சீலேண்ட் நாடாகி இருக்கிறது. 

அன்று ஜெர்மனின் விமானங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கடல் தளம். இதற்கு ஹெச்எம் ஃபோர்ட் ரஃப்ஸ் அல்லது ரஃப்ஸ் டவர் என்று பெயர். இதனை பிரிட்டிஷ் சிவில் எஞ்சினியரான கை மவுன்செல் வடிவமைத்தார்.

தேம்ஸ் மற்றும் மெர்சி நதிகளின் முகத்துவாரங்கள் பாதுகாப்பிற்காக இதுபோன்ற கடல் தளங்களை அவர் வடிவமைத்துக் கொடுத்தார். அதனால், இது மவுன்செல் சீ ஃபோர்ட்ஸ் என்றும் அழைக்கப்பட்டது. இந்த ரஃப்ஸ் கடல் தளம் 300 கடற்படை வீரர்கள் இருக்கும்படியான வசதியைக் கொண்டதாக இருந்தது. பின்னர் போர்கள் எல்லாம் முடிந்ததும் 1956ம் ஆண்டு இதிலிருந்து ராயல் நேவி பணியாளர்கள் வெளியேறினர். தவிர, கை மவுன்செல் வடிவமைத்த மவுன்செல் கடல் கோட்டை தளங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.

பிறகு யாருமற்ற கடலில் தத்தளித்த இந்த ரஃப்ஸ் டவர் 1965ம் ஆண்டு ஜாக் மூர் மற்றும் அவரது மகள் ஜேன் ஆகியவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு லைசென்ஸ் இல்லாத வானொலி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. 

அதன்பெயர் வொண்டர்ஃபுல் ரேடியோ லண்டன். தொடர்ந்து 1967ம் ஆண்டு மேஜர் பேட்ரிக் ராய் பேட்ஸ் இந்தக் கடல் கோட்டையை ஆக்கிரமிப்பு செய்தார். அவரும் லைசென்ஸ் இல்லாத பைரேட் ரேடியோ ஸ்டேஷனை ‘ரேடியோ எஸ்செஸ்’ என்ற பெயரில் இந்தத் தளத்திலிருந்து நடத்தினார்.

ஆனால், அவர் ஒலிபரப்பைத் தொடங்கவில்லை. இந்நிலையில் ரஃப்ஸ் டவரை சுதந்திரப் பகுதி என்றும், அதற்கு சீலேண்ட் எனப் பெயரிட்டும் அதன் அதிபரென தன்னை அறிவித்துக்கொண்டும் செயல்படத் தொடங்கினார் ராய் பேட்ஸ். 

அவரும், அவர் மனைவி ஜோன் பேட்ஸும் இங்கே குடியேறினர். இதன் பிறகு நிறைய பிரச்னைகள் வந்தன. 1968ம் ஆண்டே பிரிட்டிஷ் தொழிலாளர்கள் சிலர் தங்களது பிராந்திய கடல் எனக் கூறிக்கொண்டு இந்தக் கடல் கோட்டைக்குள் நுைழய முயன்றனர்.

அப்போது ராய் பேட்ஸின் மகன் மைக்கேல் பேட்ஸ் துப்பாக்கிச் சூடு மூலம் எச்சரிக்கை செய்தார். மைக்கேல் பேட்ஸ் பிரிட்டிஷ் குடிமகன் என்பதால் இதுகுறித்தான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. 

அப்போது நீதிமன்றம் பிரிட்டிஷ் பகுதிக்கு வெளியே, அதாவது மூன்று நாட்டிக்கல் மைலுக்கு வெளியே உள்ள பகுதி அது என்றது. இதனால், பிரிட்டிஷ் அரசின் நீதி அதிகார வரம்பிற்குள் வராததால் வழக்கு முடிவுக்கு வந்தது. இந்தக் காரணத்தால் ராய் பேட்ஸ் இது சீலேண்ட் நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் எனக் கொண்டாடினார்.

தொடர்ந்து 1978ல் அலெக்சாண்டர் அச்சன்பாக் என்ற பிசினஸ்மேன் சீலேண்டின் மீது ஜெர்மன் மற்றும் டச்சு கூலிப்படையினர் கொண்டு தாக்குதல் நடத்தினார். அங்கே ஒரு ஆடம்பர ஹோட்டலும், கேஸினோவும் அமைப்பது அவரின் திட்டம். 

அந்தக் கூலிப்படையினர் ராய் பேட்ஸின் மகன் மைக்கேல் பேட்ஸை சிறைபிடித்தனர். ஆனால், மைக்கேல் பேட்ஸ் மறுதாக்குதல் நடத்தி அவர்களை சிறைபிடித்து பிணைக் கைதிகளாக்கினார். அவர்கள் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே விடுவிக்கப்பட்டனர்.

இதன்பிறகு 1987ல் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லையை 12 நாட்டிக்கல் மைலாக விரிவுபடுத்தியது. சீலேண்ட் பிரிட்டிஷ் கடல் எல்லைக்குள் வருவதாகத் தெரிவித்தது. இதனால், இன்றும் சர்ச்சைகள் தொடர்கின்றன.இதற்கிடையேதான் சீலேண்ட் நாட்டிற்கான சொந்த கொடி, நாணயம், தபால் தலைகள் மற்றும் தேசிய கீதத்தை உருவாக்கினார் ராய் பேட்ஸ். தவிர, ஒரு கால்பந்து மைதானத்தில் பாதி அளவு கூட இல்லாத சீலேண்டிற்கு தேசிய கால்பந்து அணியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், உலகில் வேறு எந்த நாடும் இவற்றை அங்கீகரிக்கவில்லை.

2012ம் ஆண்டு ராய் பேட்ஸ் தன் 91வது வயதில் காலமானார். 2016ல் ஜோன் பேட்ஸும் மரணித்தார். தற்போது இவர்களின் மகன் மைக்கேல் பேட்ஸ் பிரிட்டனின் சஃப்போக் மாநிலத்தில் வசித்தாலும் சீலேண்டின் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்து வருகிறார்.இதில் தற்போது மைக்கேல் பேட்ஸின் மகனும் இணைந்துள்ளார். 

அங்கிருந்து மீன் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதாகச் சொல்கிறார் மைக்கேல் பேட்ஸ். இந்த கடல் தளத்தில் பல்வேறு அறைகள் உள்ளன. டிவி, இன்டர்நெட் வசதி உள்பட அனைத்தும் இருக்கின்றன. இருப்பினும் அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்தபடியே உள்ளன.

முர்ராவாரி குடியரசு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திற்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கொண்டது முர்ராவாரி குடியரசு. 2013ம் ஆண்டுதான் குடியரசாக அறிவித்துக் கொண்டது.

அபாரிஜினல் ஆஸ்திரேலியர்கள் இந்த முர்ராவாரி மக்கள். அதாவது பூர்வகுடி ஆஸ்திரேலியர்கள். ஆனால், இவர்களின் தனி குடியரசை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் 81 ஆயிரம் சதுர கிமீ பரப்பு இடம் தங்களுடையது என உரிமை கோருகின்றனர். தனிக்கொடி, அரசமைப்பைக் கொண்ட இந்தப் பகுதி 3 ஆயிரத்து 500 மக்களைக் கொண்டுள்ளது.

ஹட் நதி சமஸ்தானம்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 517கி.மீ தொலைவில் உள்ளது ஹட் நதி சமஸ்தானம். இந்தப் பகுதி 1970ல் சுதந்திரம் பெற்ற நாடாக அறிவித்தது. அப்போதிலிருந்து 2017 வரை லியோனார்ட் ஜார்ஜ் கேஸ்லி இளவரசராக இருந்தார். பிறகு அவரின் வாரிசாக கிரேம் வந்தார். தனி நாணயம், கொடி, சீல் எல்லாம் இந்நாட்டிற்கு இருந்தது. 2020ல் கேஸ்லி மரணமடைந்தார். அந்நேரம் கோவிட் ஏற்படுத்திய கடனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் இந்நாடு இணைவதாக அறிவித்தது.

இதுதவிர, அமெரிக்காவில் லகோடா மக்கள் ஏற்படுத்தியுள்ள லகோடா குடியரசு, ஆப்ரிக்காவில் லோஸி பழங்குடிகள் ஏற்படுத்தியுள்ள பரோட்செலாண்ட் நாடு, உக்ரைன், ரஷ்யா பகுதிக்கிடையே உள்ள கிரீமியா உள்ளிட்டவை தனிப் பகுதிகளாக அறிவித்து செயல்படுகின்றன. இவை எதற்கும் அங்கீகாரம் கிடையாது.

பேராச்சி கண்ணன்