இத்தனை பாடல்களைப் பாடிய பாடகி இவர்தானா?



ஒரு ரூபாய் நாணய அளவிற்கு பொட்டு, வாய் நிறைய வெற்றிலைச் சாறு என நிறைய திரைப்படங்களில் இவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ‘மிடில் கிளாஸ் மாதவன்’ படத்தில் வடிவேலுவின் தாயாராக நடித்தவர். பகலில் பாசக்கார மகனாக இருக்கும்  வடிவேலு, ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை...’ என சூடம் ஏற்றி வழிபடுவார்.
‘மகாலட்சுமி மாதிரி இருக்கும் மாதாவே, என்னை வழியனுப்பி வை’ என காலில் விழுந்து ஆசி வாங்கிச் செல்வார்.  மாலை 6 மணிக்கு மேல் குடிபோதை தலைக்கேறி தாய், தந்தையை அடிக்க வருவார். ‘காலையில் மகாலட்சுமி என்று கூறினாயே...’ என தாய் கேட்க, ‘அது வேறவாய் இது நாற வாய்...’ என்று போதையில் வடிவேலு ரகளை செய்வார்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்தக் காட்சியில் வடிவேலுவின் தாயாராக நடித்தவர் பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி.ஏ.பி.நாகராஜன் நடத்திய ‘பாலமுருகன் பாய்ஸ்’ கம்பெனியில் 5 வயதில் நடிக்கத் துவங்கிய சண்முகசுந்தரி,  சாகும் வரை நடித்துக் கொண்டேயிருந்தார்.  சுமார்  750 படங்களில் நடித்துள்ள சண்முகசுந்தரிக்கு, எம்ஜிஆரின் படங்களில் நிரந்தர இடமிருந்தது.

‘நீரும் நெருப்பும்’ படத்தில் எம்ஜிஆரின் வளர்ப்புத் தாயாக நடித்திருந்தார். ‘கண்ணன் என் காதலன்’, ‘என் அண்ணன்’, ‘இதயக்கனி’, ‘அடிமைப்பெண்’, ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘நவரத்தினம்’  என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பழைய படங்களில் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட சண்முகசுந்தரி, 1990 காலக்கட்டங்களில் வெளியான படங்களில் தனது  நகைச்சுவை  நடிப்பால் மிளிர்ந்தார்.

பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘நெத்தியடி’ என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தில் அவரது பாட்டியாக சண்முகசுந்தரி நடித்திருந்தார். ஜனகராஜுடன் அவர் செய்யும் அலப்பறை வயிற்றை பதம் பார்த்து விடும்.நகைச்சுவை மற்றும் குடும்பக் கதைகளால் மிளிர்ந்த இயக்குநர் வி.சேகரின் படங்களில் சண்முகசுந்தரிக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. ‘நான் புடிச்ச மாப்பிள்ள’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’ போன்ற பட காமெடி காட்சிகளில் அவர் தனித்து தெரிந்தார்.

‘போய் வா நதி அலையே...’, ‘வாரேன் வழி பார்த்திருந்தேன்...’, ‘ஆடிப்பாரு மங்காத்தா...’ என்று பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடிய டி.கே.கலா, சண்முகசுந்தரியின் ஐந்து மகள்களில் ஒருவர்.
சண்முகசுந்தரியை அனைவருக்கும் நடிகையாகத்தான் தெரியும். ஆனால், அவர் மிகச்சிறந்த பாடகி. வயதானாலும் அவர் குரல் வளம் போற்றும்படியாகவே இருந்தது. ‘நான் புடிச்ச மாப்பிள்ள’ படத்தில் ‘சபரிமலையில் வண்ண சந்திரோதயம்... தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்...’ என்ற கர்நாடக சங்கீதப்பாடலை அசால்ட்டாக பாடியிருப்பார் கலைமாமணி சண்முகசுந்தரி.
1969ம் ஆண்டு கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி நடிப்பில் வெளியான ‘காவல் தெய்வம்’ படத்தில் குலதெய்வம் ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன், ஆண்டாள் ஆகியோருடன் இணைந்து அற்புதமான வில்லுப்பாட்டு பாடியிருப்பார்.

‘அய்யன் என்போம் அப்பன் என்போம்...’ என்ற அந்த பாடல் காட்சியிலும் தோன்றியிருப்பார். பல படங்களில் காட்சிகளில் பாடிக்கொண்டிருந்த சண்முகசுந்தரியின் குரலில் இருக்கும் தனித்தன்மை இசைஞானி இசையராஜாவிற்கு பிடித்துப்போனது. அவரது படங்களில் தொடர்ந்து பாடுவதற்கு சண்முகசுந்தரிக்கு வாய்ப்பு வழங்கினார்.
1994ம் ஆண்டு முரளி, நாசர், ரஞ்சிதா நடிப்பில் வெளியான ‘அதர்மம்’ படத்தில் -

நூறு வயசு வாழ வேணும் என் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி என் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட என் மகராசா
தர்மம் வாழ காவல் நிக்கும் என் மகராசா

- என்ற பாடலை அற்புதமாக சண்முகசுந்தரி பாடியுள்ளார். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். இந்தப் படத்தில் சித்ராவுடன் இணைந்து ‘வம்புக்கார பாட்டி பாட்டி ஆடுது உன் தண்டட்டி...’ பாடலையும் சண்முகசுந்தரி பாடியுள்ளார்.1994ம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக், சுகன்யா நடிப்பில் வெளியான ‘சீமான்’ படத்தில் இளையராஜா இசையில் சண்முகசுந்தரி, வெங்கட்ராமனுடன் இணைந்து ‘என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்... கன்னமோ செவந்திருக்கு கண்டுபுடி அவசியம்...’ என்ற பாடலைப் பாடியுள்ளார்.1996ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பிரபு, ரோஜா நடிப்பில் வெளியான ‘பரம்பரை’ படத்தின் டைட்டில் பாடலான ‘பரம்பரை... நல்ல பரம்பரை...’ பாடலை கோபால்சர்மாவுடன் இணைந்து மிக அற்புதமாக பாடியுள்ளார் சண்முகசுந்தரி.

1994ம் ஆண்டு சந்தானபாரதி இயக்கி சிறந்த படம், சிறந்த ஒலியமைப்பிற்கான தேசிய விருதும், சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசு விருதும் பெற்ற ‘மகா
நதி’ படத்தில் கமல்ஹாசனுடண் இணைந்து சண்முகசுந்தரி பாடியுள்ளார். இளையராஜா இசையில்  சண்முகசுந்தரி பாடிய இந்த பாடல் புகழ் பெற்றது.
பேய்கள நம்பாத பிஞ்சில வெம்பாத
நீ யோசி டோய்
நாளொரு பொய் வார்த்தை
சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி
- என கமல் பாடுவார். இந்த பாடலில் நடிகை எஸ்.என்.பார்வதிக்கு சண்முகசுந்தரி ‘ஏச்சுப்புட்டாளே பாட்டி ஏச்சுப்புட்டாளே பேய் போயாச்சு  பாட்டி வந்தாளே...’  என குதூகலமாய் பாடுவார்.

1995ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘புள்ளக்குட்டிக்காரன்’ படத்தில் சுரேஷ்பீட்டருடன் இணைந்து ராப் பாடலை சண்முகசுந்தரி பாடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

தேவா இசையில்  ‘புள்ளக்குட்டிக்காரனே போஜ மகாராஜனே...’ என சண்முகசுந்தரியின் குரலில் துவங்கும் இந்தப் பாடலில் ‘டெய்லி டெய்லி தீபாவளி கொண்டாடுங்க ஹோ...’ என்று சுரேஷ் பீட்டர் பின்னி எடுத்திருப்பார்.1997ம் ஆண்டு ஆர்.சந்திரா இயக்கத்தில், முரளி, சுவாதி நடிப்பில் வெளியான படம் ‘கண்டக்டர் மாப்பிள்ளை’. இப்படத்தில் சௌந்தர்யன் இசையில் டி.எல்.மகாராஜனுடன்  இணைந்து சண்முகசுந்தரி பாடலைப் பாடியுள்ளார். அற்புதமான கிராமத்து கீதம் இது.

காடு நல்ல கரும்புக்காடு
புள்ள கச்சிதமாக உள்ள காடு
அந்த காட்டு புதருக்குள்ளே
நானும் என் பொஞ்சாதியும்
புல் அறுத்தோம்...

- இந்த பாடலை டி.எல்.மகாராஜன், சண்முகசுந்தரியுடன் இணைந்து பாடியவர் இயக்குநர் மணிவண்ணன்.

2001ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், சுவலட்சுமி நடிப்பில் வெளியான படம் ‘ஆண்டான் அடிமை’. இசைஞானி இசையில் ஒரு துள்ளல் பாடலை சண்முகசுந்தரி பாடியுள்ளார். அவருடன் இணைந்து பாடியவர் மதுபாலகிருஷ்ணன்.

நம்மவா தப்பு பண்ணினா
பாரதி வந்து பாட்டு கட்டி தலையில் கொட்டினான்
அடுத்தவா தப்பு பண்ணினா  
இன்னிக்கொருத்தன் இங்கிருந்து பொளந்து கட்டுறான்...
- இந்தப் பாடலை எழுதியவர் காவியக் கவிஞர் வாலி.

2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘பிதா
மகன்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரமிற்கு பெற்றுத் தந்த படம். அத்துடன் 6 ‘ஃபிலிம்பேர்’ விருதுகளையும் தட்டிச் சென்றது. இசைஞானி இசையில் இப்படத்தில் -

கொடி ஏத்தி வைப்போம் ஏத்தி வைப்போம்
அம்மன் கோயிலிலே
சுமை மாத்தி வைப்போம் மாத்தி வைப்போம்
அம்மன் கால்களிலே....

- என்ற அற்புதமான பாடலை பவதாரணி, ஹரிஸ் ராகவேந்தர், பெரியகருப்ப தேவருடன் இணைந்து சண்முகசுந்தரி பாடியுள்ளார்.  

பக்திப் பாடலுக்குரிய சங்கதி தானே என நினைத்துக் கொண்டிருக்கும் போது பவதாரணியின்  வரிகள்,  சட்டென ஒரு மலரும் அற்புத தருணத்தை உணர வைத்து விடும்.
சண்முகசுந்தரி நாடக மேடையில் இருந்து வந்தவர் என்பதால்  திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களான ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ‘அகல்யா’ உள்பட பல சீரியல்களில் தன் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.தமிழ்த் திரைப்படங்களில் சண்முகசுந்தரி இத்தனை பாடல்களைப்  பாடியுள்ளாரா என்று ஆச்சரியமாய் இருக்கும். அதற்குக் காரணம் இசைத்தளங்களிலும் சில ஒலி நாடாக்களிலும் சண்முகசுந்தரியின் பெயர் குழுவினர் என பதிவாகியுள்ளதுதான். எவ்வளவு பெரிய சோகம் இது!

ப.கவிதா குமார்