உலகின் மிகப்பெரிய கோழிப் பண்ணை விவசாயி!



இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயிகள் முட்டைக்காக மட்டுமே கோழிகளை வளர்த்து வந்தனர். அப்போது இறைச்சிக்காக மட்டுமே கோழிகளை வளர்க்கும் வழக்கம் எங்கேயும் இல்லை. கோழிக்கு வயதான பிறகு அல்லது முட்டையிடாத போதோ அல்லது கோழி இறந்த பிறகோதான் அதை இறைச்சிக்காக விற்பனை செய்தனர்.
இந்நிலையில் சிசிலி என்ற விவசாயி முட்டை பிசினஸ் செய்வதற்காக, 50 கோழிக் குஞ்சுகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். ஆனால், தவறுதலாக கோழிப் பண்ணையிலிருந்து 500 கோழிக்குஞ்சுகளை அனுப்பிவிட்டனர்.

அவர் மீதி 450 கோழிக்குஞ்சுகளைத் திருப்பி அனுப்பாமல், உரிய தொகையைக் கொடுத்துவிட்டு இறைச்சிக்காக வளர்க்க ஆரம்பித்தார். முட்டை விற்பனையை விட, கோழி இறைச்சியில் அதிக லாபம் கிடைத்தது. சிசிலியைப் பார்த்து சுற்றியிருந்த விவசாயிகளும் இறைச்சிக்காக கோழிகளை வளர்க்க ஆரம்பித்தனர். வெறும் இறைச்சிக்காக மட்டுமே கோழிகளை வளர்க்கும் பிராய்லர் கோழி பிசினஸுக்கு வித்திட்டவர் சிசிலிதான்.

இன்று மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் கோழிகள் உள்ளன. ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தகவல்படி உலகம் முழுவதும் 3,300 கோடிக்கும் அதிகமான கோழிகள் இருக்கின்றன. இதற்கு ஒரு காரணமாக இருப்பவர் ஃபூ குவாங்மிங். ‘ஃபூஜியன் சன்னர் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட்’ என்ற பெயரில் சீனாவில் இயங்கிவரும் மாபெரும் கோழிப்பண்ணையின் நிறுவனர் இவர்.

சீனாவில் உள்ள புகழ்வாய்ந்த ‘கே.எஃப்.சி’ மற்றும் ‘மெக்டொனால்ட்ஸ்’  உணவகங்களின் பெரும்பாலான கிளைகளுக்குக் கோழி இறைச்சியை விநியோகம் செய்வதும் இவரே. கோழிப்பண்ணை விவசாயத்தில் உலகின் பெரும் பணக்காரரும் ஃபூதான். சரியான திட்டமிடல், விசாலமான பார்வை, கடின உழைப்பு இருந்தால் கோழிப்பண்ணையிலும் கோடிகளைக் குவிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ஃபூ.

சீனாவில் உள்ள அங்குய் எனும் கிராமத்தில் 1964ம் வருடம் பிறந்தார் ஃபூ குவாங்மிங். அவரது குடும்பம் அங்குயில் விவசாயம் செய்து வந்தது. பள்ளியில் படிக்கும்போது கிடைக்கும் விடுமுறை நாட்களில் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வதுதான் ஃபூவின் ஒரே பொழுதுபோக்கு. நாளடைவில் விவசாயத்தின் மீது பெரிய ஈர்ப்பே அவருக்குள் உண்டாகிவிட்டது. அதனால் கல்லூரியில் விவசாயத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தார். படிப்பை முடித்த பிறகு விவசாயத்துறையில்தான் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஆனால், பயிர்களை வளர்த்து அறுவடை செய்வதைக் காட்டிலும், கோழி வளர்ப்பதில் நல்ல பிசினஸ் வாய்ப்புகள் இருப்பதைப் படிப்பின் மூலமாகத் தெரிந்துகொண்டார்.எண்பதுகளின் மத்தியில் 100 கோழிகளுடன் சிறிய அளவில் ஒரு பண்ணையை ஆரம்பித்தார். கோழிகளை வளர்ப்பது, பராமரிப்பது, இறைச்சிக்காக வெட்டுவது, விற்பனை செய்வது என சகலத்தையும் ஃபூ ஒருவரே பார்த்துக்கொண்டார். அவரைப் போலவே பலரும் கோழிப்பண்ணை பிசினஸ் செய்துவந்தனர். அதிலிருந்து தன்னை தனித்துவமாகக் காட்டிக்கொள்ள கோழிப்பண்ணையை ஒரு நிறுவனமாக மாற்றினார்.

சீனாவில் உள்ள ஃபூஜியன் மாகாணத்தில் 1983ம் வருடம் உதயமானது ‘ஃபூஜியன் சன்னர் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட்’. தனது நிறுவன பிராண்டில் கோழிக்கறியை விற்க ஆரம்பித்தார். அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு லட்சம் கோழிகளை வளர்க்கும் ஒரு பண்ணையாக மாறியது அவரது நிறுவனம்.

மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்காக மட்டுமே இருபது பேரை வேலைக்குச் சேர்த்தார். சீனாவில் கோழிக்கறியை மார்க்கெட்டிங் செய்த முதல் நிறுவனம் ஃபூவுடையதுதான். கோழிகளைப் பராமரிக்கவும், இறைச்சிக்காக கோழிகளை வெட்டவும் இருபத்தைந்து பேர் இரவு, பகலாக வேலை செய்தனர்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கோழிகளின் எண்ணிக்கை பத்து லட்சமாக உயர்ந்தது. சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஃபூவின் கோழி இறைச்சிதான். சின்னச் சின்ன உணவகங்கள், மக்கள், கடைகளுக்கு மட்டுமே கோழி இறைச்சியை விநியோகம் செய்துவந்தார் ஃபூ. தினசரி வாடிக்கையாளர்கள் கிடைத்தாலும் விற்பனையின் அளவு குறைவாக இருந்தது. அதனால் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை.

லாபம் அதிகமாகக் கிடைக்க வேண்டுமானால் விற்பனையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால் அதிகமாக நுகரும் வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்த வேண்டும் என்பது அவரது பிசினஸ் மந்திரம். பெரிய வாடிக்கையாளரைத் தேடும் பயணத்தில் 1994ம் வருடம் ‘கே.எஃப்.சி’யைத் தன்வசமாக்கினார்.

குறைவான விலையில், தரமான கோழி இறைச்சியை விநியோகம் செய்ய, சீனாவில் உள்ள பெரும்பாலான ‘கே.எஃப்.சி’களின் ஆர்டர் கிடைத்தது. அவரது பண்ணையில் வளர்ந்துவந்த கோழிகளின் எண்ணிக்கை கோடிகளில் உயர்ந்தது. இதில் சில லட்சம் கோழிகளைத் தினமும் ‘கே.எஃப்.சி’க்கு விநியோகம் செய்தார்.

இந்த விநியோகம் இன்றும் தொடர்கிறது. இதற்கிடையில் இன்னொரு மாபெரும் உணவு நிறுவனமான ‘மெக்டொனால்ட் ஸு’ம் ஃபூவின் வாடிக்கையாளராக மாறியது. கோழிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் லாபமும் கோடிகளில் கொட்ட ஆரம்பித்தது. பிறகு சீனாவின் முக்கிய உணவு நிறுவனங்களுக்கு எல்லாம் கோழி இறைச்சியை விற்க ஆரம்பித்தார்.

இன்று நவீனமயமாக்கப்பட்ட கோழிப் பண்ணையாக ஜொலிக்கிறது அவரது நிறுவனம். கோழிகளை இறைச்சிக்காக ஒரே மாதிரி வெட்டி, சுத்தம் செய்து,  பேக்கிங் செய்வது வரை அனைத்தையும் இயந்திரங்களே பார்த்துக் கொள்கின்றன. மகள் ஃபூ ஃபென்ஃபேங் நிறுவனத்தை கவனித்துக்கொள்ள, வெளியிலிருந்து வழிகாட்டுகிறார் ஃபூ. இன்று அவரது சொத்து மதிப்பு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய்.  

த.சக்திவேல்