அதிகம் படித்த கேரளாவும், தொடரும் வரதட்சணை மரணங்களும்!



வரதட்சணை கொடுமையின் காரணமாக கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார்.
100 பவுன் நகை, ஒரு ஏக்கர் தோட்டம் மற்றும் ஒரு கார் என இத்தனை பொருட்களைக் கொடுத்தும், விஸ்மயா தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் சித்ர வதைக்கு ஆளானார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் விஸ்மயா தற்கொலை செய்துகொண்டார்.இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண்குமாரின் குடும்பம்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அக்கணவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார்.

இந்த சூடு தணிவதற்குள் மேலும் இரு பெண்கள் இறந்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயது அர்ச்சனா தன் கணவர் சுரேஷுடன் வசித்து வந்த வீட்டில் இறந்து கிடந்ததும்; 19 வயதான சுசித்ரா தன் புகுந்த வீட்டில் மரணமடைந்ததும் மானுடவியல் நோக்கில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இதில் சுசித்ராவின் மரணம் ஜோதிடம் தழுவியதாகவும் இருக்கிறது. 
ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிகுன்னம் பகுதியைச் சேர்ந்த சுசித்ராவுக்கும் இராணுவத்தில் பணிபுரிந்து வரும் விஷ்ணுவுக்கும் கடந்த மார்ச் 21ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது சுசித்ராவின் குடும்பம் 51 சவரன் நகை மற்றும் ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளனர். எனினும் விஷ்ணுவின் குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கேட்டு சுசித்ராவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.  

“கடந்த 21ம் தேதி விஸ்மயாவின் தற்கொலை தொடர்பான செய்தியைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். உடனடியாக என் மகள் சுசித்ராவை தொடர்பு கொண்டு ‘நீ இதுபோன்ற முடிவை எடுக்கக்கூடாது. நானும் அப்பாவும் உனக்கு எப்போதும் துணையாக இருப்போம்’ என்று கூறினேன். அதற்கு சுசித்ரா, ‘ஒருபோதும் நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்’ என்றாள்.
இந்நிலையில் அவள் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். என்னுடைய மகள் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாள்...” என்கிறார் சுசித்ராவின் தாயார்.
இதையேதான் சுசித்ராவின் தந்தையும் சொல்கிறார். ‘‘முதலில் நாங்கள் விஷ்ணுவுக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தருவதாகக் கூறினோம். ஆனால், அவர்கள் கார் வேண்டும் என்று கேட்டனர். எனவே கார் வாங்கித் தர சம்மதம் தெரிவித்தோம். திருமணத்துக்கு 10 நாட்கள் முன்பாக திடீரென 10 லட்சம் ரூபாயை ரொக்கமாகக் கேட்டனர். அதற்கு நான் ‘என் ஓய்வூதிய பணம் வந்தவுடன் தருகிறேன்’ என உறுதியளித்தேன்.

அப்படியிருந்தும் திருமணம் முடிந்த பிறகு விஷ்ணுவின் அக்காவுக்கு பணம் உடனடியாக தேவைப்பட்டதால் 10 லட்சம் ரூபாயைக் கேட்டு என் மகளைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் என் மகளுக்கு நாங்கள் கொடுத்த தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளனர். இது குறித்து சுசித்ரா கேட்டதற்கு அவளை அடித்துள்ளனர். இதெல்லாம் இப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. என் மகள் எங்களிடம் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டாள்...’’ என்கிறார் சுசித்ராவின் தந்தை. இந்த சம்பவம் தொடர்பாக சுசித்ராவின் மாமா தெரிவித்துள்ள கருத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“சுசித்ராவுக்கு 20 வயதுக்குள் திருமணம் நடத்தவில்லை என்றால் அடுத்த 7 ஆண்டுகளுக்கு திருமணம் நடக்காது என்று ஜோசியர் கூறினார். அதனால்தான் சுசித்ராவுக்கு விஷ்ணுவுடன் உடனடியாக திருமணம் செய்து வைத்தோம். ஏற்கெனவே விஷ்ணுவுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றுள்ளது. அந்த சமயத்தில் விஷ்ணுவின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கேட்டுள்ளனர். இதைக் கொடுக்க பெண் வீட்டார் மறுக்கவே அத்திருமணம் நின்றுவிட்டது.

சுசித்ராவின் மறைவுக்குப் பிறகுதான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது...’’ என்கிறார் சுசித்ராவின் மாமா. படிப்பறிவுள்ள மாநிலம்... முற்போக்குச் சிந்தனையுள்ள கடவுளின் தேசம்... என்றெல்லாம் புகழப்படும் கேரளாவில் ஜோதிடம் காரணமாக 20 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும், வரதட்சணைக் கொடுமைகள் அரங்கேறி வருவதும் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

கல்வியோ வேலையோ, இதைப் போன்ற விவகாரங்களில் social perception நாம் நினைத்த அளவுக்கு மாறிவிடுவதில்லை. கேரளாவில் கல்வி எப்படி அதிகமோ அதேபோல வரதட்சிணையும் அதிகம். கேரளாவுக்கு அடுத்து கல்வியில் முன்னேறிய கன்னியாகுமரி மாவட்டம் வரதட்சிணை தருவதில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கிறது.இன்று எல்லா விஷயங்களையும் போல வரதட்சணையும் பல பரிமாணங்கள் கொண்டதாக மாறியுள்ளது. சீதனம் தருவதற்கு அப்பா எவ்வளவு நகை சேமிக்கிறார் என்பதை பெண்கள் கவனமாகத் தெரிந்து
வைத்திருக்கிறார்கள்.

இன்று கல்வி என்பது powerful negotiation tool. அதுவொரு social status. இந்திய அளவில் பார்த்தால், அடிமைத்தனத்தில் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது. பெண்களிடம்  காணும் இந்த ‘அடிமைத்தன ஒழுங்கு’ சுவாரஸ்யமானது. தனக்கு புருஷனாக வருபவன், தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும், அதிகம் சம்பளம் வாங்கவேண்டும் என்பதை பெண்கள் நிபந்தனையாக வைத்திருக்கிறார்கள். இது ஏன்? வீட்டில் பெற்றோர்களும் இப்படி ஒரு மாப்பிள்ளையைத்  தேடியே அலைகிறார்கள். ‘நான் அதிகம் படிக்கிறேன், கம்மியா படிக்கிறவன் கிடைச்சாலும் எனக்கு ஓகேதான். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று சொல்கிற பெண்கள் குறைவு.

இதேதான் டாக்டர் பெண்ணுக்கு டாக்டர் புருஷன்... ஐடி பையனுக்கு ஐடி பொண்டாட்டி... என்பதும். சாதிப் படிநிலையைப் போல இந்த கல்விப் படிநிலையும் ஒரு முக்கியமான அளவுகோலாக சமூகத்தில் இருக்கிறது. அடுத்தது பொருளாதாரம். மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கு எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் புருஷனைக் கண்டால் கசக்கிறது. நன்றாகப் படித்திருக்கிற டாக்டர், எஞ்சினியர் போன்ற சமூக மதிப்பு கொண்ட பணியில் இருக்கிற அல்லது நன்றாகப் படித்தும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிற பெண்கள் டொமஸ்டிக் வயலன்ஸால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு ஏன் முயல்கின்றனர்..? Victim blaming எனும் கூட்டில் சென்று மறைந்துகொள்ளாமல் வெளிப்படையான மறுபரிசீலனைக்கு நாம் தயாராக வேண்டும்.

ஒருபுறம் ஆணாதிக்க சமூகமாக இருக்கிற இச்சமூகம் அதன் மறுபுறம் ஆணின் மீது ஒரு நுகத்தடியை சுமத்திக்கொண்டே இருக்கிறது. குடும்பச் சுமை என்பது இப்போதும் ஆணின் பொறுப்பாகவே இருக்கிறது. பொறுப்பு என்று வருகிறபோது பெண் என்பவள் secondaryயாகவே கருதப்படுகிறாள். இந்தப் பொறுப்பின் சுமைக்கு மாற்றாக ஓர் ஆண் தனது இணையை சுரண்டுவதற்கும் அவள் மீது வன்முறையைப்  பிரயோகிப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறான். இதன் இன்னொரு பக்கம் இந்த ஆணாதிக்கம் பெண்களுக்கு ஒரு ஆசுவாசத்தை வழங்குகிறது. குறைந்தபட்ச அடிமைத்தனத்தைக் காட்டிவிட்டால், அவளது பொறுப்புகளில் இருந்து அவளை அது விடுவித்து விடுகிறது. இதைத் தந்திரமாக manipulate  செய்யும் பெண்கள் இந்த வன்முறையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

பல நேரங்களில் டொமஸ்டிக் வன்முறையில் நேரடியாக ஈடுபடுபவர்களாகவும்  அவர்கள் இருக்கிறார்கள். அல்லது மறைமுகமாக தனது பங்களிப்பை வன்முறைக்கு செலுத்துகிறார்கள். எந்த குடும்ப வன்முறையும் ஒற்றைத் தன்மை கொண்டதாக இல்லை. அதன் வேர்கள் எல்லா இடங்களிலும் நீள்கின்றன.தனி மனித உறவுகள் எப்போதும் வியாபார நுணுக்கத்தின் எல்லா சாயல்களும் கொண்டவை. எந்த சுதந்திரமும் அதற்கான பொறுப்பையும் கோருபவையே. ஒரு குடும்ப வன்முறை நடந்துவிட்டால், எத்தனை படித்தவள் என்றாலும், கண்ணைக் கசக்கிக்கொண்டு பெற்றோரின் காலடியில்தான் தஞ்சமடைவாள் என்றால், நமது குழந்தை வளர்ப்பு முறையில் மிகப்பெரிய கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

குரல் எழுப்பும் மோகன் லால்

இப்போது கேரளாவில் உள்ள பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரதட்சணைக் கொடுமைகளைக் கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும், குரல்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர். ‘வரதட்சணை கொடுக்க மாட்டோம்’ என்று பெண்களும் புகைப்படங்களை வெளியிட்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு’ என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆராட்டு’ படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு ‘வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

நிரஞ்சனா