த ஹிடன் லைஃப்



இரண்டாம் உலகப்போரைக் குறித்த படங்களில் முக்கியமான ஒரு ஆங்கிலப் படம், ‘த ஹிடன் லைஃப்’. ‘ஹாட்ஸ்டாரி’ல் பார்க்கலாம். ஆஸ்திரியாவில் உள்ள அழகான மலைக்கிராமம். அங்கே விவசாயம் செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் பிரான்ஸ் ஜாகர்ஸ்டேட்டர்.
முப்பது வயதைத் தாண்டிய பிரான்ஸுக்கு கடவுளின் மீது நம்பிக்கை அதிகம். அகிம்சை வழியில் வாழ்பவர். இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கிறது. நல்ல திடமான இளைஞர்களைப் போரில் பங்கேற்கச் சொல்லி ஹிட்லர் அழைப்பு விடுக்கிறார். போரில் பங்கேற்பது தங்களின் முக்கிய கடமை என்று இளைஞர்கள் நம்பி குதூகலமாக போர்க்களத்துக்குச் செல்கின்றனர்.

இன்னொரு மனிதனைக் கொல்லும் இடம்தான் போர்க்களம் என்று நம்பும் பிரான்ஸ், நாஜிப் படைகளின் உத்தரவை மறுக்கிறார். அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் துரோகி யைப் போல பார்க்கின்றனர். மனைவியும் குழந்தைகளும் பிரான்ஸின் பக்கம் ஆறுதலாக இருக்கின்றனர்.

ஆனால், ஹிட்லரின் நாஜிப் படை அவரை விடுமா... பிரான்ஸுக்கு என்னவாகிறது என்பதே மனதை உலுக்கும் திரைக்கதை.பிரான்ஸ் ஜாகர்ஸ்டேட்டர் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் டெரன்ஸ் மாலிக்.