நகரத்து பணக்கார அப்பாவுக்குப் பிறந்த குழந்தைக்கு எல்லாமே சாத்தியமாகிறது. இந்தியாவில் பெஸ்ட் பள்ளியில் படிக்கலாம். மவுஸ் நுனியில் உலக அறிவு கொட்டிக் கிடக்கும். ரிமோட்டை தட்டினால் 200 சேனல்கள் விரியும். பீட்ஸா சாப்பிட வேண்டும் என்றாலும் பத்து சாய்ஸ்கள் இருக்கும்.
கிராமத்து ஏழையின் வாரிசுக்கு? ஆசிரியர்களே எட்டிப் பார்க்காத அரசுப்பள்ளியில் சேர்வதுகூட சாத்தியமாகாத பிஞ்சுகள் உண்டு. அவர்களில் ஒருவன் அப்துல் கலாம் போல ஆவதற்கு ஆசைப்பட்டால்?
ராஜஸ்தானின் பிகானீர் பகுதி குக்கிராமத்தில் வசிக்கிறான் சோட்டு. உறவு என்று சொல்லிக்கொள்ள அம்மாவும் தம்பியும். மழைத்துளி மண்ணைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகியிருந்த கிராமத்தில் வாழ்க்கையே சவால்தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்து எங்கே பள்ளிக்கூடம் போவது? ஒரு தாபாவில் வேலைக்குச் சேர்கிறான் சோட்டு. பள்ளிப்படிப்பு வாய்க்காவிட்டாலும் புத்தகங்கள் அவனுக்கு பிடிக்கும்; புதுசு புதுசாக கற்றுக்கொள்வான். ‘உனக்கு அறிவு ஜாஸ்தி’ என்று மகனை பள்ளிக்கு அனுப்பமுடியாத ஏக்கத்தோடு அம்மா சான்றிதழ் தருவாள்.
ஒருநாள் டி.வியில் கலாம் பேசுவதை பார்க்கிறான் சோட்டு. பல்வேறு சிரமங்களைத் தாண்டி தான் பெற்ற கல்வி எப்படி தன்னை உயர்த்தியது என்று கலாம் சொன்னதைக் கேட்ட அவன், அன்றுமுதல் ‘என் பெயர் கலாம்’ என்று சொல்லிக் கொள்கிறான். ‘‘நானும் ஸ்கூலுக்குப் போவேன். படிப்பேன். படிச்சா நானும் அவரை மாதிரி ஆகமுடியும். நான் ஜெயிப்பேன். நல்ல ஆடைகள் அணிவேன். டை கட்டி பெரிய மனிதன் ஆவேன்’’ என்றபடி கலாமை சந்திக்க ஆசைப்படுகிறான்.
அவன் வேலை பார்க்கும் தாபாவுக்கு எதிரே ஒரு அரண்மனை. அந்த அரண்மனையின் மகாராஜாவுக்கு ஒரு மகன். சோட்டுவின் வயதுதான். அவன் பெரிய பள்ளியில் படிக்கிறான். அப்பாவுக்குத் தெரியாமல் சோட்டுவுடன் நட்பு வளர்க்கிறான் அந்த இளவரசன். தெரிந்தால், ‘ராஜ பரம்பரைக்கும் கீழ்த்தட்டுக்கும் என்ன நட்பு?’ என்று உறுமுவார். இளவரசனுக்கு பள்ளியில் பேச்சுப் போட்டி. சோட்டு உரை எழுதித் தருகிறான். அதைப் பேசும் இளவரசன் முதல் பரிசு வாங்குகிறான்.

தன் நண்பனிடம் கிழியாத சட்டை ஒன்றுகூட இல்லையே என கவலைப்படும் இளவரசன், தன் உடைகளை அவனுக்குத் தருகிறான். இதனாலேயே திருட்டுப் பட்டம் கிடைக்கிறது சோட்டுவுக்கு. வேதனையோடு டெல்லி போகிறான், கலாமை சந்திக்கும் ஆசையில்! அப்போதுதான் மகாராஜாவுக்கு உண்மை தெரிகிறது. தவறை உணர்ந்து, சோட்டுவை தன் மகன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்க அழைத்துப் போகிறார்...
இது ‘ஐ யாம் கலாம்’ படத்தின் கதை. நிலா மாதவ் பாண்டா என்ற இயக்குனர் தன் வீட்டை விற்று எடுத்த பாலிவுட் படம். ஐ.ஐ.டிக்களில் இருக்கும் சொற்ப இடங்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டி போடும் இதே இந்தியாவில்தான் சோட்டு மாதிரி லட்சக்கணக்கானவர்களும் இருக்கிறார்கள். கல்வியின் பெருமையை மெஸேஜாக சொல்லும் இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 11 சர்வதேச விருதுகளையும், ஒரு தேசிய விருதையும் வாங்கிவிட்டது.
கடந்த வாரம் ரிலீஸான இந்தப் படத்தை அப்துல் கலாமுக்கு போட்டுக் காட்டினார்கள். சோட்டுவாக நடித்த சிறுவன் ஹர்ஷ் மேயரைப் பார்த்து கலாம் கேட்ட முதல் கேள்வி... ‘நீ ஸ்கூலுக்கு ஒழுங்கா போறியா?’ பையன் திணறிவிட்டான். ‘‘நடிப்பு உனக்காகக் காத்திருக்கும். படிப்பு காத்திருக்காது. கல்வி பற்றிய செய்தி சொல்லும் படத்தில் நடிக்கும் நீ, படிப்பை கோட்டை விடக்கூடாது’’ என்று கண்டிப்போடு சொன்னபிறகே படம் பார்த்தார் கலாம்.
பார்க்கும்போது தன் குழந்தைப்பருவ நினைவுகளுக்குச் சென்றுவிட்டிருந்த கலாம் சொன்ன மெஸேஜ்... ‘‘வாழ்க்கையில் உங்களுக்கு உயரிய லட்சியங்கள் இருந்தால், அந்த லட்சியங்களை அடைவதற்குத் தேவையான அறிவுத் தேடல் உங்களுக்குள் இருந்தால் போதும். எவ்வளவு கீழே இருந்தாலும், ஒருநாள் லட்சியத்தை அடைவீர்கள்!’’
அகஸ்டஸ்