இது கற்பனையல்ல... நிஜம்... நீங்கள் நிற்கும் இடம் எந்த மன்னரின் கால்கள் நின்ற இடம்..?
நம்முடைய ஊர்ப்பெயர்கள் யாவும் காலப்போக்கில் பலவாறாகத் திரிந்தும் மருவியும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மாறிக்கொண்டே வந்துள்ளன. சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அவற்றின் பெயர்வழித் தடங்களை ஆராய்ந்தால் பலப்பல செய்திகள் காணக் கிடைக்கலாம். வரலாற்றில் ஒவ்வோர் ஊரும் ஒவ்வொரு நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கிறது. ஒரு காலத்தில் சிறப்பாக விளங்கிய ஊர்கள் பிறகு நலிவுற்றன. புதுப்புது ஊர்களும் தலையெடுத்தன.
எந்த அமெரிக்க நகரத்திற்கும் ஐந்நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு இருக்க முடியாது. ஆனால், நம்முடைய ஊர்களின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டது. நம் ஊர்கள் பலவும் முற்காலத்தில் ஏதேனுமொரு பேரரசுக்கோ சிற்றரசுக்கோ தலைநகராகவும் மண்டலப் பெருநகராகவும் விளங்கிய பேறுடையது.
நாம் வாழும் ஊர் சங்க காலத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது, இடைக்காலத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது, இப்போது எவ்வாறு வழங்கப்படுகிறது என ஆராய்வதும் அறிந்திருப்பதும் கட்டாயம். நீங்கள் இப்போது நிற்குமிடம் ஓர் அரசனின் கால்கள் ஓய்ந்து நின்ற பழஞ்சுவட்டினைக் கொண்டிருக்கலாம். வரலாற்றினை வரலாறாக ஏற்றுக்கொள்வதுதான் அறிவுடைமை. காலத்தின் கொடும்போக்கிற்கு முகங்கொடுத்து இழந்தும் பெற்றும் இன்றைய வாழ்க்கையை அடைந்திருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. கடந்த ஆண்டு தஞ்சாவூரிலுள்ள சரசுவதி மகால், அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது இரண்டு படங்களை எடுத்திருந்தேன். அவை சோழர் காலத்தை நடுவாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமான இடைக்காலத்தில் தமிழகத்தில் விளங்கிய ஊர்ப்பெயர்களைப் பட்டியலிட்டன. சரசுவதி மகாலின் வரலாற்று நூல்களிலும், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட பழம் பொருள்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் அவை எழுதப்பட்டிருக்கும்.சோழர்காலத்து ஊர்ப்பெயர்கள் பலவும் சோழ மன்னர்களின் பெயரால் புகழ்ந்து வழங்கப்பட்டிருக்கின்றன. கோயில் திருவூர்களாக விளங்கியமையால் ஒவ்வோர் ஊரிலும் கோயில் திருப்பணிகட்கு முன்னிடம் தந்திருக்கிறார்கள். அதனையொட்டிய பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் நல்லூர், மங்கலம், புரம், பட்டினம், ஊர் ஆகியவற்றை ஈற்றில்கொண்டு அப்பெயர்கள் முடிகின்றன. நல்லூர் என்பது கோயிலைச் சுற்றியெழுந்த ஊர். சதுர்வேதி மங்கலங்கள் இறைத்திருவிடங்கள். புரம் என்பது அப்பகுதியின் தலைநகராகக் கொள்ளத்தக்க இடம். பட்டினம் கடலோரத்தில் அமைவது. ஊர் என்பது குடிவாழ்வு சிறந்த மக்கள் வாழிடம். இப்படங்களில் வியக்கத்தக்க செய்திகள் இருக்கின்றன. கன்னியாகுமரிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. சடங்கன்பாடி தரங்கம்பாடி ஆகியிருக்கிறது. ஆக்கூர் ஆத்தூர் ஆகிவிட்டது. பல ஆத்தூர்களில் இது எந்த ஆத்தூர் என்று தெரியவில்லை.
பொள்ளாச்சியின் பெயரைப் பாருங்கள். எறிச்சில் பொழில்வாய்ச்சியான முடித்தலைகொண்ட சோழநல்லூர். கரூருக்கு என்ன? கருவூரான முடிவழங்குசோழபுரம். உறுமூர் என்பதுதான் எறும்பூர் ஆகி எழும்பூர் ஆயிற்றோ! சண்பை என்கிற ஊரை இப்போது ‘ஐம்பை’ ஆக்கிவிட்டார்கள். சண்பக மரங்கள் இருந்திருக்கலாம். அந்தப் பட்டியலை எடுத்தெழுதியிருக்கிறேன். காண்க.
1. தலைநகரான மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் - தலைஞாயிறு 2. திரைலோக்கியான விருதராஜ பயங்கர சதுர்வேதிமங்கலம் - திரைலோக்கி 3. தோவாளையான எதிர்வல்லி சோழபுரம்- தோவாளை 4. குமரியான கங்கைகொண்ட சோழபுரம் - கன்னியாகுமரி 5. உத்திரமேரூரான இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம் - உத்திரமேரூர்
6. பாம்புரமான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் - திருப்பாம்புரம் 7. பாவாடைக்குடியான நித்த வினோதநல்லூர் - பாவாட்டக்குடி 8. ஓட்டைக்குடியான எதிரிலி சோழபுரம் - ஒட்டக்குடி 9. கோவன்புத்தூரான வீரகேரளநல்லூர் - கோயம்புத்தூர் 10. பூச்சிப்பாக்கமான பராந்தக நல்லூர் - பூசிவாக்கம்
11. திரையனேரியான உத்தமசோழ சதுர்வேதிமங்கலம் - திரையனேரி 12. மாமல்லபுரமான ஜனநாத புரம் - மாமல்லபுரம் 13. கருந்திட்டைக்குடியான சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் - கருந்தட்டாங்குடி 14. சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினம் - தரங்கம்பாடி 15. மாறப்படுகையான அழகிய சோழ சதுர்வேதிமங்கலம் - மாம்படுகை
16. ஆணைமேலகரமான நவரீஸ்வர சதுர்வேதிமங்கலம் - ஆணைமேலகரம் 17.கோமலான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் - கோமல் 18. மேற்கிள்ளிமங்கலமான கரிகாலச் சோழ சதுர்வேதிமங்கலம் - மேக்கிரிமங்கலம்19.பறியலூரான இராஜநாராயண சதுர்வேதிமங்கலம் - பரசலூர் 20. விளைநகரான நித்தவிநோத சதுர்வேதிமங்கலம் - விளைநகர்
21. ஆக்கூரான இராசேந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம் - ஆத்தூர் 22. நாங்கூரான பாததுளி சதுர்வேதிமங்கலம் - நாங்கூர் 23. மணற்குடியான உத்தமச்சோழ சதுர்வேதிமங்கலம் - மணக்குடி 24. நீடூரான இராஜசிகாமணி சதுர்வேதிமங்கலம் - நீடூர் 25. வில்லியநல்லூரான புவலோக மாணிக்க சதுர்வேதிமங்கலம் - வில்லியனூர்
26. முருகவேள்மங்கலமான கங்கைகொண்ட சோழபுரம் - முருகமங்கலம் 27. குறுக்கையான விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம் - கொறுக்கை 28. கஞ்சனூரான சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் - கஞ்சனூர் 29. வேம்பற்றூர் ஆன எதிரிலி சோழ சதுர்வேதிமங்கலம் - வேம்பற்றூர் 30. எறிச்சில் பொழில்வாயிட்சியான முடித்தலைகொண்ட சோழநல்லூர் - பொள்ளாச்சி
31. திருநெல்வேலியான குலசேகர சதுர்வேதிமங்கலம் - திருநெல்வேலி 32. உக்கலான விக்கரமச் சோழ சதுர்வேதிமங்கலம் - உக்கல் 33. திருநாவலூரான இராசாதித்தியபுரம் - திருநாமநல்லூர் 34. கருவூரான முடிவழங்கு சோழபுரம் - கரூர் 35. மாத்தூரான வீரபாண்டியபுரம் - மாத்தூர்
36. மணமேல்குடியான குலோத்துங்க சோழப்பட்டினம் - மணமேல்குடி 37. வாகூரான அழகிய சோழ சதுர்வேதிமங்கலம் - பாகூர் 38. நெற்குன்றமான வைரமேக சதுர்வேதிமங்கலம் - நெற்குன்னம் 39. விழுப்புரமான ஜனநாத சதுர்வேதிமங்கலம் - விழுப்புரம் 40. உறுமூரான விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம் - எறும்பூர்
41. பெரும்பாக்கமான வீரராஜேந்திர சதுர்வேதிமங்கலம் - பெரும்பாக்கம் 42. திருவக்கரையான திரி புவன மாதேவி சதுர்வேதிமங்கலம் - திருவக்கரை 43. மழவராயநல்லூரான பராக்கிரம பாண்டியபுரம் - மழவராயநல்லூர் 44. கூகூரான குலோத்துங்கச் சோழநல்லூர் - கூகூர் 45. களப்பாலான முடிவழங்கு சதுர்வேதிமங்கலம் - களப்பால்
46. ஆலம்பாக்கமான மதுராந்தக சதுர்வேதிமங்கலம் - ஆலம்பாக்கம் 47. கருகாவூரான இராஜநாராயண சதுர்வேதிமங்கலம் - திருக்கருகாவூர் 48. மணலூரான கல்யாணமாதேவி சதுர்வேதிமங்கலம் - மணலூர்ப்பேட்டை 49. திருமுட்டமான முடிகொண்ட சோழநல்லூர் - முஷ்ணம் 50. பூவனூரான அவனிசேகர சதுர்வேதிமங்கலம் - பூவனூர்
51. கீழ்பூண்டியான லோகமாதேவி சதுர்வேதிமங்கலம் - நாவல்பூண்டி 52. வைகலான வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் - வைகல் 53. சண்பையான வீரராசேந்திர சோழபுரம் - ஜம்பை 54. திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழபுரம் - திருக்கழுக்குன்றம் 55. மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் - மதுராந்தகம்
56. ஜனநாத நல்லூரான வைப்பாக்கம் விட்டலாபுரம் - விட்டலாபுரம் 57. இராஜராஜநல்லூரான ஆற்றூர் - ஆத்தூர் (காஞ்சி) 58. பையனூரான இராசகேசரி சதுர்வேதிமங்கலம் - பையனூர் 59. சிறுதாவூரான நரசிங்க சதுர்வேதிமங்கலம் -சிறுதாவூர் 60. நித்தவிநோத நல்லூரான திருக்கச்சூர் - திருக்கச்சூர்
61. இராசேந்திர சோழ நல்லூரான பாலையூர் - பாலூர் 62. ராசகேசரி நல்லூரான தையூர் - தையூர் 63. பூந்தமல்லியான உய்யகொண்ட சோழபுரம் - பூந்தமல்லி 64. கரிகால்வேந்தபுரம் - கருவேந்திபுரம் 65. செம்பியன்மாதேவி - செம்பியமாதேவி
66. செயங்கொண்ட சோழபுரம் - ஜெயங்கொண்டம் 67. திரிபுவனமாதேவிபுரம் - திருபுவனம் 68. வானவன்மாதேவிபுரம் - வானமாதேவி 69. உலகமாதேவிபுரம் - உலகாபுரம் 70. கரிகாலப்பெருவளநல்லூர் - பெரவளநல்லூர்
71. வளவர்கோன்மாதேவி - வளையமாதேவி 72. அதிராசேந்திரபட்டினம் - அதிராம்பட்டினம் 73. இராசராசபுரம் - தாராசுரம்
கவிஞர் மகுடேசுவரன்
|