கல்வெட்டு அரசியல்!



இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக்.
அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றிற்குப் பேருதவி புரியும் கல்வெட்டுத்துறையில் குறைந்தது 40 தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமனம் செய்யுங்கள்...” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார்.

தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்து
கிறேன்...” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை.‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம்.

இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்...” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை...” என்கிறார்.‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்...” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான  வரலாற்றைப் பகிர்ந்தார்.

“இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச்.

1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 - 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 - 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள்  கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குவாரி, சுரங்க வேலைகள் செய்யும்போது கல்வெட்டுகளைப் பாதுகாப்பதும் அவசியமானது.

ஆரம்பத்தில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் அலுவலகம் சென்னையில் இயங்கியது. சென்னையில் வைத்திருந்தால் காலப்போக்கில் காகிதம் இற்றுப்போய்விடும் என்று, காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் ஊட்டிக்கு மாற்றப்பட்டது. 1968ல் மைசூர்காரர் ஒருவர் கல்வெட்டுத்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பாதுகாப்பு அலுவலகத்தை அவர் இடத்துக்குக் கொண்டுபோய்விட்டார். அங்கேயும் காலநிலை மோசம் இல்லை. ஆனால், கன்னடம், தமிழ் பிரச்னைகள் இருந்தது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.

“இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. கல்வெட்டுத்துறையில் ரொம்ப நாட்களாக வட இந்தியர்கள்தான் பெரிய பொறுப்பில் இருந்தனர். ஒரு கட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் ராவ் என்பவர் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அதனால் பெரிய தகராறு எல்லாம் நடந்தது. தென் இந்தியாவில் இருந்து ஒருத்தர் வந்துட்டார் என வட நாட்டவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அது இன்றும் நீடிக்கிறது என்பதற்கு சான்றுதான் இப்போது கல்வெட்டுத்துறையில் அறிவித்திருக்கும் பணி இடங்கள்.

இவர் பதவிக் காலம் முடிந்த உடனே கல்வெட்டுக்கு என்று இருந்த மதிப்பு குறைந்து போனது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார்.

‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார்.

அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது.இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டு களைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம்.தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வெட்டுகளை நன்றாகவே படிப்பார். அத்துடன் அறிவியல்பூர்வமாகக் கொண்டு வர ஆசைப்படும் உதயசந்திரனின் செயல்பாடுகள் இன்னும் ஊக்கமாக இருக்கிறது. அவர் போட்ட அடிப்படை இன்று நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார்.

“இந்தியாவின் உண்மை வரலாற்றை எழுதக்கூடிய அலுவலகம் இது. இப்போது கேட்பது தமிழ் கல்வெட்டு களுக்கு மட்டும் பணி நியமனம் அல்ல, சமஸ்கிருத கல்வெட்டுக்கும்தான். அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்திய வரலாறு முழுமையடையும்.

மண்ணுக்கு அடியில் இருப்பது நமக்கு எப்படித் தெரியும்..? எல்லாமே கல்வெட்டுகள் மூலமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்று இத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வெட்டைப் பெரிதாக படிக்கத் தெரியாது. இதற்காக அரசைக் குறை சொல்லவில்லை. துறையில் இருப்பவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களை நியமித்துவிடுகிறார்கள். இது மாற வேண்டும். அதே வேளையில் கல்வெட்டுகளின் முக்கியத்துவம் குறித்து கலாசார விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.

அன்னம் அரசு