கோவிட் தொற்றைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்!
நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதையும், வலிப்பு நோய் வருவதை முன்கூட்டியே உணர்த்தவும், சிலவிதமான புற்றுநோய்களைக் கண்டுபிடிக்கவும் பயன்பட்ட மோப்ப நாய்கள் இப்போது கோவிட் தொற்றையும் கண்டுபிடிக்கின்றன. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களைக் கண்டறியும் ஈரல் செயல் சோதனைகளை விடவும் (LFTs) துல்லியமான முடிவுகளை மோப்ப நாய்கள் தருகின்றன.
பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் 2020ம் ஆண்டின் முற்பகுதியில் கொரோனா நோயாளிகள் என்று சந்தேகத்துக்குள்ளானவர்களின் எச்சில், சிறுநீர் ஆகிய வற்றில் இருக்கும் சார்ஸ் கோவி - 2 கொரோனா வைரஸின் தொற்றைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்குப் பயிற்சியளித்தனர். அவை நோயுற்ற மனிதர்களையும் நோய் தாக்காதவர்களையும் 96 சதவீதம் வரை துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டன. இதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டின் பிற்பகுதியில் நோயாளிகளின் வியர்வையை மோப்பம் பிடித்துக் கண்டுபிடிக்க பயிற்சி கொடுத்தார்கள்.
இதேபோன்ற ஆய்வுகள் 2021ம் வருடத்தின் துவக்கத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. துபாய், ஹெல்சிங்கி பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வருகைதரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க சென்ற வருட இறுதி முதலே மோப்ப நாய்கள் உதவ ஆரம்பித்தன. அடுத்த கட்டமாக கோவிட் - 19 திரிபுருக்களையும் நாய்களால் உணர்ந்தறிய முடியுமா என்ற ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
காம்ஸ் பாப்பா
|