சமூகத்தின் ஏச்சு பேச்சுக்கள், கிண்டல் கேலிகளிலிருந்து தன் பெற்றோருக்கு நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்கும் சபரிவேலன், இந்த சுதந்திர தின நேரத்தில் பூமிக்குப் புதிதாய் வந்திருக்கும் விருந்தாளி. பழனியில் பிறந்த சபரிவேலனின் அப்பா ரிங்கேஷ்வரன் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி. அம்மா சரஸ்வதிக்கு இப்போது வயது 60. இந்த வயதில் தன் வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் சரஸ்வதி.
‘‘சொந்த ஊர் கவுந்தப்பாடி. நாற்பது வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. இவங்க என் அத்தை மகதான்! மூணு வருஷத்துக்குக் குழந்தையை எதிர்பார்க்காம, ‘வரும்போது வரட்டும்’னு இருந்தோம். எங்களைவிட உறவுக்காரங்க, அக்கம்பக்கத்துக்காரங்களே அதிகம் எதிர்பார்க்கத் தொடங்குனாங்க. டாக்டர்கிட்ட போனோம். ‘குழந்தை பெத்துக்க எல்லாத் தகுதியுமே இருக்கு’ன்னு சொன்னாங்க. கடவுளுக்கு நன்றி சொன்னோம். நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி, ஆண்டுகளாகிட்டே போச்சு. அவசரமும் பதற்றமும் மருத்துவர்களை மாத்த வச்சது. எங்க போனாலும் ஒரே பதில்தான்... ‘உங்களுக்கு எல்லாத் தகுதியுமே இருக்கு!’
ஊரார் வாயை உலை மூடியால மூட முடியுமா? அவங்கவங்க வீட்டுல ஆயிரம் குறை இருக்கும். அதையெல்லாம் மறந்துட்டு அடுத்த வீட்டு விவகாரம்னா நாக்குல பல்படாம பேசுவாங்களே. அந்த விஷயத்துல என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டது அவங்கதான்!’’ & ரிங்கேஷ்வரன் மனைவியைக் கைகாட்ட, தொடர்கிறார் சரஸ்வதி...
‘‘காயப்பட்டிருக்கிற மனசை ஆளாளுக்கு ‘அட்வைஸ்’ங்கிற பேர்ல அப்பப்ப கீறி விடுவாங்க. சொந்தத்துல கல்யாணம் பண்ணுனதுதான் தப்புன்னாங்க. இவங்க சித்தப்பா ஒருத்தருக்கு குழந்தை இல்லை. அவர்தான் இவரை வளர்த்திருக்கார். அதுதான் காரணம்னாங்க. வெளியிடங்களுக்குப் போனா பதில் சொல்ல முடியாத கேள்விகள். ‘என்னாலயும் குழந்தை பெத்துக்க முடியும்’னு அவங்க முன்னால கத்தணும்னு தோணும்.

ஆனா வார்த்தைகள் தொண்டைக்குழியிலயே புதைஞ்சுடும். இதனால வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தேன். ஆனா எத்தனை நாளைக்கு முடியும்? கடவுள் மேல பாரத்தைப் போட்டோம். விசேஷங்களுக்குப் போனா கடைசி வரிசையில் நின்னுட்டு, முடிஞ்சதும் முதல் ஆளா வெளியில வந்திடுவோம். அப்பக்கூட அங்க பேசுன பேச்சுகள் காதுகளுக்கு வந்து விழுந்திடும். சரி, எங்கயும் போகாம இருக்கலாம்னு நினைச்சா, உறவு விட்டுப்போகுமோங்கிற பயம். டாக்டர்கள் சொன்ன ‘எந்தப் பிரச்னையும் இல்லை’ங்கிற ஒரே வார்த்தைதான் ஓரளவு நம்பிக்கை தந்திட்டிருந்திச்சு. ஆனா அந்த நம்பிக்கையும் ஒருகட்டத்துல தகர்ந்தது...’’ & அழுகை சரஸ்வதியை பேசவிடாமல் தடுக்க, ரிங்கேஷ்வரன் தொடர்ந்தார்...
‘‘அவங்களோட மாதவிலக்கு முடியற நேரம் அது. ‘மாதவிலக்கு நின்னுடுச்சுன்னா குழந்தை பிறக்க வாய்ப்பே இருக்காதோ’ன்னு பயம். ஒவ்வொரு நாளும் பயந்து செத்திட்டிருந்தோம். உச்சகட்டமா மாதவிலக்கு நின்னுட்ட அடுத்த சில நாட்கள். மருத்துவ அறிக்கைகள் மட்டும் பத்து கிலோ இருக்கும். எல்லாத்தையும் ராத்திரியோட ராத்திரியா கிழிச்சுப் போட்டுட்டு, ‘கடவுள் விட்ட வழி’ன்னு பத்து நாளைக்கு கோயில், குளம்னு கிளம்பிட்டோம்!’’
திருமண வெள்ளி விழா, பணி ஓய்வு என ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிய ரிங்கேஷ்வரன் குடும்பத்தைக் கவ்வியிருந்த இருள் மேகங்கள் விலகத் தொடங்கியது அதற்குப் பிறகுதான்.
‘‘கடவுள் என்னோட 65வது வயசுல எங்கிட்ட வந்தார்... ஒரு நண்பர் வடிவத்துல. திருமணமாகி 18 வருஷத்துக்குப் பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்த அந்த நண்பர் மூலமாத்தான் பழனி டாக்டர் செந்தாமரைச்செல்வி பத்தித் தெரிய வந்துச்சு. வாழ்க்கையோட கடைசி வாய்ப்பா நினைச்சுட்டு அவங்களை அணுகுனோம். இன்னிக்கு ஆரோக்யமான ஒரு ஆண் வாரிசை கையில கொடுத்து பிறவிப் பலனை அடைய வச்சிட்டாங்க’’ & ரிங்கேஷ்வரனின் கண்கள் குளமாகின.
‘‘இடியோபதிக்னு ஒரு வார்த்தை இருக்கு. தெரியாத அல்லது விவரிக்க முடியாதன்னு சொல்லலாம். எல்லாமே நார்மலா இருந்தும் குழந்தை தாமதமான இவங்க விஷயத்துலயும் அதைத்தான் நான் சொல்வேன். மத்தபடி வயசு காரணமாத்தான் கருவை டெஸ்ட் டியூப்ல உருவாக்கிச் செலுத்த வேண்டிய கட்டாயம். குழந்தை டெலிவரி ஆன அந்த நாள், இந்தத் தம்பதிக்கு மட்டுமில்லை... எனக்கும் மறக்க முடியாத நாள்தான்’’ என்கிறார் இவர்களுக்குப் பிரசவம் பார்த்த டாக்டர் செந்தாமரைச் செல்வி.
அறுபதைக் கடந்த நிலையில் குழந்தையை வளர்த்தெடுப்பதும் சவால்தானே?‘‘எங்கம்மாக்கு நான் மூத்த பையன். ‘உனக்கொரு பையன் பிறந்து பாக்காம நான் போகமாட்டேன்’னாங்க. இப்ப நூறு வயசுல என் பையனைப் பார்த்துட்டாங்க. நாளைய வாழ்க்கையை நாமா நிர்ணயிக்கிறோம்? நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு போராடி இவனைக் கொண்டு வந்திருக்கோம். அதே போராட்ட குணம் இவன்கிட்டயும் இருக்காதா? ரிட்டயர்டு ஆகிட்டாலும் இவனுக்குன்னு பொருளாதார வசதியெல்லாம் பண்ணி வச்சாச்சு. மத்ததெல்லாம் கடவுள் விட்ட வழி’’ & முகம் மலர மேல் நோக்கி கை காட்டுகிறார்கள் இந்தத் தம்பதியினர்.
அய்யனார் ராஜன்
படங்கள்: மாதவன்