இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், நம்பர் 1 அணியான இந்தியா நம்ப முடியாத வகையில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக 2 டெஸ்ட்டில் தோல்வி. தொடரை இழப்பதுடன் முதலிடத்தையும் பறிகொடுக்கும் அபாயம் இந்திய வீரர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த அணிக்கா இந்தக் கதி? படுதோல்விக்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.
இரண்டு டெஸ்ட்டிலுமே இந்திய அணி ஒரு முன்னணி பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாட நேரிட்டது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜாகீர், நாட்டிங்காமில் ஹர்பஜன் காயம் அடைந்து ஒதுங்கிக் கொண்டது பெரிய இழப்பு. கால்பந்து, ஹாக்கியில் நெருக்கடியான கட்டத்தில் முக்கியமான வீரருக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படும்போது ஏற்படும் நெருக்கடியைப் போன்றது இது. இதில் இருந்து இந்திய அணியால் மீள முடியவில்லை.
இரண்டாவது காரணம், சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் நமது வெற்றிகளுக்கு அடித்தளமாக விளங்கிய சேவக் & கம்பீர் தொடக்கக் கூட்டணி மிஸ்ஸிங். சேவக் இருந்திருந்தால் கதையே வேறு. வெண்கலக்கடையில் யானை புகுந்த மாதிரி இங்கிலாந்து பந்துவீச்சு கலகலத்துப் போயிருக்கும்.
அடுத்தது மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கேப்டன் டோனியின் மோசமான ஃபார்ம். முதல் டெஸ்ட்டில் சச்சின் காய்ச்சலோடு விளையாட நேரிட்டது விதியின் சதி என்றுதான் சொல்ல வேண்டும். ‘லார்ட்ஸில் முதல் சதம், சர்வதேச சதத்தில் சதம்!’ என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, காய்ச்சலில்தான் அவரால் சதம் (103 டிகிரியாம்) அடிக்க முடிந்தது. நாட்டிங்காம் 2&வது இன்னிங்சில் அரை சதம் அடித்தாலும் சச்சின் ஸ்டாண்டர்டுக்கு இது ரொம்பவே கம்மி.
டோனி நிலை இன்னும் மோசம். கீப்பிங்கும் சுமார், பேட்டிங்கும் சுத்தம் என்றால் எப்படி? ![Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine](http://www.kungumam.co.in/kungumam_images/20110815/kungumam_60.png)
இங்கிலாந்தே சரண்டராக முன்வந்தாலும் (லார்ட்ஸில் 62/5; நாட்டிங்காமில் 124/8) நம்மவர்கள், ‘முடியாது... முடியாது... எழுந்திருங்க’ என்று போட்டுக் கொடுத்தது, நம்ம பேட்டிங்கில் மிக வலுவான நிலையில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்களை தானம் செய்தது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கடைசியாக, பவுன்சர் பந்துவீச்சு என்றாலே பேஸ்மென்ட் வீக்காகி தொடை நடுங்குவது... வெறும் 21 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தால் ஜெயிப்பது எப்படி. பயத்தோடு விளையாடினால் ஒவ்வொரு பந்திலும் அவுட்தான். ஸ்டூவர்ட் பிராடு அச்சம் உதறி அடித்து நொறுக்கியதே இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணம்.
ஓய்வே இல்லாமல் விளையாடுவது, முக்கியமான தொடருக்கு தயாராக போதிய அவகாசம் இல்லாதது என இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் ஆயிரம் காரணங்களை!
கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக இல்லை என்பதையே நம் அணி இப்போதுதான் உணரத் தொடங்கி யிருக்கிறது. ஆனால், எல்லா வற்றையும் மறந்துவிட்டு இந்திய வீரர்கள் புது வேகத்துடன் புறப்பட வேண்டும். எதிரி கீழே சாயும் வரை கருணையே காட்டாமல் தாக்க வேண்டும். அப்படி விளையாடித்தானே முதலிடத்துக்கு முன்னேறினோம். பாருங்கள்... டோனி மேஜிக் மீண்டும் பலிக்கும்!
பா.சங்கர்