ரஜினிக்காக போட்ட மொட்டை!
ஒரே நேரத்தில் 1008 ரசிகர்கள் மொட்டை போட்டது போல வேண்டுதலை எந்த நடிகருக்காகவும் யாரும் செய்திருக்க மாட்டார்கள். திருப்பூர் முருகேஷ் தலைமையிலான ‘தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்க’த்தினர்தான் பழநி முருகன் கோயிலில் இப்படி மெகா வேண்டுதல் செய்திருக்கிறார்கள்.
சூப்பர்ஸ்டார் உடல்நலமின்றி மருத்துவமனையில் அட்மிட் ஆனதும் அதிர்ச்சியாகி வேண்டிக்கொண்டு முடி வளர்க்க ஆரம்பித்தவர்கள், கடந்த வாரம் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். 60 வாகனங்களில் பழநி வந்த இவர்களுக்கு மொட்டை போட 150 பேர் பிஸியாக வேலை செய்ய, 4 மணி நேரமானது மொட்டை முடிய! எல்லோரும் ஒரே மாதிரி ரசிகர் மன்ற கரை போட்ட வேட்டி கட்டி மலையேறினார்கள். மதியம் அன்னதானமும் ரஜினி பெயரில்தான்! இரவு கோயிலில் தங்கரதம் இழுத்ததும் ரஜினி பெயரில்தான்! இந்த மாஸ் மொட்டையில் பிற மதங்களைச் சேர்ந்த 20 ரசிகர்களும் 11 பொடிசுகளும்கூட அடக்கம். சூப்பர்ஸ்டாருக்காக சூப்பர் பிரேயர்!
தற்காலிக முதல்வர்!
தலைமையும் எதிர் கோஷ்டிகளும் தந்த அத்தனை இடை யூறுகளையும் தாண்டி, தனது விசுவாசியான சதானந்த கௌடாவை கர்நாடகாவின் அடுத்த முதல்வர் ஆக்கியிருக்கிறார் எடியூரப்பா. அவரது அரசியல் எதிரியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமாரின் முதல்வர் கனவு திரும்பவும் நிராசை ஆனது. ‘‘அடுத்த ஆறு மாதங்களுக்குள் நானே திரும்பவும் முதல்வர் ஆவேன்’’ என்று வேறு துணிச்சலாகச் சொல்கிறார் எடியூரப்பா. முதல்வர் ஆகியிருக்கும் சதானந்த கௌடா இப்போது எம்.பி.யாக இருக்கிறார். அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். ஒருவேளை அவரை அப்படிச் செய்ய விடாமல் எடியூரப்பா பார்த்துக்கொண்டால், ஆறு மாதங்களில் நாற்காலி திரும்பவும் அவருக்கே வந்துவிடும். ஓ.பி.எஸ். ஸ்டைலில் ஒரு ‘தற்காலிக முதல்வர்’ ரெடி!
ஓ மரியா...
பெரிய வெற்றிகள் இல்லை... கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜெயித்த தில்லை. ஆனாலும் ‘உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள்’ பட்டியலில் 24 வயது டென்னிஸ் புயல் மரியா ஷரபோவா இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் வெளியிடும் இந்தப் பட்டியலில் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கிறார் மரியா. விளையாடி சம்பாதிப்பதைவிட அதிகமாக விளம்பரங்களில் சம்பாதிக்கிறார் அவர். ஒரு ஆண்டில் அவர் சம்பாதிப்பது சுமார் 112 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இதில் பாதியைக்கூட சம்பாதிக்கவில்லை. ரஷ்ய கூடைப்பந்து வீரர் சாஷா வுஜாசிக் என்பவரை தீவிரமாகக் காதலித்து வரும் மரியாவுக்கு அநேகமாக இந்த ஆண்டு திருமணம் நடக்கக்கூடும்.
துணிச்சல் மரியாதை!
தனது தந்தை கே.எஸ்.ராவ் சமீபத்தில் இறந்தபோது, மகன்கள் இல்லாத அவருக்காக ஒரு மகனைப் போலவே மயானம் வரை சென்று ஈமச் சடங்குகளைச் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி. அவரது துணிச்சலான முடிவு காங்கிரஸ்காரர்களை மட்டுமில்லை... ஐதராபாத் நகரத்தையே வியக்க வைத்திருக்கிறது.
கறுப்பு ஸ்பைடர்மேன்!
கடந்த 1962ம் ஆண்டு அமெரிக்கக் குழந்தைகளுக்கு அறிமுகமான ஸ்பைடர் மேன், அந்த நாட்டில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் ஹீரோ. இடைப்பட்ட இரண்டு தலைமுறைகளில் அமெரிக்கா பலவிதமாக மாறிவிட்டது. கறுப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், ஆசியர்கள் என அமெரிக்காவில் எல்லா சமூகத்தினரும் கணிசமாகப் பெருகிவிட்டனர்.
‘இன்னமும் கார்ட்டூன் ஹீரோக்கள் மட்டும் ஏன் வெள்ளை நிறத்தோலோடு இருக்க வேண்டும்’ என ‘ஸ்பைடர்மேன்’ கர்த்தாக்கள் நினைத்ததன் விளைவு... தற்போதைய ஸ்பைடர்மேன் பீட்டர் பார்க்கரைக் கொன்றுவிட்டு, இந்த மாதம் முதல் புது ஸ்பைடர்மேனை அறிமுகம் செய்திருக்கிறார்கள். பாதி கறுப்பின சாயலும் பாதி லத்தீன் அமெரிக்க சாயலும் கொண்ட இந்த ஸ்பைடர்மேனுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ். சீக்கிரமே மற்ற கார்ட்டூன்களும் முகம் மாறுமோ!