காரணமே தெரியாமல் இந்தியச் சிறைகளில் தவிக்கும் 3.78 லட்சம் விசாரணைக் கைதிகள்!



“ஒரு கையெழுத்து போட்டுவிட்டு போய்விடலாம் என்று சொல்லி போலீஸ்காரர் கூப்பிட்டார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். பிறகு நான் வீட்டையே பார்க்கவில்லை..!” இப்படிச் சொல்லியிருப்பவர் ஆணல்ல. பெண்! ஆம். இப்போது அவர் சிறையில் இருக்கிறார்.

இப்படி ஒருவரல்ல... இருவரல்ல... பலர் இந்தியச் சிறைகளில் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே விசாரணைக் கைதிகளாக வலம் வருகிறார்கள் என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.இதில் சோகம் என்ன தெரியுமா..? கைதாகி சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் எதற்காக சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற விவரம் சொல்லப்படுவதில்லை என்பதுதான்.

இதற்கெல்லாம் ஒருபடியாக குற்றம் சுமத்தப்படும் விசாரணைக் கைதிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முன்பாகவே உயிரிழக்கும் துயரங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. சில வழக்குகளில் விசாரணைக் கைதிகள் விசாரணையின்றியே ஆண்டுக் கணக்கில் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
நாட்டின் குற்றவியல் நீதி நடைமுறைகள் புரிந்து கொள்ள முடியாத புதிராகவும் பிரச்னையாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

விசாரணைக் கைதிகள் என்பவர்கள் சட்டப் புத்தகங்களின்படி குற்றவாளிகள் அல்லர்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அதாவது, குற்றம் புரிந்ததாக அளிக்கப்படும் புகார் அல்லது தகவலின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கா? உண்மை வழக்கா? நிரூபிக்கக் கூடியதா? நிரூபிக்க முடியாததா? என்பதெல்லாம் நீதிமன்றத்தின் நீண்ட விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். அதுவரை சம்பந்தப்பட்ட நபர் சிறையில் சந்திக்கும் சித்திரவதைகள் சொல்லில் அடங்காதவை.

குற்றவியல் சட்டப்படி போலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும், யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் போலீசார், சிறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப் பிடித்து சிறையில் தள்ளுவதும் இயல்பாகவே நடக்கிறது.

பொய் வழக்கு, சோடிக்கப்பட்ட வழக்கு என்பதெல்லாம், நீதித்துறையில் இருப்பவர்களுக்குத் தெரியாததல்ல. தேசிய மனித உரிமைகள் ஆணைய கண்காணிப்பகம் வௌியிட்ட ஓர் அறிக்கையில், ‘சிறையில் அடைக்கப்படுவோரிடம் போலீசார், சிறைத்துறையினர் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை’ என்று தெரிவிக்கிறது.

ஒரு விசாரணைக் கைதி மீதான குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதாகக் கூறிக்கொண்டு வழக்கை போலீசார் இழுத்தடிப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைக் காலத்துக்கும் மேலாக சிறையில் வதைபடுகின்றனர். ஆனால், அரசியல் கிரிமினல்கள், சமூகத் தொடர்புள்ளவர்கள், பணபலம் உடையவர்கள் எளிதாக பிணையில் வெளியே வருகின்றனர். அல்லது சிறையிலேயே சொகுசான வசதிகளோடு பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றனர்.

இவையெல்லாம், சாமானிய கைதிகளுக்குக் கிடைப்பதில்லை என்பது ஒருபுறம் இருக்க... பிணையும் கூட கிடைக்காமல் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வாடுகின்றனர் என்பதை என்னவென்று சொல்வது?பொதுவாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், அப்படி நடப்பதில்லை. சில நேரங்களில் போலீசார் தங்கள்மீது போட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று விசாரணைக் கைதிகள் சிறைக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய செய்திகளும் வருகின்றன. கைதாகி சிறையில் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு, பிணையில் வெளியே வரவோ அல்லது அவர்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் நிதிவசதி இல்லாததாலோ, சட்டநடை
முறைகளைத்தாண்டி வெளியே வரமுடியாமல் சிறையில் தவித்து வருகின்றனர்.

இதனால், சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பி வழிவதையும், அதனால் அடிப்படை வசதிகளின்றி நோய்வாய்ப்பட்டு கைதிகள் மரணமடைவதையும் பற்றி 1979ம் ஆண்டில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர்.கன்னா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு சில பரிந்துரைகள் செய்யப்பட்டன.

ஆனால், அவை கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1996ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, விசாரணைக் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய 9 கட்டளைகளைப் பிறப்பித்தனர். அதன்பின்னர் 2005ம் ஆண்டில் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிணை வழங்கும் பகுதியில் 436-ஏ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி ‘குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உள்ள ஒரு விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்கான சிறைத் தண்டனையில் பாதிக் காலத்தை சிறையில் கழித்துவிட்டால் அவரை சொந்தப் பிணையில் விடுதலை செய்யலாம்’ என்று கூறப்பட்டது.

இருப்பினும், இந்தச் சட்டப்பிரிவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘விசாரணைக் கைதிகள் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்றங்கள், தாமே முன்வந்து விசாரித்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் காக்கப்படும்’ என்று மத்திய சட்ட அமைச்சகம் நாட்டின் 24 உயர்நீதிமன்றங்களுக்குக் கடிதம் எழுதியது. என்றாலும், நிறைய சட்டச் சிக்கல்களால் விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது இன்று வரை சவாலாகவே உள்ளது.

பெரும் துயரம் என்ன தெரியுமா..? விசாரணைக் கைதியாக சிறைப்பட்ட பெண்கள், தங்களது குழந்தைகளுடன் சிறைப்பட்டு வதைபடுவது.இந்தக் குழந்தையின் மனநிலையில் இருந்து பார்த்தால், இந்த உலகம் யாருக்கானது என்ற கேள்விதான் எழுகிறது..!        

சிறையில் 1,942 குழந்தைகள்

சமீபத்தில் மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் 1,400 சிறைகளில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 3 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தண்டனைக் கைதிகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 பேரும், விசாரணைக் கைதிகளாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 பேரும், பிறவகை கைதிகளாக 3,089 பேரும் உள்ளனர்.

மொத்தமுள்ள கைதிகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 67.7% ஆக உள்ளது. இதுதவிர 1,649 பெண் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் எவ்வித குற்றமும் செய்யாத 1,942 குழந்தைகளும் சிறையில் வாடுகின்றனர்.கடந்த 2014ம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 879 பேராக இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை, கடந்த 2016ம் ஆண்டில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணைக் கைதிகளில் உத்தரப்பிரதேசத்தில் 23.4% பேர்; பீகாரில் 9.5%; மகாராஷ்டிராவில் 7.7% பேரும் உள்ளனர். இது தவிர 6,370 வெளிநாட்டினரும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் தண்டனைக் கைதிகளாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 517 பேர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2016ல் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

67% பேர் விசாரணைக்  கைதிகள்

சிறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில், நீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 4.19 லட்சம் பேரை அடைக்க முடியும். இவர்களில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் மட்டும் 3.78 லட்சம் பேர் (கிட்டத்தட்ட 67%). இவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விசாரணைக் கைதிகள் ஆய்வுக்குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.

வரும் 2019ம் ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு மாதமும் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் முழுத் தகவல்களையும் சேகரித்து அந்தந்த மாநிலங்களில் இயங்கி வரும் சட்ட சேவை மையங்களின் மூலம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னர், மாவட்ட வாரியாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை ஆய்வுக்குழு மூலமாகக் கணக்கெடுத்து, அவர்கள் சார்ந்துள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், அவர்கள் விடுதலை செய்யத் தகுதியானவர்களா அல்லது பிணையில் விடுவிக்கத்தகுதியானவர்களா அல்லது மன்னிப்பு வழங்கத் தகுதியானவர்களா என்பதையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டிலுள்ள 1,382 சிறைச்சாலைகள் மனிதர்கள் இருக்க தகுதியற்றவையாக அறியப்பட்டுள்ளன. இவற்றையும் சரி செய்து, அங்குள்ள விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையின் வழக்குகளையும் துரிதப்படுத்த வேண்டும். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள பல சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஆணையமும், ஆய்வுக்குழுவும் ஈடுபட வேண்டும். - இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.அமிர்தலிங்கம்