காலநிலை மாற்றமும் உணவுப் பொருள் தட்டுப்பாடும்...



எச்சரிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம்...’ என்ற ஒரு சொற்றொடரை கேள்விப்பட்டிருப்போம். சம்பந்தமே இல்லாத இரண்டு விஷயங்களுக்கு இடையில் யாராவது ஒரு தொடர்பை ஏற்படுத்தினால் ஒரு ஆச்சரியம் வருமே... அந்த ஆச்சரியத்தில் உண்டானதுதான் இந்த சொற்றொடர். 
அதேமாதிரிதான் காலநிலை மாற்றத்தால் நாம் அன்றாடம்  உண்ணக்கூடிய நுகர்வுப் பொருட்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும் என சூழல்வாதிகள் எச்சரிக்கிறார்கள்.உதாரணமாக பாமாயில், சாக்லேட்டுக்கு பயன்படும் கோக்கோவை எடுத்துக்கொள்வோம்.

உலகின் 90 சதவீதமான பனை மரங்கள் எங்கு இருக்கிறது தெரியுமா? தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியாவிலும் மலேசியாவிலும். இந்த பனை மரங்களில் இருந்துதான் பாமாயிலும், டால்டா எனும் வனஸ்பதியும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாமாயில் நேரடியாக சமையலுக்கும், வனஸ்பதி பிஸ்கெட், சிப்ஸ், சோப்பு, நூடுல்ஸ், பிரட் மற்றும் இன்னபிற இன்ஸ்டண்ட் உணவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாமாயிலின் உற்பத்திதான் கடந்த ஆண்டைவிட தற்போது சரிவை சந்தித்திருப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள். சரி; இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

உலகளவில் இந்தியாதான் சுமார் 20% பாமாயிலை இறக்குமதி செய்கிறது. அடுத்துதான் சீனா. உதாரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சோப்புகளின் செலவில் சுமார் 50% வனஸ்பதி எடுத்துக்கொள்கிறது என்றால் எப்படி இருக்கும்? 

சோப்பு போடாமல் குளிக்கவேண்டியதுதான்!பாமாயில் இந்தியாவுக்கு அவசியமா என்று கேட்கலாம். சமையலுக்காக இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணெயில் சுமார் 70% இடம் பாமாயிலுக்குத்தான். இனி வெங்காயம் இல்லாமல் சமைப்பது போல் பாமாயில் இல்லாமல் சமைப்பது எப்படி என்று யாராவது யூடியூபில் வீடியோ போடலாம்!

அடுத்து கோக்கோ (cocoa)

இந்தியாவில் சாக்லேட்டின் பயன்பாடு அதிகம். அதிலும் காதலுக்கு ஏற்ற உணவு என்று பில்டப் கொடுத்திருப்பதால் இந்த உணவுக்கு வரவேற்பு எக்கச்சக்கம். அதிலும் இன்ஸ்டண்ட் எனர்ஜி, காமத்தை தூண்டக்கூடியது... என்றெல்லாம் ஹைப் கிரியேட் செய்யப்பட்டிருப்பதால் இந்த உணவுக்கு அபாரமான வரவேற்பு. 

இந்த கோக்கோ பயிர் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில்தான் அதிகம். இதுவும் உற்பத்தியில் சரிந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த பாமாயில், கோக்கோ போன்ற இன்னும் பல உணவுகளின் தட்டுப்பாடு, விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

அதிகப் படியான மழை அல்லது மழையே இல்லாத வறட்சியைத்தான் கைகாட்டுகிறார்கள் நிபுணர்கள்.சில மணிநேரங்களில் அதிகப்படியான மழை அல்லது மழையே இல்லாத வறட்சிக்குக் காரணமாகச் சொல்லப்படுவது க்ளைமேட் சேன்ஞ் எனச் சொல்லப்படும் காலநிலை மாற்றம்தான். 

காலநிலை மாற்றம்தான் பூமி சூடாகுதல், பனிப் பாளங்கள் உடைப்பு, ஓசோன் ஓட்டை என்ற கேடுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது. இதற்கான காரணங்களாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், காடுகள் அழிப்பு போன்றவற்றைத்தான் நம்பர் ஒன் குற்றவாளிகளாக நிறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல்வாதிகள்.

உலகளவில் பாமாயில், கோக்கோ எல்லாம் உற்பத்தியில் சரிய இந்திய நிலையில் அதுவும் தமிழக அளவில் என்னவகையான மாற்றங்கள் உணவு உற்பத்தியில் ஏற்படும்... அதுவும் காலநிலை மாற்றத்தால் என்னவகையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்... என சுற்றுச்சூழல் ஆர்வலரான அனந்துவிடம் பேசினோம்.‘‘இந்திய அளவில் கோதுமையை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஒன்றிய அரசு தடை செய்திருப்பதற்கான காரணமே அது உற்பத்தியில் சரிவை சந்தித்திருப்பதுதான். அதுமாதிரிதான் அண்மையில் அரசு அரிசியையும் ஏற்றுமதிக்காக தடை செய்திருப்பது.

அரிசியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. விளைச்சலும் குறைந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்திலேயே பாதி அளவிலான அரிசி உற்பத்திதான் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். இதுமாதிரிதான் ஓசூர், தர்மபுரியில் எல்லாம் விளையக்கூடிய கேழ்விரகு உற்பத்தியும் வறட்சியால் பெரிய பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.

அதேபோல் நெல் அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் பயிரிடும் எள்ளின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. எள் உற்பத்திக்கு கொஞ்சம் பனி அவசியம். குளிருக்கும் பனிக்கும் வித்தியாசம்  உண்டு. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே எள்ளை அறுவடை செய்துவிடுவார்கள். இதுவும் இந்த ஆண்டில் பாதித்திருக்கிறது. சென்னை, தூத்துக்குடி, நெல்லையில் மழை பெய்தது.

அந்த மழையும் விவசாயத்துக்கு உதவவில்லை. பரவலாக தமிழகத்தில் மழை இல்லாததால் நெல், எள் மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களின் உற்பத்தியில் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.
காலநிலைப் பிரச்னை தீவிரமானால் இன்னும் இதுபோன்ற உணவுகளின் தட்டுப்பாடும், அதன் விளைவாக ஏற்படும் விலை ஏற்றத்தையும் யாராலும் தடுக்கமுடியாது...’’ என்கிறார் அனந்து.

டி.ரஞ்சித்