என்னை ரஜினிகாந்த் மாதிரி காட்ட முடியுமா என பிரதமர் மோடி கேட்டார்!



ரகசியத்தை உடைக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்

‘‘ப்ளஸ் டூ முடிச்சிட்டு காலேஜ்ல சேர்ந்தேன். முதல் நாள் சீனியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒருத்தரை ரேகிங் பண்ணச் சொன்னாங்க. அவங்க உத்தரவுக்கு இணங்கி பயந்து அந்த நபரை ரேகிங் பண்ணிட்டேன். நான் கேலி கிண்டல் பண்ணது பெரிய பேராசிரியராம். உடனே என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க!வேற என்ன செய்றதுன்னு தெரியாமல் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்துட்டேன். படிச்சு முடித்தவுடனே தூர்தர்ஷனில் வேலையும் வந்தது.

தூர்தர்ஷனா, சினிமாவா என்கிற ஊசலாட்டத்தில் நான் புறப்பட்டுப்போனது மணிவண்ணன் ஷூட்டிங்கிற்கு. எங்க வீட்டில் எல்லோரும் வெறுத்துப்போக, அப்புறம் அவங்க எல்லோரும் சேர்ந்து என்னை ‘முறைமாமன்’ ஷூட்டிங்கில் பார்க்க வந்தாங்க. மகன் சொல்படி கேட்க 100 பேர் இருக்காங்களேன்னு சந்தோஷத்தில் போயிட்டாங்க.

நாம் முறையாக ஓர் இடத்தில் நின்று நிதானிச்சு இருந்து நடந்தால், அடுத்த இடத்திற்கு போறது நிச்சயம். அதற்கு எளிமையான உதாரணம் நான்தான். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் வர்றதுக்கு முன்னாடி கேமிராவைப் பத்தின எந்த புரிதலும் இல்லை என்பதே உண்மை.

அப்புறம் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டேன். சினிமா ஒரு போக்கில் பாடங்களை கொடுத்துக் கொண்டே போகும். அதை நாம் வாங்கி ஒரு பக்கமாக படிச்சுக்கொண்டே  போகணும்...”அனுபவம் மிகுந்து பேசுகிறார் ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார். 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த சாதனையாளர். தொடர்ந்து பயணத்திலும் இருக்கிறார்.

50 படங்களுக்கு மேல்… ஆச்சர்யமான பயோடேட்டா. எப்படி இது சாத்தியமானது?
நான் என்னிக்கும் செலவை இழுத்து விட்டதில்லை. தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும்னா அதில் ரூ.5 லட்சமாவது மிச்சம் பண்ண முடியுமான்னு பார்ப்பேன். அப்படி ஒரு மனசு, செயல்பாடு ஆரம்பத்திலேயே அமைந்து விட்டது. படம் தயாரிப்பது என்பது பெரிய வேலை. ஒரு சினிமாவோட வெற்றியை இன்னிக்குவரைக்கும் யாராலும் கணிக்கவே முடியலை. சினிமாவிலேயே கிடந்து உழல்கிறவர்கள்கூட இதில் இன்னும் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட சினிமாவில் இருக்கும்போது நாம் அணுக்கமாகவும், ஜாக்கிரதையாகவும், விட்டுக் கொடுத்துப் போகிறவராகவும் இருப்பதுதான் நல்லது.
ஒரு படம் தயாரிப்பதற்கான செலவுகள் கூடி வரும் போது நாமும் முடிந்த அளவு குறைப்பதற்கான வழிவகைகளை செய்யணும். மத்தபடி நான் படத்திற்கான தேவைகளை குறைச்சுக்கிறதில்லை.

தமிழ் சினிமா அளவிற்கு களம் வேறு எங்கேயும் கிடையாது. புதிய களம், வித்தியாசமான நடிகர்கள்னு நம்மை எல்லோரும் கவனிக்கிறார்கள். தொழில் நேர்த்தியிலும் நாம் முன்னேறி வந்து விட்டோம்.

சுந்தர்.சி-க்காக மட்டுமே 25 படங்கள் செய்திருக்கிறீர்கள்..?

சுந்தர்.சி நல்ல நண்பன். எங்களுக்குள்ளே 1% ஈகோ கூட கிடையாது. படத்தில் என்ன வேணுமோ அதை தெளிவாக சொல்லிடுவார். எனக்கு இப்படி வேணும்னு கேட்கிறதில் நல்ல கண்டிப்பும் உண்டு. எது வேண்டுமானாலும் மனம் விட்டு நாங்கள் பேசிக்குவோம். குறுக்கே யாரையும் அனுமதிக்கிறது இல்லை. ‘போடா, வாடா’ன்னு பழகுவதால் ஒரு பர்சனல் அட்டாச்மெண்ட் இருக்கும். இரண்டு பேர் நலனிலும் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

நான் என் மனைவி கிட்டேயும், அவர் தன் மனைவி கிட்டேயும் சேர்ந்து இருந்த நேரத்தை விட நாங்க இரண்டு பேரும்தான் அதிகம் சேர்ந்து இருந்திருக்கோம். நான் அதிகம் செய்தது எண்டர்டெயின்மெண்ட் படங்கள். அவை அதிகமும் வெற்றி பெற்றன. அதனால் அப்படிப்பட்ட படங்களுக்கு என்னை அழைத்தார்கள். சுந்தருக்காக இன்னும் படங்கள் செய்வேன். அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். அவரின் நட்பு எனக்கு மேலான ஒன்று. புதிய டைரக் டர்கள்கிட்டே வேலை பார்க்கவும் ெரடியா இருக் கேன்.

சினிமாவிற்கான ஒளிப்பதிவு குறித்து எண்ணமென்ன?

சினிமாவிற்கு எல்லாத்தையும் விட கதை வேணும். அது ஒரு சின்ன இழையாகக் கூட இருக்கலாம். ஆனால், அது ஸ்ட்ராங்கா இருக்கணும். நல்ல ஸ்டோரிக்கு ஒளிப்பதிவெல்லாம் ஊறுகாய், உப்பு, மிளகாய் மாதிரிதான். போட்டோகிராஃபி மட்டும் தான் முக்கியம் என்பது கிடையாது.
நிறையப்படங்களில் போட்டோகிராஃபி பிரமாதமாக இருந்தும் ஓடியதாக வரலாறு இல்லை. சினிமாவுக்கு ஒளிப்பதிவு என்பது added attraction.
பிரதமர் மோடியிடம் பணி புரிந்திருக்கிறீர்கள்...

‘ஹோலோகிராம்’னு ஒரு தொழில்நுட்பத்தில் மோடி அவர்களை படம் பிடித்தேன். அவர் குஜராத்தில் வீட்டிலிருந்து பேசுவார். அது மாநிலத்தின் எல்லா முக்கியமான இடங்களிலும் அவரே நேரடியாக இருந்து பேசுகிற மாதிரி இருக்கும். அதை நான்தான் படம் பிடித்தேன். அவரை பத்து நிமிஷம் ஆடாமல் அசையாமல் நிற்க வைத்து எடுக்க வேண்டியிருந்தது. அவர் ‘ஏன்’ என்று கேட்க, சொன்ன பிறகு அப்படியே நின்றார். ‘என்னை ரஜினிகாந்த் மாதிரி காண்பிக்க முடியுமா’ எனக் கேட்டார். ‘ரஜினிகாந்த் என்ன சார், நீங்க great man’-னு சொன்னேன். என்னை ஹிப்பி எனக் கூப்பிடுவார்.

ஒரு தடவை ராஜமுந்திரியில் இருந்தேன். அப்போது ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்தார். ஓரமாக ஒதுங்கி நின்றேன். எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தவர், ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு நின்று கூப்பிட்டார். நான் மரத்தால் கட்டப்பட்ட தடைகளைக் கடந்து ஓடிப்போய் அவரிடம் சென்றேன். என்னிடம் ‘நலமாய் இருக்கிறாயா, வீட்டில் எல்லோரும் நலமா’ என்று கேட்டுக் கொண்டே போனவர், மேடையில் ஓரமாக உட்கார வைத்தார். பிறகு ஒரு மணி நேர பிரசார பேச்சுக்குப் பிறகு வந்தவர், என்னோடு சிறிது நேரம் பேசிவிட்டு, என்னை பத்திரமாக அவரே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார்.

‘என்ன வேண்டுமானாலும் கேள்’ என அவரது பர்சனல் நம்பர், பிஏ நம்பர் எல்லாம் கொடுத்தார். அவைகளை நான் பயன்படுத்தியதே இல்லை. தேவை என்றால் அவரே அழைப்பார். மேலும் உங்களை அறியலாமா…

குடும்பத்தையும், என்னையும் கவனித்துக் கொள்கிறார் மனைவி விஜயலட்சுமி. அம்மாவும் உடனிருப்பது என் பாக்கியம். இவர்களே என் பணியை தொடர முழு சுதந்திரத்தை அளிக்கிறார்கள். இரட்டையர்கள் ரோஹித், ரித்திக், மகள் கவிநயா என் நாட்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். என் தம்பிகள் செண்பகராஜ், ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

நா.கதிர்வேலன்