தனிமை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ஊருக்குள் நுழையும்போதே இரண்டு பேருக்கும் சந்தோஷமாக இருந்தது. ‘‘நமது ஓய்வுகாலத்தைக் கழிக்க ஏற்ற இடம்...’’ என்றார் வேலு. வயது 55. அவரது கருத்தை ஒப்புக்கொண்டு மலர்ந்த கண்களுடன் அந்தக் கிராமத்து அழகில் வியந்தாள் பூரணி. வயது 50.

ஐம்பத்து ஐந்து & ஓய்வுபெறும் வயது இல்லை. ஆனால், ஒரே மகளைக் கட்டிக்கொடுத்தபிறகு நகர வாழ்வின் பரபரப்புகள், களைப்புகள், மூச்சுத்திணறல்கள், ஓய்வின்மைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வேலுவை ஒரு அதிகாலைப்பொழுதில் யோசிக்க வைத்தன. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு யாருடையதோ போல இருந்தது. தான் அதில் தொலைந்து போய், தன்னுடைய அசல் முகம் அந்நியப்பட்டுப்போனது போல இருந்தது. தான் இழந்தவற்றை மீட்டு பத்திரப்படுத்திக் கொள்வதுதான் மீதி இருக்கும் தன் வாழ்வை அர்த்தமாக்கிக் கொள்ளும் ஒரே வழி என்று தீர்மானித்தார்!

பூரணியும் ஃப்ளாட்களில் வசித்தும், வேலை பார்த்தும் தன் முட்டிகளும் மனசும் தேய்ந்து போனதை ஒப்புக்கொண்டாள். இரண்டு பேரும் வேலைகளை விட்டார்கள். தேவைக்கு அதிகமான பணத்துடன் ஆலோசனை செய்தார்கள். ‘‘என்ஜாய் யுவர் ஸெகண்ட் ஹனிமூன்...’’ என்றாள் மகள்.

இப்படித்தான் இரண்டு பேரும் தோப்பூருக்கு வந்தார்கள்.

பிரதான சாலையிலிருந்து உள்ளே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஊர். இரண்டு புறமும் மரங்களைக் கொண்ட சாலை. மரங்களுக்குப் பின்னால் இன்னமும் பிளாட்களாகாத வயல்வெளிகள்.

‘‘நான் என்னோட காலேஜ் டேஸ்ல கவிதை எழுதியிருக்கிறேன்...’’ என்றார் வேலு.

திடீரென சிறிய சாரல் அடித்தது. மழையில் நனையும் மரங்கள் பார்க்க அழகாக இருந்தன. ‘மகள் அருகில் இல்லையே’ என்று வருத்தப்பட்டாள் பூரணி. அவளுக்கு இந்தப் பறவைச் சத்தம், கிணறு, ஆடுகள், கன்றுக்குட்டிகள் எல்லாமே பிடிக்கும். உடனே செல்போனில் பகிர்ந்து கொண்டாள். ‘‘ஐயோ, அம்மா... நான் இப்ப உங்ககூட இல்லாமப் போய்ட்டேனே... எனக்கு இப்பவே உங்ககூட சேர்ந்து சுத்தணும் போல இருக்கு...’’ என்றாள் கனடாவில் இருக்கும் கண்மணி.

நோயற்ற காற்றின் தழுவலை ரசித்தவாறு சேலையைத் தோளில் சுற்றிக்கொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டாள் பூரணி. வேலு தனது சால்வையை எடுத்து மனைவியிடம் கொடுத்தார். மனநிறைவில் இருவரும் சிரித்தார்கள். இவ்வளவு நாள் இந்தத் தனிமையை அனுபவிக்கக் கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே என்றும், இன்னும் கொஞ்சம் முன்னதாகவே இங்கே வந்திருக்கலாம் என்றும் இருவரும் அபிப்ராயப்பட்டார்கள்.

‘‘இதுக்கே இப்படி நின்னா எப்படி? தெப்பக்குளத்தப் பாக்கலியே...’’ என்றான் வேதாந்த். கிராமத்துத் தலையாரி. இவர்களுக்கு வீடு பார்த்துக் கொடுத்தவன்.

‘‘நாள் ஒன்றுக்கு குறைந்தது நூறு பேராவது என்னை இடித்துச் சென்றிருப்பார்கள். அந்த நெரிசல் வாழ்வு இங்கே இல்லை என்பதை  நினைத்தால், பூரணி... ஐ’ம் ரியலி ஹேப்பி! நமது
ஃபிளாட்ஸில் ஐந்து ப்ளாக்குகளிலும் உள்ள மொத்த ஜனங்கள்கூட இந்த ஊரில் இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது!’’ என்றார் வேலு...

‘‘ஒரு குளியல் போடட்டுமா?’’

‘‘இங்கதான இருக்கப் போறோம்... தினமும் வரலாமே...’’ என்பதற்குள் வேலு குதித்து விட்டார்.

‘‘சளி புடிக்கப் போவுதுங்க... இந்த ஊர்ல டாக்டர்கூட கிடையாது...’’ என்று கவலைப்பட்டான் வேதாந்த்.

இவர்களது வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்தபோது கோழி ஒன்று தன் குடும்ப உறுப்பினர்களோடு கடந்தது. மரக்கிளையில் யாரோ கட்டியிருந்த ஊஞ்சல் காற்றில் ஆடியது.
அகலமான தெரு. வாசல்களில் கோலங்கள். இவர்கள் மூன்று பேரைத் தவிர தெருவில் யாருமில்லை.

‘‘ஏறக்குறைய காலி செய்யப்பட்ட ஊர்!’’

‘‘பாதி சனங்க பொழைப்பு தேடி டவுனுக்குப் போயிட்டு சாயங்காலம்தான் திரும்புவாங்க... இந்த ஊர்ல பொழைக்கிறதுக்கு என்ன இருக்கு? ஏதோ, வேற வழியில்லாம என்னை மாதிரி ஆட்கள் இருக்கோம். ப்ச், நீங்க இந்த வனாந்திரத்துக்கு வந்திருக்கவே கூடாது... சொன்னா கேட்டாத்தானே..!’’

‘‘இந்த ஊரோட பலமே இந்தத் தனிமைதான்பா... இதுதான் என்னைச் சுண்டி இழுக்குது. பாரேன், இப்படி வெறிச்சோடிக் கிடக்கற தெருவை நான் பார்த்ததே இல்லை!’’

‘‘பொழுது போறது ரொம்ப கஷ்டம். எட்டு மணிக்கு எல்லாம் கிராமமே தூங்கிடும்...’’

‘‘தனிமை... முகத்தில் அடிக்கிற தனிமை... ஐ லைக் இட்!’’

‘‘சீக்கிரமே போரடிக்கும்!’’

இவர்கள் வாங்கியிருந்த வீடு பழைய காலத்து மாடி வீடு. வீட்டைச் சுற்றி நிறைய இடம். பூரணி மகிழ்ச்சியுடன், ‘‘இட்ஸ் மை ஐடியல் ஹோம்...’’ என்றாள். வேதாந்த் தன்னால் முடிந்த அளவு செடிகளையும் விதைகளையும் சேகரித்துத் தருவதாகத் தெரிவித்தான்.

வீட்டின் வாசலில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து கொண்டு வேலு, சிறுமியாக மாறிய பூரணியை வேடிக்கை பார்த்தார். பின் மெல்ல வீட்டினுள் சென்றார்.

‘‘அந்தக் காலத்துல பாத்துப் பாத்து கட்டின வீடு. இந்த ஊர்லயே இந்த வீட்டுக்குத்தான் முதன்முதல்ல கரன்ட் வந்தது...’’ நல்ல உயரத்தில் கூரை. பெரிய அறைகள். உறுதியான கம்பிகளுடன் ஜன்னல். தொலைதூரத்தில் பஸ் செல்வது தெரிந்தது.

‘‘ஏதோ ஆசைக்கு வருஷத்துல ரெண்டு நாள் இருக்கலாம். அதுக்கு மேல...’’ வேதாந்த் இழுத்தான்.

‘‘இதப் பாரு, சிட்டி லைஃப்ல தினமும் எலக்ட்ரிக் ட்ரெய்ன் புடிச்சு, மனுஷங்களோட நீந்தி, தூங்கறதுக்காகவே நைட்டு வீட்டுக்கு வந்த ஆள் நான்... இந்த தனிமைக்கு ஏங்கியிருக்கேன்...’’
அன்றிரவு மகளுக்கு ஈ&மெயில் அனுப்பினார்.

‘நகரத்தின் நெருக்கடியான வாழ்வில் தொலைந்து போன என்னைக் கண்டுபிடித்துவிட்டேன். இத்தனை வருடங்களில் தேவைக்கு அதிகமாகவே மனிதர்களைச் சந்தித்து விட்டேன். இந்த கிராமத்தில் நான் விரும்பிய தனிமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. இந்தப் பெரிய வீடு எனக்கும் உன் அம்மாவுக்கும் மிகவும் அதிகம். ஒரு கல்யாணத்தையே இங்கு நடத்தி விடலாம். சில நேரம் காலி அறைகளிலிருந்து எங்கள் குரலே எதிரொலிக்கிறது. நீயும் மாப்பிள்ளையும் இங்கே வரும்போது இந்தத் தனிமையைக் கைப்பற்றிக் கொண்டு செல்லுங்கள். ஓய்வுக்கும் தனிமைக்கும் என்றே கடவுளால் உருவாக்கப்பட்ட ஊர் இது...’

எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. பூரணி நட்ட வாழை, குலை தள்ளி நிற்கிறது. தெரு நாய்களுக்கு அவள் எப்போது உணவிடுவாள் என்பது தெரியும். கோயில் குருக்கள், ‘‘இங்கே கும்பாபிஷேகம் கூட இல்லாம இருக்கிற சிவனுக்குத் துணையா இப்ப நீங்களும் வந்துட்டேள்...’’ என்கிறார். வேலுவின் நண்பர்கள், ‘‘ஊர் அழகாத்தான் இருக்கு... ஆனா இந்த வெறுமையான ஊர், கோயில், தெரு... எல்லாம் பார்த்தா பைத்தியம் பிடிக்கிறது மாதிரி இருக்கு...’’ என்று ஓடிவிட்டார்கள்.

‘‘எனக்கு அப்படியில்ல. ஷாப்பிங் பண்ண பக்கத்து ஊருக்குப் போனாக்கூட, எப்படா இங்க திரும்புவோம்னு இருக்கு. இந்தத் தனிமை பத்தி நான் எழுதின கவிதைகளை...’’ எல்லாம் சீராகத்தான் சென்று கொண்டிருந்தது... அன்று காலை வரை!

பத்து மணிக்கு வேலு தன் மார்பில் இதுவரை அனுபவித்தறியா வலியை உணர்ந்தார். உடலெங்கும் வியர்வை. கால்கள் பலமிழக்க, கண்கள் செருக, கோணிய வாயுடன் ‘‘பூ...’’ என்று குழறினார். நினைவிழந்தார்.

நினைவு திரும்பியபோது வலி இல்லை. கை, கால்களை உதறினார். என்ன நடந்தது? நெஞ்சில் வலியுடன் தாங்க முடியாமல் ‘பூரணி’ எனக் கூப்பிட்டேன். அவள் ஓடி வந்தாள். மயங்கி விழுந்தேன். நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கிறது.

இப்போது நன்றாக இருக்கிறேன். வலி எதுவுமில்லை. ஆனால், பூரணி ஏன் அழுது கொண்டிருக்கிறாள்? அதுவும், ஏதோ உடலில் விழுந்து அழுகிறாள். அந்த உடல்... ஐயோ, அது என் உடல்!
அப்படியானால், நான்..? பதறினார் வேலு.

தான் இறந்துவிட்டதை வேலு உணர்ந்தார். பூரணி தன் உடல் முன் அழுவதையும், வேதாந்த் உட்பட தெருக்காரர்கள் சுற்றிலும் நிற்பதையும் பார்த்தார். அவர்களிடம் தொடர்புகொள்ள முயன்றார். இதோ, பூரணியின் மிக அருகில் நிற்கிறேன். எப்படியாவது தொடர்புகொண்டு... மீண்டும் முயன்றார்.

‘‘வீண் முயற்சி வேண்டாம். உன்னால் தொடர்பு கொள்ள முடியாது’’ என்றொரு குரல் கேட்டது.

‘‘ஏன்?’’ என்று திரும்பியபோதுதான், அவர்களைப் பார்த்தார். அலறி விட்டார்.

நிறைய உருவங்கள். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், ஏன்... லட்சக்கணக்கில் உருவங்கள். அந்த வீடு முழுவதும் ஒவ்வொரு அறையிலும், ஜன்னல்களிலும், கூரைகளிலும், ஒவ்வொரு அங்குலத்திலும் உருவங்கள். தினுசுதினுசான வயதுகளில் - சிசு முதல் பெருங்கிழவர் வரை -சிறுமி முதல் மூதாட்டிகள் வரை உருவங்கள்.

‘‘எல்லோரும் செத்துப் போயி திரியறவங்கதான்...’’

என்றார் வேலுவை அழைத்த வயோதிகர். வேலு பீதியில் சிக்கிக் கொண்டு, அலறியவாறு அங்கிருந்து ஓட முயன்றார். எங்கும் எதிலும் உருவங்கள். வயல்வெளியில், மரங்களில், தெருக்களில், வீட்டு வாசல்களில், தெப்பக்குளக்கரையில்... எங்கும் உருவங்கள்...

‘‘எல்லோரும் செத்துப் போனவங்கதான்...’’ என்றார் வயோதிகர்.

‘‘பிறகு ஏன் எல்லோரும் இங்கேயே இருக்கீங்க?’’

‘‘வேற எங்க போறது? இந்த பூமிலதான் பிறந்தோம். இந்த பூமிய விட்டு எங்க போறது?’’

‘‘அப்படின்னா..?’’

‘‘அப்படித்தான். இங்கதான் இருந்தாகணும். எங்க இறக்கறமோ.... அங்கதான் இருந்தாகணும்!’’

‘‘அப்ப... நாம எல்லாம் முக்தி பெறாத ஆத்மாக்களா?’’

‘‘அதெல்லாம் மனுஷங்க கட்டிவிட்ட கதை! நிஜத்துல உயிர்கள்னா ரெண்டு ரகம்தான்... உடல்களுள்ள உயிர்கள், உடல்கள் அற்ற உயிர்கள்... இந்த ரெண்டுதான்! நாம இப்ப உடல்கள் அற்ற உயிர்களா மாறிட்டோம். நம்ம கண்ணுக்கு அவங்க தெரிவாங்க. அவங்க கண்ணுக்கு நாம தெரியமாட்டோம்...’’

‘‘சீக்கிரமா ஒரு இடத்தைப் பிடி. அந்த அலங்கார விளக்குல தொங்கறியா... இனிமே அதுதான் உன் இடம். எல்லாரும் கேளுங்கப்பா... இது இனிமே வேலுவோட இடம். நல்லவேளை, இந்தக் கிராமத்துக்கு வந்த. நகரங்கள்ல பயங்கர நெருக்கடி... அங்க ஃப்ளாட்டுகள்ல தொங்கறதுக்குக்கூட இடம் கிடைக்கறது கஷ்டம்... ஒரே நெரிசல்!’’ என்றார் ஒரு மூதாட்டி.

வேலு மிதந்தவாறே, அழுது கொண்டிருக்கும் பூரணியைப் பார்த்தார். அவளது புலம்பல் நன்றாகக் கேட்டது. ‘‘கடவுளே, இந்தத் தனிமையை நான் எப்படித் தாங்குவேன்? என்கூட யாருமே இல்லையே...’’

மிதந்து கொண்டிருந்த உருவங்கள் சிரித்தன. ‘‘தனிமையா..? இந்த பூமில தனிமையான இடம்னு ஒண்ணு கிடையவே கிடையாது!’’

பூரணி காரில் முன் செல்ல, லாரியில் பொருட்கள் பின்னால் சென்றன. வேலு பின்னாலேயே ஓடி வந்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு அவரால் போக முடியவில்லை. சோகத்துடன் மெல்ல வழியில் தென்பட்ட உருவங்கள்மீது மோதி வீட்டுக்குள் வந்தார். வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. புதிதாக ஒரு தம்பதி இறங்கினார்கள். ‘‘வாவ்! என்ன ஒரு தனிமை... இங்க நானும் நீயும் மட்டும்தான்...’’ 

ஷங்கர்பாபு