மலையாளப் படத்தை சிங்கள டைரக்டர் இயக்க... மணிரத்னம் வெளியிடுகிறார்!



கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சித் போன்ற தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களால் அதிகம் கவனிக்கப்படும் சர்வதேச இயக்குநர் பிரசன்னா விதாங்கே. இலங்கையைச் சேர்ந்த இவர் இயக்கியது எல்லாமே சிங்களப் படங்கள். 
ஆனால், அந்தப் படங்கள் சர்வதேசஅளவில் சென்றடைந்ததோடு, பல விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளன.இப்போது முதன் முறையாக ‘பாரடைஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார். பட வெளியீட்டுக்கு முன்பே கொரியா, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஹாங்காங் உட்பட பல நாடுகளில் படம் திரையிடப்பட்டு பல விருதுகளைப்பெற்றுள்ளது.

இந்தப் படத்தை இந்தியாவின் ஆகச் சிறந்த  இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ வழியாக வெளியிடுகிறார். ‘பாரடைஸ்’ படம் இந்தியாவிலும் பல விருதுகளை வென்றுள்ள நிலையில் குறுகிய பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த பிரசன்னா விதாங்கேயைச் சந்தித்தோம். இவர் இயக்குநர் மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் தகவல்.

உங்களை விருதுகளின் இயக்குநர் என்று சொல்கிறார்களே?

விருதுப் படமோ, கமர்ஷியல் படமோ எதுவும் ஆர்ட் ஃபார்மில் பொதுவானது. எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசைக் கலைஞர். சிவாஜி மாபெரும் நடிகர். நடிகர், இசைக் கலைஞர் என அவர்களை நாம் பிரித்துப் பார்த்ததுமில்லை, மறந்ததுமில்லை.விருது என்பது தற்காலிகமானது. அது விருதுக் கமிட்டியால் வழங்கப்படுகிறது. விருதுகளை மனதில் வைத்து நான் எப்போதும் படம் பண்ணுவதில்லை. என்னுடைய படங்களில் என்னைப் பிரதிபலிக்கிறேன். அதில் என்னுடைய ‘த பெஸ்ட்’ கொடுக்க முயற்சிக்கிறேன்.

ஒரு படைப்பாளியாக என்னுடைய படங்களில் மனித நேயத்தை அதிகம்  பேசுகிறேன். எனக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் புதைந்து இருக்கும் உண்மையைப் பேசுகிறேன்.
மக்கள் பிரச்னைகளைப் பேச பல தளங்கள் இருந்தாலும் சினிமா சக்தி வாய்ந்த களம். உணர்ச்சி பொங்க டயலாக் வழியாகத்தான் மக்களின் வலியைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. மெளனப் படங்கள் வழியாகவும் நம்முடைய உணர்வுகளையும், வலியையும் சொல்ல முடியும்.

அப்படி ஒவ்வொரு  படம் பண்ணும்போதும் என்னைப் பற்றியோ, பிசினஸ் பற்றியோ யோசிக்காமல் நான் எடுத்துக்கொள்ளும் படைப்பைக் குறித்து மட்டுமே சிந்திப்பேன்.
பணத்துக்காகவோ, வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டும் என்பதற்காகவோ நான் சினிமா பண்ணுவதில்லை. 

பணம் சம்பாதிக்க எனக்கு பல வேலைகள், வழிகள் இருக்கின்றன.வசதியான வாழ்க்கைக்காக பொருள் தேடி உலகம் சுற்றலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றியும், தன்னிடமுள்ளவைகளைப் பற்றியும் சுயபுரிதல் இருப்பது மிக முக்கியம். அது புரிய ஆரம்பித்தாலே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதைத்தான் என்னுடைய படங்களில் சொல்ல முயற்சிக்கிறேன்.

முதன் முறையாக இந்திய சினிமா செய்துள்ளீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

‘Dream come True’ என்று சொல்வார்கள். அதுதான் மலையாளத்தில் நான் இயக்கியுள்ள ‘பாரடைஸ்’. இந்தியர்களும், இந்திய சினிமாவும் எப்போதும் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
ஆரம்ப காலத்தில் வருடத்தில் பாதி  நாட்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறேன். 

ஸ்ரீகர் பிரசாத் என்னுடைய ஃபேவரைட் எடிட்டர்.‘பாரடைஸ்’ எதைப்பற்றி பேசுகிறது என்றால், ஒரு மலையாளத் தம்பதி வேலைக்காக மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. தங்களுடைய திருமண நாளைக் கொண்டாடுவதற்காக இலங்கை செல்ல திட்டமிடுகிறார்கள்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பற்றித் தெரியாத நிலையில் அங்கு வந்து சேருகிறார்கள். அந்தச் சூழ்நிலையில் சுற்றுலா வந்த தம்பதிகள் என்ன மாதிரியான பிரச்னைகளை இலங்கையில் சந்திக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல தொடர்புகள் இருந்தாலும் மிக முக்கியமாக இராமாயணம் இரு நாட்டையும் இணைப்பதாகவே கருதுகிறேன்.

இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களை்க காண்பதற்காகவே இந்தியர்கள் பலர் இலங்கைக்குச் சுற்றுலா வருவதுண்டு. என்னைப் போன்ற சிலருக்கு அது வரலாறு. சிலருக்கு அது மத நம்பிக்கை. சிலருக்கு அது புராணக் கதை. இலங்கை மக்கள் பலர் இராவணனை நம்புகிறார்கள். இதெல்லாம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் அம்சங்கள்.

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் இந்தியர்கள். கதை இலங்கையில் நடந்தாலும் ஒவ்வொரு இந்தியரும் இலங்கை மக்களின் வலியை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ரோஷன் மேத்யூ அபாரமான நடிப்பாற்றல் உள்ளவர். ரொமான்ஸ் ஹீரோ என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர். தனித்துவமான நடிப்பை அவரிடம் பார்க்கலாம். அவருக்கு நெகட்டிவ் கலந்த கேரக்டர். பொதுவாக அந்த மாதிரி கேரக்டர்களில் பெரும்பாலான ஹீரோக்கள் நடிக்கத் தயங்குவார்கள்.

கேரக்டர் மீதுள்ள நம்பிக்கையில் படத்துக்குள் வந்தார் ரோஷன்.தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடித்துள்ளார். நான் பணிபுரிந்த நடிகைகளில் மிகவும் திறமையானவர். ஒவ்வொரு நாளும் கேமராவுக்கு முன் பல ஆச்சர்யங்களை நிகழ்த்துவார். அப்படியொரு திறமை அவரிடம் உள்ளது. மனித உணர்வுகளைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார். அதை தன்னுடைய கேரக்டருக்குள் புகுத்தி ஆகச் சிறந்த நடிப்பை வழங்கும்போது பிரமிப்பாக இருக்கும்.

மிஷ்கின் போன்ற பல இயக்குநர்களுடன் பணிபுரிந்த கே, மியூசிக் பண்ணுகிறார். அவருடன் எனக்கு இது நாலாவது படம். கதையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் இசை வழியாகச் சொல்லவேண்டும். அதை மிகச் சிறப்பாகப் பண்ணினார். ஹங்கேரியில் உள்ள சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா பின்னணி இசையில் வேலை செய்துள்ளார்கள்.

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற கேமராமேன். அனுராக் காஷ்யப் படங்களுக்கு தொடர்ந்து இவர்தான் கேமரா பண்ணியிருக்கிறார். இப்போது யஷ் நடிக்கும் படத்துக்கும் இவர்தான் கேமரா.

இந்தப் படத்தில் தன் கேமரா வழியாக இந்திய சினிமாவுக்கு புது லுக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு வகையில் அவரை படத்தோட மெயின் பில்லர் என்றும் சொல்லலாம்.
தபஸ் நாயக் சவுண்ட் டிசைனிங் பண்ணியிருக்கிறார். என்னுடைய பல படங்களுக்கு வேலை செய்துள்ளார். ஒலி நுட்பம் வழியாக கதைக்களத்துக்கு மிக எளிதாக அழைத்துச் செல்லக்
கூடிய திறமைசாலி. 

என்னுடைய எல்லா படங்களையும் லைவ் சவுண்டில்தான் எடுப்பேன். அதற்கு எனக்கு பெரிய சப்போர்ட் தபஸ் நாயக்.என்னுடைய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பற்றியும் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து என்னுடன் டிராவல் பண்ணுகிறார். அப்போது என்னிடம் சினாப்சிஸ் மட்டுமே இருந்தது. அதிலிருந்து இருவரும் பரஸ்பரம் ஐடியாக்களை மாற்றிக் கொண்டோம்.
 
எவ்வளவு பிரமாதமாக ஷூட் பண்ணிட்டு வந்தாலும் அவருடைய எடிட்டிங் டேபிளில் படத்துக்கான புது லுக் கிடைத்துவிடும். அது ஸ்கிரிப்ட்டில் இருக்கவே இருக்காது. படத்தில் ஹைலைட்டா எதையாவது பேசுகிறோம் என்றால் அது ஸ்ரீகர் பிரசாத்தின் வேலையாக இருக்கும்.லைன் புரடியூசர் விக்கியின் பங்களிப்பும் பெரியளவில் உதவியாக இருந்தது. பல படங்களை நான் எடுத்துள்ளேன். 

ஆனால், திட்டமிட்டபடி பட்ஜெட்டுக்குள் என்னால் படத்தை முடிக்க முடியாது. பொருளாதார நெருக்கடி சமயத்தில் இலங்கையில் விலைவாசி கட்டுக்கடங்காத நிலையில் இருந்தது. அந்த நிலைமையிலும் பட்ஜெட்டில் படத்தை முடிக்க உதவியாக இருந்தார். தயாரிப்பு நியூட்டன் சினிமா.  

‘பாரடைஸ்’ படம் போராளிகளுக்கு எதிரான படம் என்ற விமர்சனம் வருகிறதே?

போராளிகளுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுலா, ஏற்றுமதி, இறக்குமதிதான் அதன் அடிப்படை பொருளாதாரக் கூறுகள். ஊழல் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் அரசு கஜானா காலியானது. மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகள் சந்தித்த பிரச்னைகளைத்தான் பேசியிருக்கிறேன்.

மணிரத்னத்துக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி சொல்லுங்கள்?

மணி சார் என்னைவிட மூத்தவர். இந்திய சினிமாவில் என்னை அதிகம் பாதித்த இயக்குநர்களில் மணி சார் முக்கியமானவர். சொல்லப்போனால் அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் சினிமா பழகினேன். 

‘மெளன ராகம்’ என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்.என்னுடைய ஒவ்வொரு படம் முடிந்ததும் மணி சாருக்கு காண்பித்துவிடுவேன். சொன்னா நம்பமாட்டீங்க, என்னுடைய படத்தின் முதல் பார்வையாளர் மணி சார்தான். அப்படித்தான் ‘பாரடைஸ்’ படத்தையும் பார்த்தார்.

‘ஒவ்வொரு படத்திலும் அடுத்த கட்டத்துக்கு எப்படி உங்களால் போக முடிகிறது’ என்று பாராட்டியதோடு, ‘‘மெட்ராஸ் டாக்கீஸ்’ பேனர்ல நானே ரிலீஸ் பண்ணித் தர்றேன்’னு சொன்னார். அதெல்லாம் எந்தவித ஆதாயமும் இல்லாமல் பெருந்தன்மையுடன் சொன்னவை. மணி சாரின் உதவி எனக்கு பேருதவியாக இருந்தது. இந்தியாவில் பல பட விழாக்களில் படத்தைத் திரையிட்டோம். ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ என்ற டைட்டில் வந்ததும் ஆடியன்ஸ் கைதட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்திய சினிமாவுக்கும் இலங்கை சினிமாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?

நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இலங்கை சினிமாவுக்கு குறிப்பிட்டளவுக்கு மட்டுமே திரையரங்குகள் உள்ளன. அதிகபட்சமாக அங்கு 200 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. இந்திய மதிப்பில் பிரம்மாண்டமான சிங்களப் படத்தை ரூ.4 கோடியில் எடுத்துவிட முடியும். ஏனெனில், அங்கு சிறியளவிலான மார்க்கெட் மட்டுமே உள்ளது. ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் போன்றவர்களின் சம்பளம் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்காது. இலங்கை சினிமாவை இந்திய சினிமாவுடன் ஒப்பிடுவதாக இருந்தால் ஒரியா சினிமாவுடன் ஒப்பிடலாம்.

தொடர்ந்து இந்திய சினிமா செய்வீர்களா?

எந்த மொழியில் படம் எடுத்தாலும் கதை  முக்கியம். இந்தியர்களுக்குப் பொருந்தக்கூடிய  கதையாக இருந்தால் பண்ணுவேன். ‘பாரடைஸ்’ படத்தை  இந்தியர்களை எல்லாவிதத்திலும் கனெக்ட் பண்ணும் படமாக எடுத்ததில் மகிழ்ச்சி. மக்களுக்கு என்னுடைய படம் பிடிக்க வேண்டும். தொழில் ரீதியாக இயங்குவதைவிட மனப்பூர்வமாக இந்திய படங்கள் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழில் படம் எடுக்கும் ஐடியா இருக்கிறதா?

தமிழ் சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு 90களிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. ஸ்ரீகர் பிரசாத், லட்சுமி நாராயணன் என பல டெக்னீஷியன்களுடன் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். ஜெமினி, பிரசாத் லேப்களில் என்னுடைய பட வேலைகள் நடந்துள்ளன. அவர்களிடமிருந்து எனக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. நடிகர்களுடன் மட்டுமே இதுவரை இணைந்து வேலை செய்யவில்லை. தமிழ் ஹீரோக்களை வைத்து படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன்.

எஸ்.ராஜா